Saturday, 23 January 2016

பேச்சும் பாட்டும் கலந்தவர்

பேச்சும் பாட்டும் கலந்தவர்
மரபிசைக் கலைஞர் கே.ஏ.குணசேகரன் தனிமையை விரும்பாதவர், ஆனால் தன்னைத் தனித்து வைத்துக் கொள்ளும் விருப்பம் கொண்டவர். 1988 முதல் 2002 வரை அவருடன் தினம் பேசிக்கொண்டிருந்திருக்கிறேன், ஊரில் இல்லாத போது தொலை பேசியில். பேச்சு அவருக்கு மிகப்பிடித்தமானது. பாடுவது அவரை வேறொருவராக மாற்றிவிடும். அவருடன் எத்தனைப் பயணங்கள், எத்தனை நிகழ்ச்சிகள் , எத்தனை மணி நேர உரையாடல்கள். அவருடன் பயணித்த காலங்களில் நான் சந்தித்து உரையாடிய கலைஞர்கள் சில நூறு பேர் இருப்பார்கள்.
புதுவைப் பல்கலைக்கழக நிகழ்கலைப் பள்ளியின் துறைத் தலைமையை அவர் எற்ற போது என்னிடம் சொன்னார், “நீங்கள் என்னுடன் இருக்க வேண்டும்.” தன்னுடைய அறையில் வலப்பக்க இறுக்கை ஒன்றை எனக்காக வைத்திருந்தார். அதில் மற்றவர்கள் உட்காருவதை அவர் விரும்புவதில்லை. அவருடைய பகல் உணவுக் கிண்ணங்கள் எனக்கானதுமாக இருந்திருக்கிறது ஒரு எட்டு ஆண்டுகள். பசிக்காத போதும் கொஞ்சம் சாப்பிடுங்கள் என்பது அவர் வழக்கம்.
அனைத்தைப் பற்றியும் அனைவரைப் பற்றியும் அவர் மெல்ல பேசிக் கொண்டே இருப்பார். “நேத்து மதுரையிலிருந்த போது தோன்றியது, அத உங்களிடம் தான் முதல்ல சொல்லனும்னு நெனைச்சேன்.” என்பதான பேச்சின் தொடர்ச்சிகள். அவர்
தன் வாழ்வைப் பற்றி சிறுகச் சிறுக என்னிடம் சொல்லிக் கொண்டிருப்பார். உங்கள் வரிகளில் என் வாழ்க்கைக் கதை அமைந்தால் எப்படி இருக்கும் என்பார். நான் சொல்லியிருக்கிறேன், “உங்கள் வரிகளில் அதைப் படித்த பின் அதன் வாசிப்பைத்தான் நான் எழுதுவேன். நீங்கள் முதலில் எழுதிவிடுங்கள்.” அவர் அதை என்னிடம் சொல்வது போலவே எழுதினார். ஆனால் நான்தான் அதன் வாசிப்பை எழுதவில்லை.
பேச்சு மாறும்படி காலம் நம்மைக் கலைத்துப் போடுகிறது. காலம் மிகக் கடுமையானது, யாரையும் யாரிடமிருந்தும் பிரித்து தொலைவில் வீசிவிடுகிறது. நான் எழுத்தும் கோட்பாடுமாக
இயங்காதவனாக இருந்திருந்தால் அவருடைய கலைக்குழுவுடன் பயணிக்கும் ஒரு நாடகக் கலைஞனாகவே இப்போதும் இருந்திருப்பேன். அவரைச் சந்தித்து 13 ஆண்டுகள் கடந்து விட்டன. அதற்கு முன் அவருடனான 13 ஆண்டு காலப் பேச்சும் பாட்டும். யாருக்கும் நேரக்கூடிய இழப்பு, ஆனால் இத்தனை நெடிய நினைவுகளை விட்டுச் செல்வதில்லை.

பிரேம் பிரேம்

No comments:

Post a Comment