Friday, 22 January 2016

நாட்டார் இசை, நாடகத் துறை, ஆய்வுத் துறை என்று பல தளங்களில் இயங்கியவர் கே.ஏ.குணசேகரன்

நாட்டார் இசை, நாடகத் துறை, ஆய்வுத் துறை என்று பல தளங்களில் இயங்கியவர் கே.ஏ.குணசேகரன்
பேராசிரியர் கே.ஏ.குணசேகரன் காலமான செய்தியை இன்னும் ஜீரணிக்க முடியவில்லை. 1955-ல் சிவகங்கை அருகே மாறந்தை கிராமத்தில் பிறந்தவர் அவர். 1970-களின் இறுதியில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஆய்வுப் படிப்பை முடித்தார். 1978-ல் காந்தி கிராமம் நாடகப் பயிற்சிப் பட்டறைகளில் பேராசிரியர் சே. இராமானுஜத்தின் பயிற்சியில் நாடகப் பயிற்சி பெற்றார்.
நாட்டுப்புற இசைக் கலைஞரும் புதுச்சேரி பல்கலைக்கழக நாடகத்துறை பேராசிரியருமான முனைவர் கே.ஏ.குணசேகரன் (1955-2016) உடல்நலக் குறைவால் ஞாயிற்றுக்கிழமை அன்று (17-01-2017) புதுச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். கே.ஏ.குணசேகரன் அவர்களுக்கு ரேவதி என்ற மனைவியும், குணவதி என்ற மகளும் அகமன் என்ற மகனும் உள்ளனர்.
என்பதுகளில் கே.ஏ.குணசேகரனின் இசைக்குழு மணப்பாறை மாரியம்மன் கோயிலில் பாடல்களைப் பாடி பறையடித்து ஆடியது இன்னும் கண்முன் அழியாத கோலங்களாகக் காட்சியளித்துக் கொண்டு இருக்கிறது. பல தடவை எங்கள் ஊருக்கு வந்து ஆடிப்பாடி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி சென்றிருக்கிறார்.
அன்னாரின் நாட்டுப்புற இசைக்குழுவினர் பாடிய பாடல்களில் என் நெஞ்சைவிட்டு நீங்காத பாடல் இது...
“‘பாவாடை சட்டை கிழிஞ்சு போச்சுதே...பள்ளிக்கூடப் பிள்ளையெல்லாம் கேலி பேசுதே...”
திருச்சி, ஆர்.சி. மேல்நிலைப்பள்ளியில் நான் எழுதி இயக்கிய நாடகத்தில் இந்தப் பாட்டைப் போட வேண்டும் என்பதற்காகவே ஒரு குறு நாடகம் தயாரித்து பாவாடை சட்டையை ஒரு பையனுக்குப் போட்டு மாணவியாக மாற்றி சிறப்பாக ஒரு நாடகத்தைப் போட்டேன்.
திருவாளர் கே.ஏ.குணசேகரனின் மறைவிற்கு அஞ்சலி செலுத்துவதோடு அன்னாரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மணவை ஜேம்ஸ்

No comments:

Post a Comment