Saturday, 23 January 2016

எங்கள் தோழனுக்கு இசை வணக்கம்.

இன்று கலை இலக்கிய இரவுகளுக்கு கூடும் கூட்டத்தைக்கண்டு நாம் வியந்துபோகிறோம்.ஆனால் திருவண்ணாமலையில் 1980 களின் துவக்கத்தில் இந்த கலை இலக்கிய இரவுகளை " கவிராத்திரி " என்ற பெயரில் நாங்கள் துவக்கியபோது அதற்கு வந்த கூட்டத்தின் எண்ணிக்கை ஐம்பதுக்கும் குறைவுதான்.அவர்களில் ஆகபெரும்பாலோர் அந்நிகழ்வில் கவிதை வாசிக்க வந்தவர்கள்தான்.
1982 டிசம்பரில் இலக்கிய இரவு என்றபெயரில் த மு எ ச வின் மாவட்ட மாநாடோடு இணைத்து காந்திசிலை எதிரில் இப்போதும் இருக்கும் வன்னியர் மடத்தில் நடத்தினோம்.அந்த நிகழ்வில் பாட்டுப்பாட கே.ஏ.குண்சேகரனை அழைத்திருந்தோம்.அன்று காலை மண்டபத்தில் ஏற்பாடுகளை செய்வதற்காக போனபோது மேளதாளங்களுடன் ஒரு பத்துபேர் தூங்கிக்கொண்டிருந்தனர்.அதில் குணசேகரனும் ஒருவர்.எழுப்பி விசாரித்தபோது நள்ளிரவில் வந்ததாகவும் இடத்தை விசாரித்துக்கொண்டு வந்து படுத்துட்டேன் தோழர் என்றார்.அருகிலிருந்தவர்களைக்காட்டி இவர்களெல்லாம் யாருங்க என்றோம்.சிரித்துக்கொண்டே நம்ம குழு தோழர்கள்தான் என்றார்.எங்களுக்கோ திகீர் என ஆனது.
பாட்டுப்பாட இவர் ஒருவரைத்தானே அழைத்தோம்..இவர் ஒரு பட்டாளத்தோடு வந்துவிட்டாரே...எப்பிடி பயணப்படி கொடுத்து சமாளிப்பது என குழம்பத்தொடங்கிவிட்டோம்.
அதுக்காக நிகழ்வை நிறுத்தமுடியுமா...வந்தவர்களை திருப்பியனுப்பமுடியுமா...ஒருத்தர் பாடினால் போதும்னு சொல்லத்தான் முடியுமா...சரி..நடப்பது நடக்கட்டும் என..மாநாட்டை முடித்து...மாலையில் இலக்கிய இரவை துவக்கினோம்.சம்பிரதாய பேச்சுக்கள் முடிந்து குண்சேகரன் மைக்கை பிடித்தார்..." சிவகங்கை சீமையிலே.." என உச்சஸ்யாயியில் பாடத்துவங்கினார்.என்ன மாயமோ மந்திரமோ...கூட்டம் ஜேஜேவென குவியத்துவங்கியது.அப்ப்புறம் கோட்டைச்சாமி ரவுண்டு கட்டினார்.அடுத்து மாரியம்மாவுடன் இணைந்து " பாவாட சட்ட கிழிஞ்சு போச்சுதேன்.." என உருக்கினார்கள. தவிலும் நாதஸ்வரமும் தப்பும் கலந்த புதிய இசையை அப்போதுதான் முதன்முறையாக கேட்கிறோம்.நாங்கள் மட்டுமல்ல..அந்த ஊரே இப்படியொரு இசையை ..பாடலை...வாழ்வியலை...சாதாரணமனிதர்களின் தரிசனத்தை..அப்போதுதான் முதன்முறையாக கேட்டு எளிய மனிதனின் வசீகரத்தில் சொக்குண்டு நின்றது.
எள் விழக்கூட இடமில்லாத அளவுக்கு கூட்டம் என்பதற்கான காட்சியை நேரில்கண்டு வியந்துபோனோம்.கூடவே கலை இலக்கிய இரவுகளுக்கு கூட்டத்தை சேர்ப்பதற்கான ரகசியத்தின் திறவுகோலையும் அந்த மகத்தான கலைஞன் கே.ஏ.குணசேகரன் வழியே கண்டடைந்தோம்.அடுத்த ஆண்டிலிருந்து கலை இலக்கிய இரவை தெருவுக்கு கொண்டுவந்ததற்கும்...அதில் மக்களை வசீகரித்து இழுத்து நிறுத்த மக்களின் பாடல்களை பயன்படுத்தியதற்கும் முதல் காரணமாயிருந்தவர் எங்கள் அன்பான கே ஏ ஜி.
அவரின் இசைத்தடத்தில் பயணிக்கும் எண்ணற்ற கலைஞர்களின் சார்பில்
எங்கள் தோழனுக்கு இசை வணக்கம்.உங்களின் ஆக்காட்டியும் பாவாட சட்டயும் என்றும் காற்றில் படபடத்துக்கொண்டேயிருக்கும் தோழரே


கருப்பு கருணா

No comments:

Post a Comment