அஞ்சலி: மக்கள் கலைஞன் கே.ஏ.குணசேகரன்
---------------------------------------------------------------
---------------------------------------------------------------
இன்றும் மனசெங்கும் ரீங்கரிக்கும் உனது பாடல்கள்...
-------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------
அப்போதுதான் நான் முழுமையாகப் பொதுவாழ்வில் ஈடுபாடுகாட்டத் தொடங்கியிருந்தேன். திருப்பரங்குன்றம் எனக்கும், என்னைப் போன்ற பல தோழர்களுக்கும் பொதுவாழ்க்கைத் தொட்டிலாக விளங்கியது. முற்போக்குக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட எங்களின் செயல்பாடு களுக்கு ஒரு உந்து சக்தியாக முற்போக்குப் பாடல்கள் இருந்தன. பாரதியின் பாடல்கள், பாவேந்தர் பாடல்கள், பட்டுக்கோட்டையார் பாடல்கள் என எங்களை உத்வேகம் கொள்ளச்செய்த பாடல்களின் வரிசையில் தனித்துவமாக எங்களை ஈர்த்தவை அருமைத் தோழர் கே.ஏ.குணசேகரனின் பாடல்கள்.
"என்னம்மா தேவி ஜக்கம்மா உலகம் தலைகீழாகச் சுத்துதே நியாமா?"
"அம்மா... பாவாடை சட்டை கிழிஞ்சு போச்சுதே - என்னைப்
பள்ளிக்கூடப் பிள்ளையெல்லாம் கேலி பேசுதே..."
பள்ளிக்கூடப் பிள்ளையெல்லாம் கேலி பேசுதே..."
"மனுசங்கடா நாங்க மனுசங்கடா
உன்னைப்போல அவனைப்போல
எட்டுசாணு உசரமுள்ள மனுசங்கடா..."
உன்னைப்போல அவனைப்போல
எட்டுசாணு உசரமுள்ள மனுசங்கடா..."
- என்றெல்லாம் அவரின் கம்பீரக் குரல்வழி எங்களை வந்தடைந்த பாடல்கள் எங்களை மேலும் மேலும் சமூக மனிதர்களாக்கின. எங்களின் உள்ளங்களையெல்லாம் உழுதுபோட்ட அந்தக் குரல்க் கலைஞன் யாரென அறிந்துகொள்ளும் ஆர்வம் எனக்கு அதிகரித்தது. அவர்தான் நாட்டுப்புறவியல் முனைவர் கே.ஏ. குணசேகரன் என அறிந்து அவரை நேசிக்கத் தொடங்கியபோதோ அவர் எங்களின் இயக்கத்தோடான தனது நேரடித் தொடர்பைத் துண்டித்துக் கொண்டிருந்தார்.
அப்போது எழுந்து வந்துகொண்டிருந்த தலித் இயக்கத்தோடு தன்னை இணைத்துக்கொண்ட அவரின்மீதான மரியாதையும், ஈர்ப்பும் இன்றுவரையில் என்னுள்ளில் குறையவில்லை என்பதே உண்மை.
புதுச்சேரி பல்கலைக்கழக நாடகத்துறை பேராசிரியராக, நாட்டுப்புற பாடல்கள் மற்றும் நடனங்களை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்று, தமிழ் நவீன நாடக உலகில் நடிகராகவும் இயக்குனராகவும் புகழ்பெற்றவர் அவர். சத்திய சோதனை, பவளக்கொடி, பலியாடுகள் உள்ளிட்ட நாடகங்கள் பலவற்றை எழுதியிருக்கிறார்.
நாட்டுப்புற இசைக்கு ஏற்பையும் மதிப்பையும் உருவாக்கியவர். தற்போது புகழ்பெற்று விளங்கும் சின்னப்பொண்ணு உள்ளிட்ட இசைக் கலைஞர்கள் பலரும் அவரால் பயிற்றுவிக்கப்பட்டவர்கள்.
அவரைக் கண்டுபிடித்துத் தமிழுலகிற்கு அறிமுகம் செய்துவைத்த எங்கள் ஆசான் எஸ்.ஏ.பெருமாள்தான் அவர் பாடிய "ஆக்காட்டி ஆக்காட்டி" பாடலில் இறுதியில் நம்பிக்கைதொனிக்கும் வரிகளை இணைக்கக் காரணமாகவும் இருந்தார். சேரிப்புறவியல், தலித் அரங்கியல் முதலான அவரது நூல்கள் மூலமாக தலித்தியக் கோட்பாட்டிற்குப் பங்களிப்பு செய்தார் கே.ஏ.ஜி. அவரது "வடு" தான் தமிழின் முதல் தலித் சுயசரிதை நூல். அது ஆங்கிலத்தில் "scare" எனும்பெயரில் வந்துள்ளது. பாரதி, அழகி உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் அவர் முகம் காட்டியிருக்கிறார். அந்த அற்புதக் கலைஞனை திரைத்துறை போதுமான அங்கீகாரமும், மரியாதையும் தந்து பயன்படுத்திக் கொள்ளவில்லையே எனும் ஆதங்கம் எனக்குண்டு.
தலித் மக்களின் உரிமைக்காகவும், தமிழின் நாட்டார் கலைக்காகவும், மார்க்சியப் புரிதலோடு இயங்கிவந்த ஒரு அற்புதக் கலைஞன் கே.ஏ.குணசேகரன் இன்று புதுச்சேரியில் காலமானார் எனும் செய்தி மனத்தைக் கனக்கச் செய்கிறது. அவரின் பாடல்கள் உள்ளமெங்கும் ரீங்கரிக்கின்றன... அவருக்கான அஞ்சலியை, வீரவணக்கமாக இசைத்தவண்ணம்.
----------------------- சோழ. நாகராஜன். (பேச: 91 98425 93924.
----------------------- சோழ. நாகராஜன். (பேச: 91 98425 93924.
No comments:
Post a Comment