Friday, 22 January 2016

நாட்டாரியல் பேராசிரியர் கரு.அழ.குணசேகரன் இயற்கை எய்தினார். இலக்குவனார் திருவள்ளுவன்

நாட்டாரியல் பேராசிரியர் கரு.அழ.குணசேகரன் இயற்கை எய்தினார்இலக்குவனார் திருவள்ளுவன் 17 சனவரி 2016
கரு.அழ.குணசேகரன் - k.a.gunasekaran
(சித்திரை 29, 1986 /12 மே 1955 – தை 06, 2047 / 17 சனவரி 2016)
ஓய்ந்தது உரிமைக்குரல்
நாட்டரியல் ஆய்வாளரும் நாட்டுப்புறக்கலைஞரும் நாடக ஆசிரியரும் நடிகரும் நாடகத்துறைப் பேராசிரியருமான முனைவர் உடல்நலக் குறைவால் இன்று தன் 60 ஆம் அகவையில் புதுச்சேரியில் கருவடிக்குப்பத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
கே.ஏ.குணசேகரன் என அழைக்கப்பெறும் இவர், சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகேயுள்ள மாரந்தை சிற்றூரில் பிறந்தவர்; இளையான்குடி உயர்நிலைப்பள்ளி, இளையான்குடி முனைவர் சாகிர் உசேன் கல்லூரி, சிவகங்கை அரசு கலைக்கல்லூரி, மதுரை தியாகராசர் கல்லூரி, மதுரை காமராசர் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் படித்தவர்; இளங்கலை (பொருளாதாரம்), முதுகலைஏ(தமிழ் இலக்கியம்) முனைவர் பட்டம் பெற்றவர்.
நாடகத்தைப் பற்றியும், நாட்டுப்புறவியலைப் பற்றியும் ஆய்வு நூல்களையும், ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும், பதினான்குக்கும் மேற்பட்ட படைப்பு நூல்களையும் எழுதியுள்ளார். முதல்ஒடுக்கப்பட்டோர் நாடகமான ‘பலி ஆடுகள்’, ‘சத்திய சோதனை’, ‘பவளக்கொடி’, ‘அறிகுறி’, ‘தொடு’, ‘மாற்றம்’ முதலான நாடகங்கள் அவற்றில் குறிக்கத்தக்கன. சத்தியசோதனை புதுச்சேரி அரசு பாரதிதாசன் மகளிர் கல்லூரியிலும் பலியாடு நாடகம் புதுச்சேரிப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையிலும் பாட நூல்களாக வைக்கப்பட்டுள்ளன.
‘சேரிப்புறவியல்’, ‘தலித்து அரங்கியல்’ என்ற நூல்களின் மூலம் கோட்பாட்டுத் தளத்திலும் பங்களிப்பைச் செய்துள்ளார். ‘வடு’ என்ற தலைப்பிலான அவரது நூல்தான் ஒடுக்கப்பட்டோர் அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்டதற்குப் பின் தமிழில் வெளியான முதல் ஒடுக்கப்பட்டோர் தன்வரலாறு ஆகும்.
சமற்கிருத அரங்கவியலுக்கு(theatre) மாற்றாக, ஒடுக்கப்பட்டோர் அரங்கவியல் என்னும் கோட்பாட்டை உருவாக்கியுள்ளார். ‘தன்னனானே’ என்னும் கலைக்குழு வழியாகக் குமுகாயச் சிக்கல்களை மையமாகக் கொண்ட நாடகங்களை அரங்கேற்றி வந்தார். நாட்டுப்புற இசைக்குப் பொதுவெளியில் ஏற்பையும் மதிப்பையும் உருவாக்கியவர். தற்போது புகழ்பெற்று விளங்கும் சின்னப்பொண்ணு முதலான இசைக் கலைஞர்கள் அவரால் பயிற்றுவிக்கப்பட்டவர்கள்.
தமிழ் நாடக உலகில் நடிகராகவும் இயக்குநராகவும் புகழ்பெற்றவர்.
கவிஞர் இன்குலாபு எழுதிக் குணசேகரன் பாடிய “மனுசங்கடா நாங்க மனுசங்கடா…..” என்றபாடல் தமிழ்நாட்டு முற்போக்காளர்களின் தேசியப் பாடல் எனப் புகழப்பட்ட ஒன்று. “ஆக்காட்டி.. ஆக்காட்டி…” என்ற நாட்டுப்புற பாடலில் நுட்பமான சில மாற்றங்களைச் செய்து அவர் பாடிவந்தார். கேட்போரைக் கண்கலங்கச் செய்யும் பாடல் அது. ஒடுக்கப்பட்டோர் பண்பாட்டு அரசியல் வரலாற்றில் அவரது ‘மனுசங்கடா’ ஒலிப்பேழைக்கும் ‘பலி ஆடுகள்’ நாடகத்துக்கும் முதன்மையான இடம் உண்டு.
‘அழகி’ முதலான திரைப்படங்கள் சிலவற்றிலும் அவர் நடித்திருக்கிறார்.
இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் மேடைகளைத் தனது ஆற்றல்மிகு குரலால் எழுச்சி கொள்ள வைத்தவர். பாரதிதாசன் கவிதைகள் சிலவற்றுக்கு அற்புதமாக இசையமைத்துப் பாடியவர்.
தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்டோர் பண்பாடு, இலக்கியம் குறித்த முன்முயற்சிகள் 1990களின் தொடக்கத்தில் முன்னெடுக்கப்பட்டபோது இணைந்து நின்றவர்.
சி.மௌனகுரு, பாலசுகுமார் முதலான ஈழத்து நாடகப் படைப்பாளர்களோடும் அவருக்கு நெருங்கிய நட்பிருந்தது. உலகின் பல்வேறு நாடுகளுக்கும் சென்று அவர் நாடகங்களை நடத்தியிருக்கிறார்.
நாட்டுப்புறவியலில் மட்டுமின்றி செவ்வியல் இலக்கியத்திலும் அவருக்குப் புலமை இருந்தது. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராகப் பணியாற்றியபோது சில செவ்வியல் நூல்களுக்குப் புதிய விளக்கவுரைகளையும் அவர் எழுதியிருக்கிறார்.
மார்க்சிய அரசியல் பின்புலத்தோடு தமிழ் உணர்வையும் ஒடுக்கப்பட்டோர் மக்களின் உரிமைகளையும் தனது இசையின் மூலமும் நாடகங்களின் மூலமும் வெளிப்படுத்தி வந்த மக்கள் கலைஞர் முனைவர் கரு.அழ..குணசேகரன் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் எழுதிய ‘நாட்டுப்புற மண்ணும் மக்களும்’.என்னும் நூலுக்குத் தமிழக அரசின் சிறந்த நுண்கலை நூலாசிரியர் விருது,
நாடகத் துறைக்காகப் புதுவை அரசின் கலைமாமணி விருது,
மதுரை கிருத்தவ கலைத் தொடர்பு மையத்தின் சார்பில் 1994ஆம் ஆண்டு சதங்கை விருது
ஆகிய விருதுகளைப் பெற்றவர்.
மனைவி ரேவதி, மகள் குணவதி, மகன் அகமன் ஆகியோர் உள்ளனர்.
ஒடுக்கப்பட்டோரியல் எழுத்தாளர் இரவிக்குமார் இரங்கல் தெரிவித்துள்ளவாறு, “கேட்பவரின் உயிரில் ஊடுருவிச் செல்லும் மக்கள் கலைஞரின் உரிமைக் குரல் இன்று ஓய்ந்துவிட்டது

No comments:

Post a Comment