Friday, 22 January 2016

தோழர் கே.ஏ.குணசேகரம்

தோழர் கே.ஏ.குணசேகரம்
இரவி.அருணாசலம்

ஐ.பி.சி.தமிழ் வானொலியில் நான் பணி புரிந்தகாலை(1997 - 2001) 'ஊர்வலம்' என்றொரு நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்கினேன். அதில் தெம்மாங்கு, நாட்டார், கிராமிய, நாட்டுப்புறப் பாடல்களைத் தொகுத்து அவற்றின் தகவல்களுடன் வழங்கினேன். தெம்மாங்குப் பாடல்கள், மக்கள் கலை இலக்கியக் கழகம் தயாரித்த பாடல்கள், புஷ்பவனம் குப்புசாமியின் பாடல்கள், தோழர் கே.ஏ.குணசேகரம் பாடல்கள் என்று பல இசைப்பேழையில் உள்ள பாடல்கள் அவற்றில் பயன்பட்டன. மக்கள் கலை இலக்கியக் கழகம் தயாரித்த பாடல்களில் "ஆக்காண்டி ஆக்காண்டி" பாடல், சேரன் நெறியாள்கை செய்த 'தவமாய்த் தவமிருந்து' திரைப்படத்தில் இடம்பெற்றது. அவ்வாறு கே.ஏ.குணசேகரம் தொகுத்த பாடல்களில் "என்னம்மா தேவி ஜக்கம்மா" பாடல் சீமான் இயக்கிய 'தம்பி' திரைப்படத்தில் இடம்பெற்றது.
கே.ஏ.குணசேகரம் தொகுத்த பாடல்களில் "என்னம்மா தேவி ஜக்கம்மா", "மனுசங்கடா", "அம்மா பாவாடை சட்டை கிழிஞ்சு" போன்ற பாடல்கள் மிக இலயிப்புக்கு உரியவை. "அம்மா பாவாடை சட்டை கிழிஞ்சு" என்ற பாடலைக் கேட்டால் அழாது இருக்க முடியாது.
2004இல் ஐ.பி.சி.தமிழ் வானொலியில் நான் பணிபுரிந்த வேளை தோழர் கே.ஏ.குணசேகரம் கலையகத்திற்கு வந்தார். மிகக் கட்டையான ஒருவர். அந்தக் கடுகுக்குள் இருந்த காரத்தை ஏலவே அறிவேன். நான் நிகழ்த்திய 'ஊர்வலம்' நிகழ்ச்சியை அவரிடம் சொன்னபோது அவர் அடைந்த ஆச்சரியம் பேசுபொருளன்று. இவ்வாறு ஒரு நிகழ்ச்சியை எந்த ஒரு வானொலியும் நிகழ்த்தவில்லை என்று புளகித்தார். (பெருமைப்பட்டேன்) அவரைச் செவ்வி கண்டு அவரது பாடல்களுடன் ஒரு மணித்தியால நிகழ்வு ஒன்றினை ஐ.பி.சி.தமிழ் வானொலியில் ஒலிபரப்பினேன்.
அது திருப்தி அல்ல; போதாமைதான். ஆயினும் அதாவது செய்தேனே என்ற திருப்தி உண்டு. தோழர் என்ற சொல்லுக்குத் தோதானவர், தோழர் கே.ஏ.குணசேகரம் அவர்கள். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உச்சரித்த வாய் ஒடுங்கியது. ஆயினும் கேட்டிருந்த எங்கள் காதுகள் ஒடுங்கவில்லை. காற்றில் இன்னும் கலந்தே இருக்கிறது, அவரது குரல். காற்று அவற்றைக் கரைத்து விடாது எனும் நம்பிக்கையுடன் போய் வாருங்கள், மதிப்புக்குரிய தோழரே

No comments:

Post a Comment