Wednesday, 27 January 2016

கே.ஏ.குணசேகரன் : கலைத்துவமும் தலித்துவமும்

கே.ஏ.குணசேகரன் : கலைத்துவமும் தலித்துவமும்

Kunasekaranக.கலாமோகன்

இன்று எனது நண்பர் திரு கே.ஏ . குணசேகரனின் (கரு.அழ.குணசேகரன்) மறைவை அறிந்தேன். இது இந்திய நாடகக் கலைக்கு நிச்சயமாகப் பெரிய இழப்பாக இருக்கும். நிறையத் தொடர்புகள் அவருடன் இல்லாதபோதும் நிச்சயமாக அவரை நண்பர் எனச் சொல்லலாம் என நினைக்கின்றேன். நட்பு அவரது வாழ்வுக்கும், கலைக்கும் இலக்கணமாக இருந்தது. இந்திய நாடகக் கலைகளில் மிகப்பெரிய வேந்தராக இருந்த அவர், இந்தத் துணைக் கண்டத்தின் சமூக நெருக்கடிகளைக் கண்டித்தவர், அவைகளுக்கு எதிராகத் தனது பேனாவைத் தூக்கியவர், தலித் இலக்கணத்தைத் தனது படைப்புகளில் காட்டியவர்.
2014 (2)சில ஆண்டுகளின் முன்னர் தமிழ்நாடு சென்றபோது எனது நண்பியும், சமூக சமத்துவப்படை கட்சியின் தலைவியும், முனைவருமான ப.சிவகாமி ஒழுங்குபண்ணியிருந்தார் எமது பாண்டிச்சேரித் தினங்களை. அது அங்கேயுள்ள மிகவும் பிரதான பல்கலைக்கழகத்தில். செல்லுமுன் எனது இனிய நண்பர் எஸ்.பொன்னுத்துரையை சந்திக்கச் சென்றேன். அவர் பேராசிரியர் ரவிக்குமாருடன் இருந்தார்.அவருடன் நண்பர் குணசேகரம் மீது விசாரித்தேன். உடனடியாகவே அவர் குணசேகரனுக்குப் போன் செய்து என்னிடம் தந்தார். சில கணங்கள் நலன்களை விசாரித்தோம்.
நாங்கள் பல்கலைக்கழகத்துக்குச் சென்றது மாலை நேரத்தில். அது மிகவும் அழகியதும், அமைதியானதும், கலைத்துவமானதுமாக இருந்தது. இதுதான் நாடகக் கலையின் வரலாற்றைப் படிப்பதற்காக இந்தியாவில் உள்ள ஒரேயோர் பல்கலைக்கழகம். இந்த நாடகத்துறைப் பிரிவின் தலைவராக இருந்தார் கே.ஏ . குணசேகரன் .2014 (3)
இந்த மாலையில் எங்களை அன்புடன் அங்கு வரவேற்ற மிகவும் சிறப்பான தலித் ஆய்வாளர் அன்புசெல்வம், நாம் குணசேகனை நாளை சந்திப்போம் எனச் சொன்னார். மறுநாள் காலையில் எங்களை எழுப்பியது எமது இனிய நண்பரே. மிகவும் அன்பாக வரவேற்றார். அவரது முகத்தைப் பார்ப்பதும், மொழியைக் கேட்பதும் விருப்பமானது. படைப்பாளிகளை எப்போதும் கௌரவித்தல் அவரது ஈடுபாடு எனச் சொல்லலாம்.
நண்பர் குணசேகரன் மிகவும் சிறியவர், அறிவில் பெரியவர், ஆபிரிக்க சில நாடுகளின் மனிதர்களைப்போல பெரிதும் கறுப்பானவர், மிகவும் அழகானவர்.. அவரது விழிகள் அமைதியானவை, ஆளுமையான அவதானிப்புகளைக் கொண்டவை. இவரது துறை பெரியது, நாடக உலகு அவருக்கு உரித்து. வேறு மொழிகள் பேசும் பட்டப்படிப்பு ஆய்வாளர்களும் அவரிடம் படிக்க வருவதுண்டு. இந்த ஆய்வாளர்கள் அவரிடம் படித்ததைச் சில நிமிடங்கள் கண்டேன். படித்தவர்கள் பின்பு இவரிடம் படிப்பதை மிகவும் அறிவானதாகவும் ஆழமானதாகவும் சொன்னார்கள். அந்த நாள்களில் நான் சில இலங்கைத் தமிழ்ப் பெண்களையும், ஓர் இலங்கைத தமிழ் ஆணையும் அவரது படிப்புச் சாலையில் சந்தித்தேன்.
நாம் மதுரைக்குப் போகும் திகதி பாண்டிச்சேரியில் இருந்தபோதுதான் நெருங்கியது. அங்கிருந்து அந்த நகருக்குச் செல்வது சுலபம். ஓர் பின்னேரம் நாம் பேராசியருக்கு எமது மதுரை போகும் திட்டத்தைச் சொன்னோம். உடனடியாக அவர் எங்களைத் தமது வீட்டுக்கு அழைத்தார். அவர் அழைத்த தினம் நாம் மதுரை போகும் தினமாக இருந்தது. எத்தனை மணிக்கு பஸ் என்று கேட்டார். இரவு என்றோம். எமது வீட்டுக்கு வந்துவிட்டு மதுரை செல்லலாம் என்றார்.
நாம் அவரது வீட்டை வந்தடைந்தோம். அழகான கலைவீடு. நிறையப் படங்கள் அவரது வாழ்வின் செழுமையைக் காட்டின. ஓர் டிவி அமைதியான சத்தத்துடன் ஓடிக்கொண்டிருந்தது. மருத்துவரும், பேராசிரியையுமான அவரது மனைவி ரேவதி எங்களை மிகவும் அன்புடன் விசாரித்தார். நிறைய சாப்பாடுகளை எமக்கு வழங்குவதில் அவருக்கு விருப்பம் இருந்தது. பின் சில நாய்கள்…. இந்த நாய்கள் இனிதானவை… இவைகளை எமது சின்ன மகள்கள் விரும்பினர். நேரம் குறைவானது…. ஆனால் நண்பர் குணசேகரனின் இல்லம் நிறைவானது. எம்மைத் தமது வீட்டின் பின் பக்கம் அழைத்துச் சென்றார். அங்கே குருவிகள் பாதுகாப்பு. ஆம், இவர் நாடகப் பாதுகாப்பாளனுமல்லன், 2014 (5)இனிய கீதங்களின் பாதுகாப்பாளனுமாக. இவரது தமிழ்க் கீதங்கள் செழிவானவை. இந்த சிறிய மணித்தியாலங்கள் எனது வாழ்வின் மிகப் பெரும் பதிவுகளில் ஒன்று. இது அவருடனான கடைசிச் சந்திப்பாக இருக்கும் என நான் அப்போது நினைக்கவில்லை.
“தோழர் கே.ஏ . குணசேகரன் – பாடும் போதெல்லாம் உணர்வின் அழுத்தத்தில் அவர் குரல் உடையும். அது இசையை சேதாரப்படுத்தாது.இங்கும் உடைந்த வாழ்க்கைப் பாடலாகிறது.ஒரு விடுதலை வாழ்க்கையைக் கட்டியெழுப்பும் வேட்கையோடு.” என கவிஞர் இன்குலாப் எழுதியுள்ளார் குணசேகரனின் கவிதைப் புத்தகமான “புதுதடம்” பின் குறிப்பில். இந்த நூலில் “நான் என்றும் எனது தலித் அடையாளத்தை மாற்றிக் கொள்ள விரும்பியதே இல்லை.” என்று பேராசிரியர் தனது வாழ்வுத் தத்துவத்தைத் தருகின்றார். எப்போதும் தலித் மீதான கருத்துகளை வைப்பதும், தன்னைத் தலித் என்பதை அடையாளப்படுத்தும் கலாசாரம் அவரிடம் இருந்தது.
புகலிடத்தின் இலக்கிய வாழ்வில் நிறைய அவதானிப்புகளை வைத்தவர் திரு. குணசேகரம். இரண்டு தடவைகள் பிரான்சுக்கு வந்த வேளைகளில் அவர் எனது வீட்டிற்கு வந்துள்ளார். ஆம்! அவர் எமது வீட்டில் பாடிய பாடல்கள் கணீரமானவை. ஓர் புகலிடக் கூட்டத்தில் அவர் நாகரீகம் இல்லாமல் விமர்சிக்கப்பட்டதால் அவரை அங்கிருந்து சில இலக்கிய நண்பர்கள் வெளியேற வைத்தனர்.
“வடு”, இவரது வாழ்க்கை வரலாறு. இதனைக் “காலச்சுவடு” வெளியிட்டிருக்கின்றது. தமிழில் வந்த தலித் படைப்பாளியின் சிறப்பான வாழ்வுப் பதிவு எனச் சொல்லலாம். இந்தப் புத்தகம் Orient BlackSwan பதிப்பாளர் ஆங்கிலத்தில் The Scar எனும் தலைப்பில் குணசேகரத்தாலும் கோடாம்பாரியாலும் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டுள்ளது. “வடு”, தமிழில் இவரின் வாழ்வை இவரது மொழியால், பலருக்கு விளங்க வைக்கும் காத்திரமான புத்தகம் எனலாம்.
இவர் சில திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். “அழகி” “பாரதி” படங்கள் குறிப்பிடத்தக்கன. இவைகளில் அவரது பாத்திரம் மிகவும் காத்திரமானது.
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில், “உங்களது புது எழுத்துகள் மீது சொல்லமுடியுமா?” எனக் கேட்டேன். “காவிய எழுத்துகள் மீள் வாசிப்புக்கு உள்ளாகுதலும், அவைகளது அடிப்படைக் கருத்துகளைக் காணுதலும் அவசியம்” என்ற பின்னர் தனது காவிய எழுத்து நிலைகளைச் சில கணங்கள் சொன்னார். தமிழின் காவிய இலக்கியத் “தெளிவுரை”கள் தோதானதில்லாமலும், அவைகள் காவியங்களின் எதிர்ப்புத் தெளிவுரைகள் எனத் தோன்றியது என்பதை அவரது மொழிகள் எனக்குக் காட்டின. ஆம்! இந்த எதிர்ப்புத் தெளிவுரைகள்தாம் தமிழ்க் காவியங்களுக்குப் “புத்துரை” எழுதும் துணிச்சலை அவருக்கு ஊட்டியது. அதனது விளைவாக எழுந்ததே “பதிற்றுப் பத்து, மூலமும் ஆராய்ச்சிப் புத்துரையும், முனைவர், கரு.அழ. குணசேகரன்.” இவரினது இந்த ஆய்வு “உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்” வெளியிட்டது. இவரது ஆய்வுத் தமிழின் அழகை அறிய இந்தப் புத்தகம் பெரிதாகக் கொள்ளப்படலாம். இந்த நூலின் எழுத்து கவித்துவமானது.
இவரது மறைவு தமிழ் நாடக உலகிற்கு ஓர் பேரிழப்பு. இப்போதும் இவரது அழகிய சிரிப்பு என் முன் வருகின்றது. எளிமையைத் தனது வாழ்வில் எங்கும் காட்டிய மேதை. இவருக்கு எமது அஞ்சலிகள்.

Saturday, 23 January 2016

என் ஆசானும் தோழனுமான பேராசிரியர் கே.ஏ.குணசேகரனை வணங்குகிறேன்

என் ஆசானும் தோழனுமான பேராசிரியர் கே.ஏ.குணசேகரனை வணங்குகிறேன்
இருபது வருட நட்பு ,என் ஆசானாய் ,சகோதரனாய் தோழனாய் வாழ்ந்த என் உணர்வுகளில் கலந்து நிற்கும் கே.ஏ.ஜி யின் மரணம் நண்பர் அ.ராமசாமியின் பதிவின் மூலம் அறிந்து பதறி நிற்கிறது மனம். 25 நாட்களுக்கு முன் அவரை ராமச்சந்திரா மருத்துவமனையில் சந்தித்து வந்தேன்.எதை எழுதுவது நான் அவர் பக்கத்தில் கலங்கி நின்ற தருணம் அது. எனக்கு நம்பிக்கை தந்தார்.அவரது மணி விழா ஏப்ரல் மாதம் நடக்கும் வரவேண்டும் என கேட்டுக் கொண்டார் வருவேன் என்று நம்பிக்கையோடு வந்தேன்.நம்பிக்கைகள் தகர்ந்து நா தழுதழுக்க நிற்கிறேன் .தோழரே நானும் நீங்களும் பேசிக் கொண்டவைகள் எவ்வளவோ .பொங்கலன்று உங்களோடு பேசினேன் வழமையாக இடைவெளி விடாமல் பேசுவீர்கள் நான் இடையில் புகுந்து கதைப்பேன் ஆனால் முந்த நாள் சுகுமார் எனக்கு அசதியாயிருக்கு பிறகு பேசுவோம் என்றீர்கள் அதுதான் எனக்கும் உங்களுக்குமான கடைசி பேச்சு என நான் நினைக்கவில்லை.
என் குடும்பத்தின் மீது எத்தன அக்கறை உங்களுக்கு மகள் இறந்த போது இனிமேல் பாண்டிச்சேரி வந்திருங்கள் என்றீர்க்சள் இனி யாரிடம் போவேன்...
உங்கள் நினவுகளை சுமந்து .....நானும் என் மனைவியும் எப்போதும் சேர் என விழிக்கும் என் மகன் ......நாதியற்று நிற்கிறேன்...

நண்பரே! நடுங்கி நிற்கிறேன்.

நண்பரே! நடுங்கி நிற்கிறேன்.
==========================
இதுவும் உள்ளுணர்வுதானா? என்று தெரியவில்லை. இரண்டு மணிநேரத்திற்கு முன்னால் அந்தப் பெயரைத் தட்டச்சுச் செய்தேன். அந்த நேரத்தில் அந்தப் பெயருக்குரிய ஆளுமையின் மரணம் நிகழ்ந்திருக்கிறது. Sap Marx அவர்களின் முகநூல் பதிவொன்றில் நண்பர் கே.ஏ.குணசேகரன் அவர்கள் பற்றிய அந்தத் தகவலைப் பதிவு செய்தேன். இசையமைப்பாளர் இளையராஜா,அவர்கள் வழக்குத் தொடர்ந்தார் என்ற தகவலைச்சொன்னேன்.
இப்போது பாண்டிச்சேரியிலிருந்து அவரது மரணம் குறித்த தகவல்்வந்துவிட்டது.நான் முதுகலை படிக்கும்போதிலிருந்து அவரை எனக்குத் தெரியும். தியாகராசர் கல்லூரியில் முதுகலை படித்துவிட்டு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திற்கு முனைவர் பட்டத்திற்கு வந்தவர். கவிஞர் மீராவின் தொடர்பால் பேராசிரியரின் ஏற்பாட்டில் பல்கலைக்கழகத்தில் ஆய்வுப்பட்டத்திற்கு நுழைந்தார். ஆய்வாளராக வரும்போதே தமிழகம் அறிந்த பாடகர். எப்போதும் அவரது விடுதி அறையில் கட்சிக்காரர்கள், நாட்டுப்புறக்கலைஞர், பாடகர்கள் என ஒன்றிரண்டுபேர் விருந்தினர்களாக இருப்பார்கள். அவரது விடுதிக்கட்டணம் மற்றவர்களின் கட்டணத்தைப் போல இரண்டு மடங்குக்கும் மேல் இருக்கும். வருபவர்களையெல்லாம் விருந்தினர் பட்டியலில் இணைத்துச் சாப்பிடச்சொல்லி அனுப்புவார்.
அவரது குழுவினரோடு வெறும் கேட்பவனாகவே பயணம் செய்திருக்கிறேன்.போகும்போது மார்க்சியம், கலையின் சமூகப்பாத்திரம், விழிப்புணர்வூட்டுவதில் கலைஞர்களின் பங்களிப்பு எனப் பேசிக்கொண்டே போவோம். ஒருமுறை அவர் உடன் வரமுடியாத நிலையில் சத்தியமங்கலத்திற்குக் குழுவினரோடு வரும்படி சொல்லிவிட்டுப் போய்விட்டார். இரவு கச்சேரி தொடங்கி ஒரு இரண்டு மணிநேரம் கழித்து வந்தார். அதன்பிறகு இரண்டு மணி நேரம் பாட்டுக்கச்சேரியை நடத்தினார். அவரது திருமணத்திற்காகச் சிவகங்கை போய்க் கலந்துகொண்ட நாள் மறக்கமுடியாத நாள். மணமகனாகவும் பாடகராகவும் மாறிமாறித் தோன்றினார் மேடையில்.
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் இரண்டுபேரும் ஒரேநாளில் நாடகத்துறைக்குத் தேர்வுசெய்யப்பட்டோம். இருவரின் தேர்வும் எதிர்பாராத திருப்பத்தால் நிகழ்ந்தது. அதற்குமுன்பு அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த திரு ராஜு, திரு ஆறுமுகம் ஆகிய இருவரையும் மனதில் வைத்து நடத்தப்பெற்ற நேர்காணலில் நாங்கள் இருவரும் தேர்வு செய்யப்பட்டோம். அவர் இணைப்பேராசிரியராகவும் நாள் விரிவுரையாளராகவும் ஒரேநாளில் பணியில் சேர்ந்தோம்.
நாடகம் பற்றிப் பெரிதும் கருத்துவேறுபாடுகள் இருந்ததில்லை. , நாடகத்துறை நிர்வாகம் பற்றிய முரண்பாடுகள் இருவருக்கும் உண்டு. சண்டை போடுவேன். சிரித்துக்கொண்டே எதிர்கொள்வார். எட்டாண்டுகள் அங்கு பணியாற்றிவிட்டு நான் வெளியேறியபோது வாழ்த்தி அனுப்பியவர்களில் அவரும் ஒருவர். அதன் பிறகுப் பலதடவை துறையின் செயல்பாடுகளில் பங்கெடுக்க அழைத்தவர் அவர் தான் எப்போதும் உள்வாங்கும் குணத்தை வெளிப்படுத்துவார். மற்றவர்கள் பொறுப்புக்கு வரும்போது நிராகரிப்பார்கள்.
அவரது குரலே அவரது சொத்து. இடதுசாரி இயக்கங்களுக்காக அவரது குரல் மேடைதோறும் முழங்கியிருக்கிறது. தலித் இயக்கங்களின் ஆரம்ப வளர்ச்சியில் அவரது குரலாற்றிய பங்களிப்பு முக்கியமானது .நாட்டார்கலைகள் அனைத்தையும் பற்றி அனுபவ பூர்வமாக உரையாற்றக்கூடிய ஆளுமை. ஐரோப்பிய நாடுகளுக்கும் அமெரிக்காவும் சென்று கச்சேரிகள் செய்துள்ளார்; கட்டுரைகள் வாசித்துள்ளார். ஊடகம் இதழில் கத்தாரோடு நிகர்நிலைப்படுத்தி எழுதப்பற்ற கட்டுரையால் மனம் மகிழ்ந்தார்.
சமூக நிகழ்வுகளை நினைவுபடுத்தும் நாடக ஆக்கங்களை எழுதியவர். வட்டார வரலாறு, நாட்டார் நம்பிக்கைகள், கதைகள் எப்போதும் அவரது கவனத்தில் இருந்துகொண்டே இருந்தன. நாடக எழுத்திலிருந்து தன் வரலாற்றுக்குள்ளும் தனது பங்களிப்பைச் செய்தவர். வடு அவரது தன்வரலாற்றுப் புதினம். அவரது எழுத்து மற்றும் இயக்கத்தால் பலி ஆடுகள் முக்கியமான நாடகமாக உருவானது. தலித் அரங்கியலுக்கு அது ஒரு மைல்கல்.
அண்மையில் புதுச்சேரி போனபோது பார்க்கவில்லை. சென்னையில் மருத்துவமனையில் இருந்தார். லண்டனிலிருந்து அவரது மாணவரும் நண்பருமான பால.சுகுமார் Balasingam Sugumar வந்து பார்த்துவிட்டுப் பயமா இருக்கு ராமசாமி! என்று தொலைபேசியில் சொல்லிவிட்டு நடுங்கினார். அந்த நடுக்கம் எனக்கும் தொற்றிக் கொண்டது. நண்பரே இப்போது நான் நடுங்கியபடி இருக்கிறேன். பாண்டிச்சேரியே தூரம் தூரமாக விலகிக் கொண்டிருக்கிறது.நண்பரே! நடுங்கி நிற்கிறேன்

ஆழ்ந்த இரங்கல்!!!

ஆழ்ந்த இரங்கல்!!!
------------------------------
கே.ஏ.குணசேகரன் அவர்களது இறப்புச் செய்தி கேட்டு மிகவும் வேதனையாக இருக்கின்றது. பாண்டிச்சேரியில் அவரின் கீழ் மூன்று வருடங்கள் பயின்ற காலங்கள் மிகவும் அற்புதமானவை. எம்.ஏ. எம்.பில் படித்து முடிக்கும் வரை அவருடன் பழகிய நாட்கள் மறக்க முடியாதவை. அவருடைய 'பலி ஆடுகள்' நாடகத்தில் நடித்த அனுபவங்கள் மறக்கமுடியாதவை. அவருடைய வீட்டில் மொட்டைமாடி அறையில் தங்கி இருந்து பயின்ற காலங்கள் நினைவில் இருந்து நீங்காதவை.; அவரை நான்தான் இனுமதிக்கும் பொழுது அவருடன் இருந்தேன். இதுதான் அவருடன் இறுதியாக இருந்த தருணங்கள். அவரது சிறுநீரகம் செயலிழந்து அவருக்கு உடனே சிறுநீரக மாற்று சிகிச்சை செய்வதற்கு ராமச்சந்திரா மருத்துவமனையில அவரது இழப்பில் பரிதவிக்கும் அவரது குடும்பத்திற்கு அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதோடு, அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டிக்கொள்கின்றேன்.

அழகையா விமல்ராஜ். இலங்கை

என் குழந்தைகளுக்கு அவர் மாமா. எனக்கு இனிய தோழர்....

காலையில் அந்தத் துயரச் செய்தி..
தேம்பி அழுதவண்ணம் என் இளைய மகள் பாரதி. "குணசேகரன் மாமா செத்துபோயிட்டாருப்பா...." எனச் சொன்னபோது துடித்துப் போனேன்.
எத்தனை ஆண்டுப் பழக்கம்... ஒரு ஆய்வு மாணவனாய் முற்போக்கு எழுத்தாளர் சங்கக் கூட்டம் ஒன்றில் 70 களின் பிற்பகுதியில் சந்தித்தது.
என் 12/28 அம்மாலயம் சந்து (தஞ்சாவூர்) வீட்டில் அவர் தங்கி தன் ஆய்வேட்டை எழுதி முடித்தது...
அவருக்குப் பெண் பார்க்க நானும் மனைவியும் போனது..
தடைகளை மீறி அவர் தன் திருமணத்திற்கு வாழ்த்துரைக்க என்னை அழைத்தது...
எனது இரு மகள்களும் மிக அருமையாகப் பாடக்கூடியவர்கள் என்பதால் அவருடனும் சின்னப்பொண்ணு முதலிய அவர்களின் குழுவுடனும் தமிழக மெங்கும் இயக்கம் சார்ந்த இசை நிகழ்ச்சிகளில் பாடித் திரிந்தது....
பிற்காலத்தில் என் இளைய மகள் அவரிடமே முனைவர் ஆய்வுக்குச் சேர்ந்தது..
என் குழந்தைகளுக்கு அவர் மாமா. எனக்கு இனிய தோழர்....
**************************************************************************************
நட்டுப்புற இசையை தமிழகமெங்கும் கொண்டு சென்றவர்களில் முதன்மையானவர் கே ஏ ஜி. இன்குலாப்பின் "மனுசங்கடா.... நாங்க மனுசங்கடா.." பாடலை ஊரெங்கும் ஏன் உலகெங்கும் பரப்பியவர் அவர்.
என்னோடு அறையில் அமர்ந்திருப்பார். அப்போது அவர் அவ்வளவு அறிமுகம் ஆகியிராத காலம். யாராவது வருவார்கள். அறிமுகம் செய்து வைப்பேன். "ரொ......ம்ப நல்லா பாடுவார்" என்பேன். ஒரு பாட்டுப் பாடுங்க குணசேகரன் என்பேன். அடுத்த கணம் எந்தத் தயக்கமும் இல்லாமல் "வேளாரந்தக் காட்டுக்குள்ளே......." என இசை மழை பொழியும்.
அவரது சின்ன வயது வறுமையையும் ஊரின் சாதிக் கொடுமையையும் அவர் ஒரு குழந்தையைப்போலச் சொல்வார். பாண்டிச்சேரியில் அவரைச் சந்திக்கப் போகும்போதெல்லாம் ஏதேனும் ஒரு 'பாரில்' சில மணி நேரங்களைக் கழிப்புது வழக்கம். அப்போது தவறாமல் அவர் நினைவு கூறும் அந்தச் சம்பவம்.... நினைவில் வந்து நெஞ்சைஅலைக்கழிக்கிறது...
என் அன்பு குணசேகரன்... கடைசிச் சில ஆண்டுகளில் நம்மிடையே தொடர்புகள் குறைந்து போனபோதும்... தாள இயலவில்லை இந்தப் பிரிவு.....
ஏதேதோ நினைவுகள்....
நீங்கள் ஊட்டியிலிருந்து எனக்கு வாங்கி வந்த அந்த கருப்பு நாய்க்குட்டி...
இளையராஜா உங்கள் மீது வழக்குத் தொடர்ந்தபோது நீங்கள் அடைந்த வேதனை...
உங்களின் இசைத்தட்டு ஒன்றில் நான் முகப்புரை வழங்கிப் பேசியது, உங்கள் நூலொன்றுக்கு நான் முன்னுரை எழுதியது, எங்கிருந்த போதும் எத்தனை உயரத்திற்குச் சென்ற போதும் என்னைக் கண்ட இடத்தில் ஓடி வந்து என் கைகளைப் பற்றிக் கொள்ளும் உங்கள் அன்பு.....
கண்ணீருடன் விடை சொல்கிறேன்

மாக்ஸ் அன்தனிசாமி

உம் குரலையும் கலை ஆளுமையையும் கொஞ்சம் எமக்கு கடன் கொடு அண்ணா

நமது அண்ணன் கலை ஆளுமை முனைவர் கே .ஏ . குணசேகரன் அவர்களுக்கு புத்தர் கலைக்குழுவின் வீர வணக்கம்
சாதியின் பெயரால சண்ட - இது
சரி தானா சொல் மரமண்ட என பறை சத்தம் போன்று பாடுவாயே அண்ணா
மே சாதி கொடுமையிலே
வெட்டுப்பட்டா எங்க ஆத்தா எனும் உனது பாடலில் மே சாதிக்காரரும் மனிதம் வேண்டி வெடித்து அழுவாரே அண்ணா
மனுசங்கடா நாங்க மனுசங்கடா என நீ பாடினால் மனித உரிமை கோரிக்கையை மற்ற உயிரனங்கள் கூட ஏற்குமே அண்ணா
நாடக ஆக்கத்தில் நானிருக்கேன் என தலித் அரங்கின் தலைப்பறையாய் ,முன்னோடியாய் தடம் பதித்தாயே அண்ணா
நாட்டுப்புறவியலில் நாட்டமற்ற எங்களை சேரிப்புறவியல் எழுதி சேர்த்து அணைத்துக்கொண்டாயே அண்ணா இப்போது தனியாக விட்டுச்சென்றாயே அண்ணா
இன்றைய தினத்தந்தி நாளிதழில் வந்துள்ள புத்தர் கலைக்குழுவின் செய்திக்காக என்னை பாராட்ட அழைத்தவர்களெல்லாம் நாங்கள் உனை இழந்த செய்தியைச் சொல்லி அழவைக்க வேண்டியதாயிற்றே அண்ணா
திருப்பூரில் இன்று மாலை நமது புத்தரின் நிகழ்வில் உமது படத்திறப்பும்,நினைவேந்தலும் நடத்த உள்ளோம் அண்ணா
உம் குரலையும்
கலை ஆளுமையையும் கொஞ்சம் எமக்கு கடன் கொடு அண்ணா இந்த மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் கலை வழி களமாடுகின்றோம் உன் ஓய்வறியா பணிக்கு ஒட்டு மொத்த கலைஞர்களும் ஒரு சேர தாலாட்டு இசைக்கின்றோம் நீ ஆற்றிய பங்களிப்புக்கு வெற்றிப்பறையும் சாற்றுகின்றோம் நன்றி அண்ணா
- புத்தர் கலைக்குழு

அவரின் இழப்பு தமிழுக்கு ஈடு செய்யமுடியாதது.


புதுவை பல்கலைக்கழக நிகழ்த்துக்கலை பேராசிரியர் முனைவர் கரு.அழ. குணசேகரன் அவர்களின் இறப்பை கேட்டு அதிர்ந்தேன். என்னை நாடகக்கலை கற்றுக்கொள்ளுமாறு ஐயா வற்புறுத்தினார்கள். பண்பாளர், உழைப்பாளி, அவரைப்போல நிகழ்த்துக்கலையில் ஆளுமை கொண்டோர் சிலரே. அவரின் பாடல்களும், நாடகங்களும் எளியோரின் வாழ்வுபற்றியே இருந்தது. அவரின் இழப்பு தமிழுக்கு ஈடு செய்யமுடியாதது. 

கல்கி சுப்ரமணியம்frown emoticon

எங்கள் தோழனுக்கு இசை வணக்கம்.

இன்று கலை இலக்கிய இரவுகளுக்கு கூடும் கூட்டத்தைக்கண்டு நாம் வியந்துபோகிறோம்.ஆனால் திருவண்ணாமலையில் 1980 களின் துவக்கத்தில் இந்த கலை இலக்கிய இரவுகளை " கவிராத்திரி " என்ற பெயரில் நாங்கள் துவக்கியபோது அதற்கு வந்த கூட்டத்தின் எண்ணிக்கை ஐம்பதுக்கும் குறைவுதான்.அவர்களில் ஆகபெரும்பாலோர் அந்நிகழ்வில் கவிதை வாசிக்க வந்தவர்கள்தான்.
1982 டிசம்பரில் இலக்கிய இரவு என்றபெயரில் த மு எ ச வின் மாவட்ட மாநாடோடு இணைத்து காந்திசிலை எதிரில் இப்போதும் இருக்கும் வன்னியர் மடத்தில் நடத்தினோம்.அந்த நிகழ்வில் பாட்டுப்பாட கே.ஏ.குண்சேகரனை அழைத்திருந்தோம்.அன்று காலை மண்டபத்தில் ஏற்பாடுகளை செய்வதற்காக போனபோது மேளதாளங்களுடன் ஒரு பத்துபேர் தூங்கிக்கொண்டிருந்தனர்.அதில் குணசேகரனும் ஒருவர்.எழுப்பி விசாரித்தபோது நள்ளிரவில் வந்ததாகவும் இடத்தை விசாரித்துக்கொண்டு வந்து படுத்துட்டேன் தோழர் என்றார்.அருகிலிருந்தவர்களைக்காட்டி இவர்களெல்லாம் யாருங்க என்றோம்.சிரித்துக்கொண்டே நம்ம குழு தோழர்கள்தான் என்றார்.எங்களுக்கோ திகீர் என ஆனது.
பாட்டுப்பாட இவர் ஒருவரைத்தானே அழைத்தோம்..இவர் ஒரு பட்டாளத்தோடு வந்துவிட்டாரே...எப்பிடி பயணப்படி கொடுத்து சமாளிப்பது என குழம்பத்தொடங்கிவிட்டோம்.
அதுக்காக நிகழ்வை நிறுத்தமுடியுமா...வந்தவர்களை திருப்பியனுப்பமுடியுமா...ஒருத்தர் பாடினால் போதும்னு சொல்லத்தான் முடியுமா...சரி..நடப்பது நடக்கட்டும் என..மாநாட்டை முடித்து...மாலையில் இலக்கிய இரவை துவக்கினோம்.சம்பிரதாய பேச்சுக்கள் முடிந்து குண்சேகரன் மைக்கை பிடித்தார்..." சிவகங்கை சீமையிலே.." என உச்சஸ்யாயியில் பாடத்துவங்கினார்.என்ன மாயமோ மந்திரமோ...கூட்டம் ஜேஜேவென குவியத்துவங்கியது.அப்ப்புறம் கோட்டைச்சாமி ரவுண்டு கட்டினார்.அடுத்து மாரியம்மாவுடன் இணைந்து " பாவாட சட்ட கிழிஞ்சு போச்சுதேன்.." என உருக்கினார்கள. தவிலும் நாதஸ்வரமும் தப்பும் கலந்த புதிய இசையை அப்போதுதான் முதன்முறையாக கேட்கிறோம்.நாங்கள் மட்டுமல்ல..அந்த ஊரே இப்படியொரு இசையை ..பாடலை...வாழ்வியலை...சாதாரணமனிதர்களின் தரிசனத்தை..அப்போதுதான் முதன்முறையாக கேட்டு எளிய மனிதனின் வசீகரத்தில் சொக்குண்டு நின்றது.
எள் விழக்கூட இடமில்லாத அளவுக்கு கூட்டம் என்பதற்கான காட்சியை நேரில்கண்டு வியந்துபோனோம்.கூடவே கலை இலக்கிய இரவுகளுக்கு கூட்டத்தை சேர்ப்பதற்கான ரகசியத்தின் திறவுகோலையும் அந்த மகத்தான கலைஞன் கே.ஏ.குணசேகரன் வழியே கண்டடைந்தோம்.அடுத்த ஆண்டிலிருந்து கலை இலக்கிய இரவை தெருவுக்கு கொண்டுவந்ததற்கும்...அதில் மக்களை வசீகரித்து இழுத்து நிறுத்த மக்களின் பாடல்களை பயன்படுத்தியதற்கும் முதல் காரணமாயிருந்தவர் எங்கள் அன்பான கே ஏ ஜி.
அவரின் இசைத்தடத்தில் பயணிக்கும் எண்ணற்ற கலைஞர்களின் சார்பில்
எங்கள் தோழனுக்கு இசை வணக்கம்.உங்களின் ஆக்காட்டியும் பாவாட சட்டயும் என்றும் காற்றில் படபடத்துக்கொண்டேயிருக்கும் தோழரே


கருப்பு கருணா

கே.ஏ.குணசேகரன் இன்று சிந்திப்பதை நிறுத்தினார்

கே.ஏ.குணசேகரன் இன்று சிந்திப்பதை நிறுத்தினார்

1955 மேமாதம்இளையான்குடியில் பிறந்த கே.ஏ.ஜி நாடகத்திலும் தனது பாடல்களும் வெண்கல குரலால் விளிம்புநிலை மக்களின் வாழ்வின் மொழியை பிசைந்து தமிழுக்கு தந்தவர். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் பல கலை இரவுகள் அவரின் பாடல்கள் அலங்கரித்து இருக்கின்றன. தக்கலையில் ஆகஸ்ட் 15 விழாவில் அவர் பாடிய மனுசங்கடா என்ற பாடலும் சபரிமலை பாடலும் மறக்க முடியாதவை.ஒரு முறை எங்கள் கல்லூரியில் வந்து நாடகம் தொடர்பாக அவர் பேசிய உரையும் பாட்டும் காதுகளில் கேட்டு கொண்டே இருக்கிறது. அவர் எழுதிய வடு நாவல் தமிழுக்கு முக்கியமானது. காலம் தாண்டிய ஆளுமை கேஏ.ஜி. இறவாத புகழ் அவருக்கு உண்டு

நடா சிவகுமார்

Will miss you KAG Uncle!

Will miss you KAG Uncle! You are the icon of folkmusic for my generation. Even two days before, I was singing "Paavadai sattai kizhinju pochudhe" to a group of women, I was filming in Natham near Dindugal. You are my most beloved teacher and guide. Olaiyakka was the first song you taught me as a school kid.I still remember how my tears were swelling up like firedrops when I first heard you sing Manushangada. You always brought me cheer and hope with your music, smile and affection.
I will continue singing your songs, name and love!
(Prof.Dr.K.A.Gunaskeran, Dean, Department of Performing Arts, Pondicherry University, expired today morning)
Leena Manimekalai

மக்கள் பாடகன் இனி பாட மாட்டான்

மக்கள் பாடகன் இனி பாட மாட்டான்
***************************************************
முகநூலைத் திறந்ததும் தோழர் மார்க்ஸ் அவர்களின் தோழர் KAG அவர்களுக்கான இரங்கல்தான் கண்ணில் பட்டது.
இன்று காலைதான் தோழர் எஸ் ஏ பி அவர்கள் தோழர் KAG அவர்கள் குறித்து இரண்டு விஷயங்களைப் பதிவிட்டிருந்தார்.
1. தோழர் KAG திரு கக்கன் அவர்களின் பேரன் என்பது
2. ஒருமுறை தோழர் KAG அவர்கள் இளையராஜா அவர்களை தலித் ஆளுமையாக அடையாளப் படுத்தப் போக அதற்காக அவர்மீது வழக்குப் போடப் போவதாக எச்சரித்தது.
இந்த மாத காக்கைக்கு இளையராஜா பற்றித்தான் எழுதிக் கொண்டிருக்கிறேன்.
அனுப்பிவிட்டு தோழர் முத்தையாவோடு பேசும்போது இந்தத் தகவலையும் அவரோடு பகிர்ந்தேன். ஏன் இதை எழுதவில்லை. இதையும் சேர்த்து ஆவணப் படுத்துங்கள் என்றார். பக்கம் பற்றி கவலையே வேண்டாம் என்றும் சொன்னார்.
சேர்த்து விடுவோம் என்று கணினியை திறந்து, கட்டுரைக்குள் போவதற்குள் கொஞ்சூண்டு முகநூலை மேயலாமே என வந்தால் யாரைப் பற்றி எழுத வந்தேனோ அவர் இறந்து போனதாய் தகவல்.
அவரோடு இரண்டு கூட்டங்களில் பேசியிருக்கிறேன். அவர் கூட்டங்களுக்கு நிறைய போயிருக்கிறேன்.
தோழர்களின் துயரில் வலியில் பங்கேற்கிறேன்.
கண்கள் கசிய ‘ஆக்காட்டி ஆக்காட்டி’ போட்டுக் கேட்கிறேன்.
வேறென்ன செய்ய

இரா.எட்வின்

பிரபல நாட்டுப்புறக் கலைஞரும் புதுவை பல்கலைக்கழக நாடகத்துறை தலைவருமான கே.ஏ.குணசேகரன் காலமானார்

பிரபல நாட்டுப்புறக் கலைஞரும் புதுவை பல்கலைக்கழக நாடகத்துறை தலைவருமான கே.ஏ.குணசேகரன் காலமானார்:-

Bookmark and Share
பிரபல நாட்டுப்புறக் கலைஞரும் புதுவை பல்கலைக்கழக நாடகத்துறை தலைவருமான கே.ஏ.குணசேகரன் காலமானார்:-
 புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த பிரபல நாட்டுப்புறக் கலைஞரும் புதுவை பல்கலைக்கழக நாடகத்துறை தலைவருமான கே.ஏ.குணசேகரன் தன்னுடைய அறுபதாவது வயதில் காலமானார்.

தாழ்த்தப்பட்ட மக்களின் கலைகளை ஆற்றுகை செய்யும் அத்துறை தொடர்பில் ஆராய்ச்சிகளைச் செய்தும் அற்புதமான, ஒரு உன்னதமான நாட்டுப்புறக் கலைஞராக கே.ஏ. குணசேகரன் அறியப்பட்டவர்.

12.மே.1955 இல் சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகேயுள்ள மாரந்தை சிற்றூரில் பிறந்த குணசேகரன்  மதுரை தியாகராசர் கல்லூரி, மதுரை காமராசர் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் படித்தவர்.

நாட்டுப்புற நடனப் பாடல்கள் குறித்து குறித்து கலாநிதிப்பட்ட ஆய்வில் ஈடுபட்ட இவர் நாடகத்தைப் பற்றியும், நாட்டுப்புறவியலைப் பற்றியும் ஆய்வு நூல்களையும், ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும், பதினான்குக்கும் மேற்பட்ட படைப்பு நூல்களையும் எழுதியுள்ளார்.

சமஸ்கிருத அரங்கவியலுக்கு மாற்றாக, தலித் அரங்கவியல் என்னும் கோட்பாட்டை உருவாக்கியுள்ளார். 'பலி ஆடுகள்' என்னும் முதல் தலித் நாடகத்தைப் படைத்துள்ளார்.

'தன்னனானே' என்னும் கலைக்குழு வழியாகச் சமூக பிரச்சினைகளை மையமாகக் கொண்ட நாடகங்களை அரங்கேற்றி வந்தார். இவர் எழுதிய 'நாட்டுப்புற மண்ணும் மக்களும்'.என்னும் நூலுக்குத் தமிழக அரசின் சிறந்த நுண்கலை நூலாசிரியர் விருது வழங்கப்பட்டது.

இதேவேளை நாடகத் துறைக்காகப் புதுவை அரசின் கலைமாமணி விருது,
மதுரை கிருத்தவ கலைத் தொடர்பு மையத்தின் சார்பில் 1994ஆம் ஆண்டு சதங்கை விருது ஆகியனவும் இவருக்கு வழங்கப்பட்டன.

இவருடைய ஏய் ஆக்காட்டி ஆக்காட்டி என்ற பாடல் தமிழ் சூழலில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்தப் பாடலை இவரது அனுமதியின்றி தவமாய் தவமிருந்து படத்தில் பயன்படுத்தப்பட்டு பின்னர் தடைசெய்யப்பட்டது.
தலித் கலை இலக்கிய எழுச்சியின் அடையாளம் முனைவர் கே.ஏ.குணசேகரன் மறைந்தார்
~~~~~~~~
நாட்டுப்புற இசைக் கலைஞரும் புதுச்சேரி பல்கலைக்கழக நாடகத்துறை பேராசிரியருமான முனைவர் கே.ஏ.குணசேகரன் உடல்நலக் குறைவால் இன்று புதுச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

நீரிழிவு நோயின் காரணமாக சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு அண்மையில் சிறுநீரகமாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அதன்பின்னர் ஏற்பட்ட தொற்றின் காரணமாக அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது. இன்று திடீரென அவர் உயிர் பிரிந்தது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மேடைகளைத் தனது ஆற்றல்மிகு குரலால் எழுச்சிகொள்ள வைத்தவர். தமிழ்நாட்டில் தலித் பண்பாடு, இலக்கியம் குறித்த முன்முயற்சிகளை 1990 களின் துவக்கத்தில் நானும் சில தோழர்களும் முன்னெடுத்தபோது எங்களோடு எல்லா களங்களிலும் இணைந்து நின்றவர். தலித் பண்பாட்டு அரசியல் வரலாற்றில் அவரது 'மனுசங்கடா' ஒலிநாடாவுக்கும் 'பலி ஆடுகள்' நாடகத்துக்கும் முக்கியமான இடம் உண்டு.

இன்று தி இந்து நாளேட்டின் சார்பில் நடைபெற்றுவரும் இலக்கிய விழாவில் இன்று மாலை நான், அவர், நீதியரசர் கே.சந்துரு, எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் ஆகியோர் கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்குள் இப்படியொரு செய்தி வந்துவிட்டது.

தலித் கலை இலக்கிய எழுச்சியின் அடையாளமான கே.ஏ.ஜிக்கு என் அஞ்சலி