தழும்புகளின் பதிவுகள் - ( வடு- கே.ஏ.குணசேகரனின் சுயசரிதை )
பாவண்ணன்
சிறந்த இசைக்கலைஞரும் நாடக இயக்குநருமான கே.ஏ.குணசேகரன் தன்னுடைய வாழ்வில் குழந்தைப்பருவத்திலிருந்து கல்லுாரி இளைஞனாக வளர்ந்து நின்ற பருவம்வரை நடைபெற்ற முக்கிய அம்சங்களை எட்டுப் பகுதிகளாக்கி 'வடு ' சுயசரிதையில் பகிர்ந்துகொண்டுள்ளார். 126 பக்கங்களுக்கு நீள்கிற இச்சுயசரிதையை தொடர்ச்சியாகப் படிக்கும்வண்ணம் அவரது விவரிப்புமொழி பொருத்தமாக அமைந்துள்ளது.
சாதிய மனம் என்பது ஆழ்ந்த ஆய்வுக்குரிய ஒரு களம். தொன்மங்களும் வரலாறுகளும் கல்வெட்டுக்களும் செப்பேடுகளும் மட்டுமன்றி இத்தகு சுயசரிதைக் குறிப்புகளும் இந்த ஆய்வுக்கு முக்கியமானவை. சாதியப் பார்வையால் மானுடத்தின்மீது விழுந்த கசையடிகளின் தழும்புகள் ஏராளமானவை. கே.ஏ.குணசேகரனின் பதிவுகள் அத்தழும்புகளில் ஒருசிலவற்றை நமக்குச் சுட்டிக்காட்டுகின்றன.
கே.ஏ.குணசேகரன் பிறந்த ஊர் இளையான்குடி. அவர் தாயாருக்குச் சொந்த ஊர் கீரனுார். தந்தையாரின் ஊர் மாரந்தை. பெரியம்மாவின் ஊர் தோவூர். இந்த ஊர்கள் நிலவியல் அடிப்படையில் அருகருகே இருப்பவை என்றபோதும் வாழும் விதமும் உறவுப் பார்வைகளும் வெவ்வேறானவையாக உள்ளன. முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த அடித்தட்டு மக்கள் பெருமளவில் வாழும் ஊர் இளையான்குடி. அவ்வளவாக சாதி வேறுபாடு பார்க்காதவர்கள். தலித் மக்களுடன் சேர்ந்து பழகுவதில் அவர்களுக்கு எவ்விதமான மனத்தடையும் இல்லை. மற்ற ஊர்கள் சாதி இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்கள். மணமக்கள் ஊர்வலமாக இருந்தாலும் சரி, சவ ஊர்வலமாக இருந்தாலும் சரி, தம் ஊர்த் தெருக்கள் வழியாக செல்லக்கூடாது என்பதில் உறுதியைக் கடைப்பிடிப்பவர்கள். எடுத்துக்காட்டாக நுாலில் சுட்டிக்காட்டப்படும் ஒன்றிரண்டு அம்சங்களைக் குறிப்பிடலாம். இளையான் குடியிலும் சாலையூரிலும் உள்ள பாவடி ஊருணிகளில் ஆண்களும் பெண்களும் குளிப்பதற்காக தனித்தனி துறைகள் இருக்கின்றன. இடையில் தடுப்புச்சுவரும் உண்டு. அவ்வளவுதான். ஆனால் மற்ற ஊர்த் துறைகளில் ஆண்களுக்கான துறைகளிலும் பெண்களுக்கான துறைகளிலும் ஒவ்வொரு சாதிக்கும் தனித்தனியாக இடங்கள் பிரித்து வைக்கப்படுகின்றன. கூடப் பழகும் நண்பர்களை அன்போடும் உரிமையோடும் 'வாடா போடா ' என்று இளையான் குடியில் அழைத்துப் பழகலாம். ஒன்றாக விளையாடலாம். பட்டப் பெயர் வைத்துக்கூட விளிக்கலாம். ஆனால் மற்ற ஊர்களில் அது நடக்கவே முடியாத விஷயம். தம்மைவிட குறைவான வயதுக்காரர்களைக்கூட 'வாங்க போங்க ' என்று சொல்லித்தான் அழைக்கவேண்டும். அத்துமீறி மரத்தின் கிளையில் ஏறி உட்கார்ந்து வெட்டினால்கூட தட்டிக்கேட்க முடியாது. கன்னங்களில் அறைபட்டுத்தான் நிற்கவேண்டும். இப்படி காணப்படும் சின்னச்சின்ன வேறுபாடுகளை ஒவ்வொரு கட்டத்திலும் உணர்த்தியபடி விரிகிறது சுயசரிதை. ஒரு சமூகத்துக்குள் தீண்டாமை என்னும் பார்வை எவ்விதத்தில் படிந்திருக்கக்கூடும் என்ற கேள்வியை ஒட்டி ஒரு விவாதத்தை நமக்குள் நிகழ்த்திக்கொள்ள இந்த அம்சங்கள் உதவியாக இருக்கின்றன.
சாதி இழிவைச் சுட்டிக்காட்டும் பல சம்பவங்கள் இச்சுயசரிதையில் இடம்பெற்றிருந்தாலும் முக்கியமாகச் சுட்டிக் காட்டப்படவேண்டியவை இரண்டு உண்டு. முதல் சம்பவத்தில் ஒரு பள்ளிச்சிறுவன் இடம்பெறுகிறான். காசு கொடுத்து கிழிக்கவேண்டிய பரிசுச்சீட்டை காசு கொடுக்காமலேயே கிழித்துக்கிழித்துப் போடுகிறான். பரிசுக்குரிய எண் விழுந்ததும் உரிய பரிசுப் பொருளைத் தருமாறு அதட்டிக் கேட்கிறான். பொருளை வாங்கிக்கொள்ளும் முன்னர் கிழித்த சீட்டுகளுக்குகுரிய பணத்தைத் தருமாறு கேட்கிறான் பரிசுக் காலண்டரைப் பிடித்தபடி நிற்கும் சிறுவன். ஆணவத்தோடு தரமறுக்கிறான் அவன். உரிய பணத்தைத் தராமல் போனால் வகுப்பு ஆசிரியரிடம் புகார் சொல்லப்போவதாக அறிவிக்கிறான் சிறுவன். சற்றும் பதற்றமின்றி சட்டையைப் பிடித்த கையை தட்டிவிட்டு சாதிப் பெயரைச் சொல்லித் திட்டிக்கொண்டே ஓட்டம் பிடிக்கிறான். நஷ்டத்தாலும் அவமானத்தாலும் ஆத்திரமேறிய சிறுவன் ஓடிப் பிடித்து அவனை அடித்துவிடுகிறான். அடிபட்டபவனுடைய சொந்தக்காரர்கள் திரளாக வீடு தேடிவந்து சாதிக்கட்டுப்பாட்டை நினைவூட்டி அச்சுறுத்திவிட்டுச் செல்கிறார்கள். சிறுவனைச் சேர்ந்தவர்கள் மன்னிப்பு கேட்கவேண்டியிருக்கிறது. இன்னொரு சம்பவத்தில் வலிப்புவந்து கீழே விழுந்து கைகளையும் கால்களையும் உதைத்துத் துடித்துக்கொண்டிருந்த ஒருவரை இரண்டு இளைஞர்களும் துாக்கிவந்து நிழலில் கிடத்தில் இரும்புத் துண்டை கைக்குள் வைத்துமூடி முதல் உதவி செய்து வலிப்பை நிறுத்துகிறார்கள். விழித்ததும் தன் உயிர் காப்பாற்றப்பட்டதற்கு நன்றி சொல்வதற்கு மாறாக தாழ்ந்த சாதிக்காரர்களாகிய அவர்கள் தன்னைத் தொட்டதற்காக குற்றம் சுமத்தி, அவமானப்படுத்தும் வகையில் பேசி பஞ்சாயத்தைக் கூட்டிவிடுகிறார். நேர்மையைவிட சாதியுணர்வை முக்கியமாக நினைக்கப்படுவதற்கு முதல் சம்பவம் எடுத்துக்காட்டு. நன்றியுணர்ச்சியைவிட சாதியுணர்வால் மனத்தை நிறைத்துவைக்கத் தலைப்பட்ட வாழ்க்கைக்கு இரண்டாவது சம்பவம் எடுத்துக்காட்டு. சகஜமாக வெளிப்படவேண்டிய / பின்பற்றப்படவேண்டிய நேர்மை, நன்றி ஆகிய குணங்களைக்காட்டிலும் கூடுதலான அளவில் மனிதர்கள் முக்கியத்துவம் வழங்குகிற சாதியின் குரூர முகங்களின் இறுக்கத்தை இவை சுட்டிக்காட்டுகின்றன. மனிதாபிமானத்துக்கு எதிரானதாக சாதி எப்படி காலம்காலமாக மனிதர்களை தகவமைத்து வைத்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதன்மூலம் சமூகத்தின் கட்டுமானத்தை எளிதாகப் புரிந்துகொள்ளலாம்.
இளையான் குடியில் கிணற்றுக்குள் விழுந்த குழந்தையைக் காப்பாற்றுகிற சம்பவமொன்றும் இச்சுயசரிதையில் இடம்பெற்றிருக்கிறது. குணசேகரன்தான் காப்பாற்றுகிறார். காப்பாற்றப்பட்ட குழந்தைக்கு உரியவர்கள் 'கொணசேகரா நீ நல்ல இருப்பே ' என்று சொல்லி சிங்கப்பூர் தைலத்தை அடிபட்ட முழங்காலிலும் கையிலும் தடவிவிடுகிறார்கள். வலிப்பு வந்து பிரக்ஞையின்றி விழுந்து கிடந்தவரை காப்பாற்றுவதும் கிணற்றில் நழுவிவிழுந்த உயிரைக் காப்பாற்றுவதும் அடிப்படையில் ஒன்றுதான். ஆனால் ஒரு முனையில் அச்செயல் பாராட்டுக்குரியதாக இருக்கிறது. இன்னொரு முனையில் அடி, உதை, மிரட்டல்கள், வசைகளுக்குரியதாக இருக்கிறது. சாதி என்னும் திரையே வாழ்க்கைப் பார்வை சரியாக தூய்மை கொள்ளாதபடியும் துல்லியம் பெறாதபடியும் தடையாக நிற்கிறது.
சுயசரிதையிலிருந்து உருத்திரண்டெழுந்து நம் நெஞ்சில் தங்கவிடுகிற பாத்திரங்களில் முக்கியமான பாத்திரம் கே.ஏ.குணசேகரின் தாய்மாமனாகிய முனியாண்டி. கடுமையான நெருக்கடிகளுக்கிடையே மருத்துவப் படிப்பில் சேர்ந்து பட்டம் பெற்று ஆர்வத்தோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவச்சேவை செய்து மனநிறைவோடு வாழ்ந்தவர் அவர். மருத்துவமனை வளாகத்தில் ஐயா என்றும் மதுரை நகருக்குள் சார் என்றும் சொந்த ஊருக்குள் ஒருமையிலும் விளித்துப் பேசுகிற உயர்சாதி மனோபாவத்தைக் கண்டு ஒருபக்கம் வேதனையும் மறுபக்கம் கசந்த சிரிப்புமாக நகர்ந்துவிடுபவர். நன்றாகப் பாடக்கூடியவர். மதம் மாறித் திருமணம் செய்துகொண்டவர். பாடல்களிலும் நடிப்பிலும் இருக்கும் ஆர்வத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் மருத்துவமனையில் அவசரமான அறுவை சிகிச்சை இருப்பதாகச் சொல்லிவிட்டு மணிமாறன் என்னும் புனைபெயரில் எங்கோ ஒரு நாடக அரங்கில் ராஜபார்ட்டாக நடித்துவந்தவர். பல சாதனைகள் நிகழ்த்தவேண்டிய திறமைசாலியாக வளர்ந்து ஒளிரவேண்டிய அவர் நடுவயதிலேயே மரணத்தைத் தழுவிவிடுகிறார். பல அத்தியாயங்களில் அங்கொரு சேதியும் இங்கொரு சேதியுமாக மட்டுமே இவரைப்பற்றிய செய்திகளை மட்டுமே சொல்லி அவரைப்பற்றிய தெளிவான கோட்டோவியத்தை மிகநேர்த்தியாகத் தீட்டியிருக்கிறார் கே.ஏ,குணசேகரன். நாலணா கூலிக்குக் களையெடுப்பதற்கு தன்னோடு அழைத்துச்சென்றும் தான் விறகுவெட்டிக் குவிக்கும்வரை நிழலில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருக்கச் சொல்லிவிட்டு தலைச்சுமையோடு வீட்டுக்குத் திரும்பும் சின்னம்மா பெரியம்மாக்களின் அன்பைக் குறிப்பிடும் விதமும் முக்கியமானவை. இவற்றை வாசிக்க நேரும் அடித்தட்டைச் சேர்ந்த வாசகர்கள் அனைவருமே தத்தம் இளமைப்பருவத்தில் விறகுவெட்டிய அனுபவங்களையும் அம்மா, சின்னம்மா, பெரியம்மாக்களையும் நினைத்துப் பார்க்காமல் இருக்கமுடியாது. நித்தமும் நிகழக்கூடிய அச்சம்பவங்களை துல்லியம் பிசகாமல் குறிப்பிடுகிாறர் கே.ஏ.குணசேகரன்.
காலம் காலமாக மேல் குலத்தவர்களின் மனத்தில் நிறைந்திருக்கும் எதிர்ப்புணர்வுக்கும் எதிர்பார்ப்புக்கும் எடுத்துக்காட்டாக இச்சுயசரிதையில் ஒரு சம்பவம் இடம்பெற்றிருக்கிறது. வானொலியில் பாடல்களைப் பாடி பெருமைகொண்ட இளைஞனாக வளர்ந்துவிட்ட சம்பவம் அது. பாடல்களின் முடிவில் பாடலைப் பாடியவர் 'இளையான்குடி கே.ஏ.குணசேகரன் ' என்ற பெயர் அறிவிக்கப்படுகிறது. மாரந்தையைச் சேர்ந்த மேல்சாதிக்காரர் ஒருவர் இளைஞனிடம் இளையான்குடியின் பெயரைச் சொல்லக்கூடாது என்றும் தந்தையின் ஊரான மாரந்தையின் பெயரைத்தான் சொல்லவேண்டும் அறிவுறுத்திவிட்டுச் செல்கிறார். அவர் குரலில் இளைஞனின் பெருமையையும் வளர்ச்சியையும் ஏற்றுக்கொள்கிற அரவணைப்பு தென்படுகிறது. 'அட, நா நின்னுட்டிருக்கேன். பெரிய மயிருக்கணக்கா ஒய்யாரமா கட்டில்ல ஒக்காந்துட்டிருக்கே, எந்திரிடா ' என்று அதட்டிய அதே வாயால் அப்படி ஒரு கோரிக்கையை அந்த இளைஞன் முன்வைக்க அவருக்கு எவ்விதமான கூச்சமும் இல்லை. ஒருகணம் ஏகலைவன் முகம் நினைவில் நிறைகிறது. தொடக்கத்தில் தாழ்ந்த குலத்தவன் என்ற காரணத்தால் ஏகலைவனுக்குச் சொல்லித்தர இயலாது என்று மறுக்கிறார் துரோணர். அவன் தானாகவே கற்று, தானாகவே சாதித்து வில்லாளியாக உயர்ந்து நிற்கும்போது எவ்விதமான தயக்கமுமின்றி, அதே துரோணர் நடுக்காட்டில் சீடனாக ஏற்றுக்கொள்கிறார். துரோணருக்கிருந்த அதே அரவணைப்பு காலத்தைக் கடந்து மாரந்தைக்காரரிடமும் ஊறி வெளிப்படுகிறது. தனது வலது கையை முடமாக்கி வில்வித்தையைப் பயனற்றதாக்கி முடக்குவதற்காகவே அந்த அரவணைப்பு என்று தெரியாத ஏகலைவனாக இன்றைய இளைஞன் இல்லை என்பது மிகப்பெரிய ஆறுதலான விஷயம்.
(வடு- கே.ஏ.குணசேகரன். சுயசரிதை நுால். காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி,சாலை, நாகர்கோவில். விலை ரூ65
No comments:
Post a Comment