Friday, 22 January 2016

கே.ஏ.குணசேகரன் அவர்கள் கலைத்தாயுடன் சங்கமித்தார் ,


பாண்டிச்சேரி, பல்கலைக்கழக நாடகத்துறைத் தலைவர் டாக்டர் .கே.ஏ.குணசேகரன் அவர்கள்
கலைத்தாயுடன் சங்கமித்தார் ,
இவர் சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகேயுள்ள மாரந்தை சிற்றூரில் பிறந்தவர். மதுரை தியாகராசர் கல்லூரி, காமராசர் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் படித்தவர். பி.ஏ.(பொருளாதாரம்) எம்.ஏ (தமிழ் இலக்கியம்) படித்த இவர் நாட்டுப்புற நடனப் பாடல்கள் குறித்து ஆய்வை மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றவர். தொண்ணூறுகளில்தொடக்கத்தில்தான் புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் பணியில் சேர்ந்தார்.சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனராகவும் பொறுப்பு வகித்தார்.
இவர் தமிழ் நாட்டில் முனைப்புப் பெற்று வரும் தலித் இயக்கங்களுடன் தன்னை அடையாளப்படுத்தி வேலை செய்பவர். தலித் மக்கள் வாழ்வியல் பற்றிய பல கட்டுரைகளையும் நூல்களையும் எழுதியுள்ளார். அண்மையில் மனுசங்கடா, மண்ணின் பாடல்கள், தன்னானே போன்ற தலித் பாடல்கள் அடங்கிய ஒலிப்பேழைகளை வெளியிட்டுள்ளார். தன்னானே குழுவுடன் இணைந்து வேலை செய்பவர்.இவரது ‘பலி ஆடுகள்’, நாடகம் மிக வரவேற்பைப் பெற்ற நாடகமாகும். இத்தோடு, ‘அறிகுறி’ எனும் தலித் அரங்காற்றுகையையும் நிகழ்த்தியிருக்கிறார். இதனோடு, புராணக் கதைகளை மறுவாசிப்புக்கு உட்படுத்தி பல நாடகங்களை குணசேகரமவர்கள் படைத்துள்ளார். பெண்சார்ந்த சிந்தனையுடன் அடக்கப்பட்டோரின் ஆவேசக்குரலாக இந்நாடகங்கள் வெளிப்பட்டிருக்கின்றன. சமகாலத்தின் நிலைமைகளை வழிவழியாக வந்த மரபுகளின் தொடர்ச்சியாக இனங்கண்டு குறிப்பாக இந்துதத்துவ மேலாண்மை மீது கேள்வி எழுப்பும் ஒரு போக்கை இவரது நாடகங்களில் காணமுடிகின்றது. பவளக்கொடி அல்லது குடும்ப வழக்கு நாடகம் தொழில்முறையான பெண் நடிகைகள் மீது காணப்படும் பாலியல் ஒடுக்குமுறை பற்றிப் பேசுகிறது. இந்நாடகம் புத்தகமாகவும் வெளிவந்துள்ளது. வள்ளி திருமணம் நாடகம், சத்திய சோதனை நாடகம் என்பன இவரது மறுவாசிப்புச் சிந்தனையோடு மேடையேற்றப்பட்ட நாடகங்கள் ஆகும். மேலும், தலித் அரங்கியல் என்ற தலைப்பிலான அரங்கக் கட்டுரைத் தொகுப்பு ஒன்றையும் நூலாக வெளியிட்டுள்ளார். இது பேன்று இலங்கைக்கு வந்திருந்த வேளையில் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற இடங்களுக்கு விஐயம் செய்து தமிழ் நாடகத்துறை சார்ந்தவர்களையும் நாடக மாணவர்களையும் சந்தித்து உரையாடிச் சென்றார்
கிழக்கு பல்கலைக்கழகத்திலும் நாடக மாணவர்களுக்கு நாட்டார் பாடல், இசை, நடனம் பற்றிய களப்பயிற்சியை நடத்திய இவர் ‘மக்கள் இசை’ என்ற தலைப்பிலான கருத்தரங்க உரையையும் நிகழ்த்தியிருந்தார்.
கொழும்பு தமிழ்ச்சங்கமும் இவரை அழைத்து ‘மக்கள் இசை’ என்ற தலைப்பிலான கருத்தரங்கொன்றை ஒழுங்கு செய்து நடத்தியிருந்தது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நாடகமும் அரங்கியலும் மாணவர்களை இரண்டு மணிநேரம் சந்தித்து ‘தலித் அரங்கு’ பற்றி உரையாடியமை குறிப்பிடத்தக்கது
இவரது இழப்பானது தமிழ் நாடக உலகிற்க்கு பாரிய இழப்பாகும் .விருட்சம் அரங்க படைப்புகளிள் அன்னாரது குடும்ப உறுப்பினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் ,டாக்டர் கே.ஏ.ஜி. அவர்களது ஆத்மா சாந்தி பெற எல்லாம் வல்ல ஆண்டவனை பிரத்திக்கின்றனர்.
ப.யனேபன்
ஸ்தாபகரும் ,
பிரதம நிறைவேற்று அதிகாரி.
விருட்சம் அரங்க படைப்பாளிகள்,
களுவாஞ்சிகுடி,
மட்டக்களப்பு

No comments:

Post a Comment