Saturday, 23 January 2016

மண்ணின் மைந்தன் , மக்கள் கலைஞன்

மண்ணின் மைந்தன் , மக்கள் கலைஞன், டாக்டர்.கே.ஏ.குணசேகரனின் பிரிவுச் செய்தியை புதுவைப் பேரா.பா.ரவிக்குமார் சொல்லக் கேட்டு அதிர்ந்தேன்.. 1983இல் 25 வயது இளம் ஆராய்ச்சி மாணவராக எனக்கு கவிஞர் மீராவினால் அறிமுகம் செய்யப்பட்ட குணசேகரன் இப்படி பாதியில் நம்மைப் பிரிவார் என நான் நினைத்துக் கூடப் பார்த்ததில்லை.அவர் உடல்நலன் குன்றியிருந்தது பற்றி நிறப்பிரிகை ரவிக்குமார் சொன்னபோதுதான் தெரிந்து கொண்டேன். நான் மும்பையிலிருந்து சிவகங்கை வந்த புதிதில் இளையான்குடி கல்லூரிக் கவியரங்கத்தில் என் தலைமையில் கந்தர்வன், குணசேகரன் ஆகியோர் கவிதை வாசித்தார்கள்.அப்போது தனக்கு ஆராய்ச்சி வழிகாட்டியாயிருந்த ஒரு பேராசிரியர் இவரது ஆராய்ச்சியைத் திருடி தான் டாகடர் பட்டம் வாங்கி விட்டதாக என்னிடம் சொல்லி வருத்தப் பட்டார். காவடி பற்றிய இவரது ஆராய்ச்சியை உடனே புத்தகமாகப் போட்டு விடுங்கள் என்று நான் சொன்னேன். பிறகு மீராவும் அதை புத்தகமாக்கினார் என்று நினைவு. இப்படி தொடக்கமே அவருக்கு போராட்டமாகத்தான் இருந்தது.ஆனால் அதன் பிறகு ஒரு முறை முற்போக்கு எழுத்தாளர் சங்கக் கூட்டம் ஒன்றில் இன்குலாபின் “மனுசங்கடா” பாட்டை இவர் பாடக் கேட்டு மிரண்டு போனேன். தமிழ் மண்ணுக்கே உரிய ஒழுங்கு செய்யப்படாத ஒரு மூல சக்தி அவரது மூச்சிலும் குரலிலும் இருந்தது. நாட்டார் இசைக்கும், நாடகத்துக்கும், தலித் இலக்கியத்துக்கும் என முத்தமிழுக்கும் பங்களித்த குணசேகரனை முற்போக்கு கலை இலக்கிய பெருமன்றம் வளர்த்தெடுத்தது. நான் போபாலிலுள்ள IGRMS MUSEUM OF MANKINDக்காக “வேரும் விழுதும்” எனும் தற்காலத் தமிழ்ப் பண்பாடு குறித்த இருநாள் கருத்தரங்கை ஒழுங்கு செய்தபோது அவர் எனக்கு துணை நின்றதை மறக்கவியலாது. தமிழ்ப் பண்பாட்டுக்கு பங்களிக்கும் சக்திகள் ஏன் இப்படி தங்கள் உடல்நலன் பேணாமல் போகிறார்கள் என்று மனம் கோபித்துக் கொள்கிறது. தமிழறிஞர்களே !! உங்கள் உடல்நலன் பேணுங்கள் உடல் ஆரோக்கியம் குறித்து அக்கறை எடுத்துக் கொள்வது கூட தமிழ்த் தொண்டுதான் என்று புரிந்து கொள்ளுங்கள்

இந்திரன் ராஜேந்திரன்

No comments:

Post a Comment