Saturday, 23 January 2016

நண்பரே! நடுங்கி நிற்கிறேன்.

நண்பரே! நடுங்கி நிற்கிறேன்.
==========================
இதுவும் உள்ளுணர்வுதானா? என்று தெரியவில்லை. இரண்டு மணிநேரத்திற்கு முன்னால் அந்தப் பெயரைத் தட்டச்சுச் செய்தேன். அந்த நேரத்தில் அந்தப் பெயருக்குரிய ஆளுமையின் மரணம் நிகழ்ந்திருக்கிறது. Sap Marx அவர்களின் முகநூல் பதிவொன்றில் நண்பர் கே.ஏ.குணசேகரன் அவர்கள் பற்றிய அந்தத் தகவலைப் பதிவு செய்தேன். இசையமைப்பாளர் இளையராஜா,அவர்கள் வழக்குத் தொடர்ந்தார் என்ற தகவலைச்சொன்னேன்.
இப்போது பாண்டிச்சேரியிலிருந்து அவரது மரணம் குறித்த தகவல்்வந்துவிட்டது.நான் முதுகலை படிக்கும்போதிலிருந்து அவரை எனக்குத் தெரியும். தியாகராசர் கல்லூரியில் முதுகலை படித்துவிட்டு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திற்கு முனைவர் பட்டத்திற்கு வந்தவர். கவிஞர் மீராவின் தொடர்பால் பேராசிரியரின் ஏற்பாட்டில் பல்கலைக்கழகத்தில் ஆய்வுப்பட்டத்திற்கு நுழைந்தார். ஆய்வாளராக வரும்போதே தமிழகம் அறிந்த பாடகர். எப்போதும் அவரது விடுதி அறையில் கட்சிக்காரர்கள், நாட்டுப்புறக்கலைஞர், பாடகர்கள் என ஒன்றிரண்டுபேர் விருந்தினர்களாக இருப்பார்கள். அவரது விடுதிக்கட்டணம் மற்றவர்களின் கட்டணத்தைப் போல இரண்டு மடங்குக்கும் மேல் இருக்கும். வருபவர்களையெல்லாம் விருந்தினர் பட்டியலில் இணைத்துச் சாப்பிடச்சொல்லி அனுப்புவார்.
அவரது குழுவினரோடு வெறும் கேட்பவனாகவே பயணம் செய்திருக்கிறேன்.போகும்போது மார்க்சியம், கலையின் சமூகப்பாத்திரம், விழிப்புணர்வூட்டுவதில் கலைஞர்களின் பங்களிப்பு எனப் பேசிக்கொண்டே போவோம். ஒருமுறை அவர் உடன் வரமுடியாத நிலையில் சத்தியமங்கலத்திற்குக் குழுவினரோடு வரும்படி சொல்லிவிட்டுப் போய்விட்டார். இரவு கச்சேரி தொடங்கி ஒரு இரண்டு மணிநேரம் கழித்து வந்தார். அதன்பிறகு இரண்டு மணி நேரம் பாட்டுக்கச்சேரியை நடத்தினார். அவரது திருமணத்திற்காகச் சிவகங்கை போய்க் கலந்துகொண்ட நாள் மறக்கமுடியாத நாள். மணமகனாகவும் பாடகராகவும் மாறிமாறித் தோன்றினார் மேடையில்.
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் இரண்டுபேரும் ஒரேநாளில் நாடகத்துறைக்குத் தேர்வுசெய்யப்பட்டோம். இருவரின் தேர்வும் எதிர்பாராத திருப்பத்தால் நிகழ்ந்தது. அதற்குமுன்பு அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த திரு ராஜு, திரு ஆறுமுகம் ஆகிய இருவரையும் மனதில் வைத்து நடத்தப்பெற்ற நேர்காணலில் நாங்கள் இருவரும் தேர்வு செய்யப்பட்டோம். அவர் இணைப்பேராசிரியராகவும் நாள் விரிவுரையாளராகவும் ஒரேநாளில் பணியில் சேர்ந்தோம்.
நாடகம் பற்றிப் பெரிதும் கருத்துவேறுபாடுகள் இருந்ததில்லை. , நாடகத்துறை நிர்வாகம் பற்றிய முரண்பாடுகள் இருவருக்கும் உண்டு. சண்டை போடுவேன். சிரித்துக்கொண்டே எதிர்கொள்வார். எட்டாண்டுகள் அங்கு பணியாற்றிவிட்டு நான் வெளியேறியபோது வாழ்த்தி அனுப்பியவர்களில் அவரும் ஒருவர். அதன் பிறகுப் பலதடவை துறையின் செயல்பாடுகளில் பங்கெடுக்க அழைத்தவர் அவர் தான் எப்போதும் உள்வாங்கும் குணத்தை வெளிப்படுத்துவார். மற்றவர்கள் பொறுப்புக்கு வரும்போது நிராகரிப்பார்கள்.
அவரது குரலே அவரது சொத்து. இடதுசாரி இயக்கங்களுக்காக அவரது குரல் மேடைதோறும் முழங்கியிருக்கிறது. தலித் இயக்கங்களின் ஆரம்ப வளர்ச்சியில் அவரது குரலாற்றிய பங்களிப்பு முக்கியமானது .நாட்டார்கலைகள் அனைத்தையும் பற்றி அனுபவ பூர்வமாக உரையாற்றக்கூடிய ஆளுமை. ஐரோப்பிய நாடுகளுக்கும் அமெரிக்காவும் சென்று கச்சேரிகள் செய்துள்ளார்; கட்டுரைகள் வாசித்துள்ளார். ஊடகம் இதழில் கத்தாரோடு நிகர்நிலைப்படுத்தி எழுதப்பற்ற கட்டுரையால் மனம் மகிழ்ந்தார்.
சமூக நிகழ்வுகளை நினைவுபடுத்தும் நாடக ஆக்கங்களை எழுதியவர். வட்டார வரலாறு, நாட்டார் நம்பிக்கைகள், கதைகள் எப்போதும் அவரது கவனத்தில் இருந்துகொண்டே இருந்தன. நாடக எழுத்திலிருந்து தன் வரலாற்றுக்குள்ளும் தனது பங்களிப்பைச் செய்தவர். வடு அவரது தன்வரலாற்றுப் புதினம். அவரது எழுத்து மற்றும் இயக்கத்தால் பலி ஆடுகள் முக்கியமான நாடகமாக உருவானது. தலித் அரங்கியலுக்கு அது ஒரு மைல்கல்.
அண்மையில் புதுச்சேரி போனபோது பார்க்கவில்லை. சென்னையில் மருத்துவமனையில் இருந்தார். லண்டனிலிருந்து அவரது மாணவரும் நண்பருமான பால.சுகுமார் Balasingam Sugumar வந்து பார்த்துவிட்டுப் பயமா இருக்கு ராமசாமி! என்று தொலைபேசியில் சொல்லிவிட்டு நடுங்கினார். அந்த நடுக்கம் எனக்கும் தொற்றிக் கொண்டது. நண்பரே இப்போது நான் நடுங்கியபடி இருக்கிறேன். பாண்டிச்சேரியே தூரம் தூரமாக விலகிக் கொண்டிருக்கிறது.நண்பரே! நடுங்கி நிற்கிறேன்

No comments:

Post a Comment