தோழர் கே.ஏ.குணசேகரன் மறைந்துவிட்டார் என்கிற செய்தியை நம்ப இயலவில்லை. அவருக்கு அந்த அளவுக்கு வயதாகவில்லையே, என்ன ஆயிற்று என்று ஒரு நிமிடம் திகைத்துப்போய்விட்டேன்.
கே.ஏ.ஜி. என்றாலே எல்லோருக்கும் இன்குலாபின் மனுசங்கடா பாடலை அவர் பாடியதுதான் நினைவுக்கு வரும். அவருடைய ஆக்காட்டி ஆக்காட்டி பாடலையும் அவரது குழுவினரில் ஒருவரான சின்னப்பொண்ணு பாடிய அம்மா பாவாடை சட்டை கிழிஞ்சு போச்சுதே என்ற பாடலையும் என் வயதை ஒத்த அரசியல் செயல்பாட்டாளர்கள் பாடியும் கேட்டும் இருப்பார்கள்.
நமது உள்ளத்தை ஊடுருவி, அதில் குற்றவுணர்வு ஒன்றையும் உருவாக்கி, இந்த பாழாய்ப்போன ஏழைகளுக்காக, ஒடுக்கப்பட்டவர்களுக்காக நீ என்ன செய்யப்போகிறாய் என்று கேட்கும் குரல் அவருடையது. அந்தக் குரல் பிற்காலத்தில் ஓங்கி ஒலிக்கத்தவறிவிட்டது என்றே நினைக்கிறேன். செம்மொழி மாநாட்டு பாடலில், அத்தனை செதுக்கப்பட்ட குரல்களுக்கு நடுவிலும் கேஏஜியின் குரல் ஆதிக் குரலாக வெளிப்படும். ஆக்காட்டி ஆக்காட்டி பாடலைக் கேட்டு அழாதவர் இருக்கமுடியாது. ஆனால் அது வெறும் அழுகைப் பாடல் அல்ல. அது மண்ணின் மீளெழுச்சிப் பாடல்.
நான் இளம் அறிவியல் முடித்துவிட்டு முதுகலைப் படிப்புக்காக புதுவைப் பல்கலைக்கழகத்தில் நாடகவியல் துறையில் சேர்ந்து கொஞ்சநாள் இருந்தேன். அப்போது அத்துறையின் தலைவராக கே.ஏ.ஜிதான் இருந்தார். மாற்று அரசியல் கதாநாயகர்களில் ஒருவரான் அவரின் கீழ் மாணவராக இருந்தது எனக்கு எப்போதும் பெருமிதமான உணர்வுகளை வழங்கக்கூடிய ஒன்று. பின்பு ஒரு தடவை அவர் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இயக்குநராக இருந்தபோது பார்த்து பேசினேன்.
ஜீரணித்துக்கொள்ளவேமுடியாத இழப்பு
ஆழி செந்தில்நாதன்
ஆழி செந்தில்நாதன்
No comments:
Post a Comment