மக்களின் பாடகன் தோழர் கே.ஏ.ஜி
தோழர்.மக்கள் இசைப்பாடகர் , நாடகக்கலைஞர் , கல்வியாளர் என பல அடையாளங்களைத் தனக்குரியதாக்கிக் கொண்ட கே.ஏ. குணசேகரன் இனி நம்மிடையே அவரின் பாடல்கள் எழுத்துக்கள் வழியாக நினைவுகூரப்பட இருக்கிறார். இன்று காலை அந்தப் பாட்டுக்குயில் பாடுவதை நிறுத்தி கொண்டது.
கலை இலக்கியப் பெருமன்ற அரங்குகளில் நாங்கள் அறிமுகமான காலகட்டத்தில் அவரின் குரல் எங்களை பெருமன்றத்தின் பண்பாட்டு ஆழப் பெருவெளிக்குள் அழைத்து சென்றது,
குணசேகரனின் இசை ஒருங்கிணைப்பில் உருவான மண்ணின் பாடல்களும் , தன்னானே பாடல்களும் தமிழகம் எங்கும் மக்கள் கலைவிழா மேடைகளில் மீண்டும் மீண்டும் ஒலித்துக்கொண்டிருக்கின்றன.
அவரின் ரோட்டோரம் வீட்டுக்காரி ரோசாப்பூ சேலைக்காரி , ஊரோரம் ஆலமரம் , அந்தக் கடலைக் கொல்லை ஓரத்துல, ஏ ஆக்காட்டி ஆக்காட்டி போன்ற பாடல்களை நகலெடுத்துப் பாடாத மக்கள் குரல்களே இல்லை. அம்மா பாவாடை சட்டை கிழிஞ்சு போச்சுதே என்ன பள்ளிக்கூட பிள்ளை எல்லாம் கேலிபேசுதே என குணசேகரனும் தஞ்சை சின்னபொண்ணும் இணைந்து பாடிய பாடல் ஒலிக்காத மக்கள் மேடைகளே இல்லை.
குமரிமாவட்டம் மதம் சார்ந்த பண்பாட்டு நெருக்கடிகளுக்குப் பெயர் பெற்ற மாவட்டம். தக்கலை இன்னும் உக்கிரமான இடம். கலை இலக்கியப் பெருமன்றம் தக்கலைக் கிளையின் சார்பில் ஆண்டுதோறும் ஆகஸ்டு 15 சுதந்திர நாளை மக்கள் கலை விழாவாக கொண்டாடி வருகிறோம். ஒருமுறை இந்த விழா தக்கலை தாலுகா அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. திருநெல்வேலி செம்மணி கலைக்குழுவும் தோழர் குணசேகரன் அவர்களின் கலைக் குழுவும் இணைந்து மிக பிரம்மாண்டமாக அந்த நிகழ்வை வழங்கினார்கள்.
பாட்டும் இசையும் எத்தனை வலுவான போர்க்கருவிகள் என்பதை அன்று நேரில் பார்த்தேன். சபரிமலையை விட்டு வாப்பா ஐயப்பா வந்து தமிழகத்தின் தலைவிதியைப் பாத்துப்புட்டு போப்பா,என்று அவர் பாடும் போதும் ,தன்னனே தானேனன்னே சொக்கநாதா என்று அவர் பாடும்போதும், மக்கள் கவிஞர் இன்குலாபின் மனுஷங்கடா நாங்க மனுஷங்கடா என்னும் பாடலை அவர் பாடும்போதும் கூடி இருந்த அரங்கம் அதை எப்படி உள்வாங்கியது என்பதையும் வகுப்புவாதிகள் அதற்கு எப்படி எதிர்வினை புரிந்தார்கள் என்பதையும் களத்தில் கண்டோம். அந்த விழாவில் அவரின் குழுவினர் நிகழ்த்திய பலியாடுகள் நாடகம் , நாடக அரங்கிற்கு முக்கியமான ஒரு கொடை. அதில் இடம் பெற்ற என்றுமே பலியாடுகள் பெண்கள் என்றுமே பலியாடுகள் என்னும் பாடல் குறிப்பிடத்தக்கது. I
எண்பதுகளுக்குப் பிறகு தலித்இயக்கங்களின் எழுச்சி கலை இலக்கிய வெளிகளில் நெருப்பாய் பரவியபோது அதன் வெம்மை குறையாமல் பாதுகாத்தவர் குணசேகரன். வெள்ளைக்காரங்க ஆண்டபோதும் அரிசனங்க நாம் இப்போ டெல்லிகாரங்க ஆளும்போதும் அரிசனங்க நாம் கொள்ளைகாரங்க இருக்கும் வரைக்கும் அரிசனங்க நாம் இவங்களைக் கூண்டோடு ஒழிச்சாதான் பொதுசனங்க நாம் என்பன போன்ற தலித் எழுச்சிப் பாடல்கள் அவரால் தீவிர அர்ப்பணிப்பு உணர்வுடன் கொடுக்கப்பட்டன .
அவர் ஒருமுறை எனக்காக பாடிய மனுஷங்கடா பாடல் இடம்பெற்ற அந்த ஒலிப்பேழை இந்த மாதம் 30- ல் வெளிவருகிறது . அந்தப் பாடலைக் கேட்க அந்த மகத்தான மக்கள் கலைஞன் இனி நம்மிடம் இல்லை.
அவர் ஒருமுறை எனக்காக பாடிய மனுஷங்கடா பாடல் இடம்பெற்ற அந்த ஒலிப்பேழை இந்த மாதம் 30- ல் வெளிவருகிறது . அந்தப் பாடலைக் கேட்க அந்த மகத்தான மக்கள் கலைஞன் இனி நம்மிடம் இல்லை.
No comments:
Post a Comment