Friday, 22 January 2016

பேராசிரியர் கே.ஏ. குணசேகரன் என்னும் ஆளுமை இன்று நம்முடன் இல்லை

பேராசிரியர் கே.ஏ. குணசேகரன் என்னும் ஆளுமை இன்று நம்முடன் இல்லை. பாண்டிச்சேரி பல்கலைக்கழகப் பேராசிரியராகப் பணியாற்றினாலும் சமூக விடுதலைக் களத்தில் பண்பாட்டுப் புரட்சியை விதைத்த பல பாடல்களைத் தந்தவர். நாட்டுப்புற இசையின் தேர்ந்த விற்பன்னராகத் திகழ்ந்து பல கலைஞர்கள் தோன்றுவதற்கும் அவர்கள் புகழ்பெறுவதற்கும் அடிப்படையாக இருந்தவர்
எங்காண்டே....
ஆபிஸ்ல என்னாலே காரியமாக
சார்ன்னு கூப்பிடுவாரு
டவுனில் கண்டுக்கிட்டா
கொணசேகராம்பாரு
எங்கூரு பஸ்ஸிலஎன்னப்பான்னு சொல்வாரு
சேரியிலே பார்க்கையிலே
என்னடான்னு கேப்பாரு

என்னும் அவரின் இக்கவிதைதான் அவருடானான என் நட்பை உறுதி செய்தது. பெரிய கலைஞராகவும் புகழ்பெற்றவராகவும் இருந்தாலும் மிகவும் எளிமையானவர். ஒரு நாள் பாண்டியில் இரவில் என்னை அவருடைய இருசக்கர வாகனத்தில் அமர்த்திக்கொண்டு சிற்றுண்டிக்காக பல இடங்களில் அலைந்தோம். வீட்டிலிருந்தோ அவருக்கு அழைப்பு வந்து கொண்டேயிருந்தது. ‘தோழர் வந்திருக்காங்க இதோ வர்றேன்’ என்று கூறிக்கொண்டே என்னுடன் இரண்டு மணிநேரங்கள் இருந்தார்.
சங்கர் போன்ற இயக்குநர்கள் அவரை மிகச்சிறிய வேடங்களில் பயன்படுத்தினர்(அந்நியன் படத்தில் ரிக்‌ஷா ஓட்டுபவர்) ஆனால் அவரின் கலை ஆளுமை மிகவும் பெரியது. அவரின் ‘வடு’ தன்வரலாறு தமிழுக்கு முதன்மையானது.
தலித் முரசு இதழில் இளையராஜா குறித்த கட்டுரைத்தொடரை எழுதினார்.அது பின்பு நூலாக வெளிவந்தது. இளையராஜா அந்த நூலை வெளியிடக்கூடாது என்று நீதிமன்றத்திற்குச் சென்று தடை வாங்கினார். அச்சடிக்கப்பட்ட அந்த நூல் அப்படியே கட்டுக்கட்டுக்காக காலத்தைக் கழித்தது.
ஒருமுறை காயிதேமில்லத் கலைக்கல்லூரியில் பணியாற்றும் அவரின் தங்கையும் அவரும் நானும் அண்ணா சாலையில் உள்ள ஓர் உணவகத்தில் உணவருந்தினோம். ஒரு குழந்தையைப் போல பேசிக்கொண்டே சாப்பிட்டார். திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக வருவதற்கு முயற்சித்தார். ஒருவேளை அது நடந்திருந்தால் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் மிளிர்ந்திருக்கும்
அய்யா உங்களை இழந்திருக்கிறோம். உங்கள் எழுத்தை, கலையை, கவிதையை, பாடல்களை அப்படியே வைத்திருக்கிறோம். என் தலை தாழ்ந்த வணக்கங்கள்

யாழன் ஆதி

No comments:

Post a Comment