Saturday, 23 January 2016

என் குழந்தைகளுக்கு அவர் மாமா. எனக்கு இனிய தோழர்....

காலையில் அந்தத் துயரச் செய்தி..
தேம்பி அழுதவண்ணம் என் இளைய மகள் பாரதி. "குணசேகரன் மாமா செத்துபோயிட்டாருப்பா...." எனச் சொன்னபோது துடித்துப் போனேன்.
எத்தனை ஆண்டுப் பழக்கம்... ஒரு ஆய்வு மாணவனாய் முற்போக்கு எழுத்தாளர் சங்கக் கூட்டம் ஒன்றில் 70 களின் பிற்பகுதியில் சந்தித்தது.
என் 12/28 அம்மாலயம் சந்து (தஞ்சாவூர்) வீட்டில் அவர் தங்கி தன் ஆய்வேட்டை எழுதி முடித்தது...
அவருக்குப் பெண் பார்க்க நானும் மனைவியும் போனது..
தடைகளை மீறி அவர் தன் திருமணத்திற்கு வாழ்த்துரைக்க என்னை அழைத்தது...
எனது இரு மகள்களும் மிக அருமையாகப் பாடக்கூடியவர்கள் என்பதால் அவருடனும் சின்னப்பொண்ணு முதலிய அவர்களின் குழுவுடனும் தமிழக மெங்கும் இயக்கம் சார்ந்த இசை நிகழ்ச்சிகளில் பாடித் திரிந்தது....
பிற்காலத்தில் என் இளைய மகள் அவரிடமே முனைவர் ஆய்வுக்குச் சேர்ந்தது..
என் குழந்தைகளுக்கு அவர் மாமா. எனக்கு இனிய தோழர்....
**************************************************************************************
நட்டுப்புற இசையை தமிழகமெங்கும் கொண்டு சென்றவர்களில் முதன்மையானவர் கே ஏ ஜி. இன்குலாப்பின் "மனுசங்கடா.... நாங்க மனுசங்கடா.." பாடலை ஊரெங்கும் ஏன் உலகெங்கும் பரப்பியவர் அவர்.
என்னோடு அறையில் அமர்ந்திருப்பார். அப்போது அவர் அவ்வளவு அறிமுகம் ஆகியிராத காலம். யாராவது வருவார்கள். அறிமுகம் செய்து வைப்பேன். "ரொ......ம்ப நல்லா பாடுவார்" என்பேன். ஒரு பாட்டுப் பாடுங்க குணசேகரன் என்பேன். அடுத்த கணம் எந்தத் தயக்கமும் இல்லாமல் "வேளாரந்தக் காட்டுக்குள்ளே......." என இசை மழை பொழியும்.
அவரது சின்ன வயது வறுமையையும் ஊரின் சாதிக் கொடுமையையும் அவர் ஒரு குழந்தையைப்போலச் சொல்வார். பாண்டிச்சேரியில் அவரைச் சந்திக்கப் போகும்போதெல்லாம் ஏதேனும் ஒரு 'பாரில்' சில மணி நேரங்களைக் கழிப்புது வழக்கம். அப்போது தவறாமல் அவர் நினைவு கூறும் அந்தச் சம்பவம்.... நினைவில் வந்து நெஞ்சைஅலைக்கழிக்கிறது...
என் அன்பு குணசேகரன்... கடைசிச் சில ஆண்டுகளில் நம்மிடையே தொடர்புகள் குறைந்து போனபோதும்... தாள இயலவில்லை இந்தப் பிரிவு.....
ஏதேதோ நினைவுகள்....
நீங்கள் ஊட்டியிலிருந்து எனக்கு வாங்கி வந்த அந்த கருப்பு நாய்க்குட்டி...
இளையராஜா உங்கள் மீது வழக்குத் தொடர்ந்தபோது நீங்கள் அடைந்த வேதனை...
உங்களின் இசைத்தட்டு ஒன்றில் நான் முகப்புரை வழங்கிப் பேசியது, உங்கள் நூலொன்றுக்கு நான் முன்னுரை எழுதியது, எங்கிருந்த போதும் எத்தனை உயரத்திற்குச் சென்ற போதும் என்னைக் கண்ட இடத்தில் ஓடி வந்து என் கைகளைப் பற்றிக் கொள்ளும் உங்கள் அன்பு.....
கண்ணீருடன் விடை சொல்கிறேன்

மாக்ஸ் அன்தனிசாமி

No comments:

Post a Comment