Tuesday, 16 February 2016

ஒடுக்கப்பட்டோரின் உணர்வாய், உடலாய் அரங்கில் அதிர்ந்த உயிர் - கே.ஏ.ஜி

நினைவில் உறைந்திருக்கும் உயிர்கள் மரணிக்கும்போது, நினைவுத்தப்பாமல் உயிருள்ளவர்க்குதான் வேதனை என்பதை நமக்கு ஆழமாகப் புரிய வைத்திருக்கிறது
கே.ஏ.ஜி யின் மரணம். கே.ஏ.ஜி என்றழைக்கப்படும் கரு.அழ. குணசேகரன் அவர்களின் உயிர் 17.01.2016 அன்று அவர் உடலைவிட்டு பிரிந்தது என்ற செய்தி என் தொலைபேசிக்கு வந்தது. நான் அப்போது நாக்பூர் ரயில் நிலையத்தில் சென்னை ரயிலுக்காக எங்கள் நாடகக் குழுவினருடன் காத்திருந்தேன். சத்தீஸ்கர் மாநிலத்தில் நாடகம் நிகழ்த்திவிட்டு வரும் எங்கள் குழுவினருடன், தொலைபேசி செய்தி வந்த வேலையில் வேறு யாரைப்பற்றியாவதோ அல்லது ஏதாவது நாடகத்தைப் பற்றியோ நான் பேசியிருப்பேன் எனில் நான் இந்தக் கட்டுரையை நிச்சயம் எழுதியிருக்கமாட்டேன். புதுச்சேரியைச்சார்ந்த தவில் கலைஞர் கலைமாமணி தட்சிணாமூர்த்தி கே.ஏ.ஜி யின் தன்னானே குழுவின் நிரந்தர உறுப்பினர், பலியாடுகள் நாடகத்தின் இசை ஒருங்கிணைப்பாளர் மற்றும் நாட்டுப்புறக்கச்சேரிகளில் தவில் வாசித்தவர். அவருடன்தான் அந்த காலை வேலையில் கே.ஏ.ஜி யின் அசாத்திய துணிச்சலும் தொடர் கலைச்செயல்பாடுகள் பற்றியும் பேசிக்கொண்டிருந்தேன்.
ஆம், பேசிக்கொண்டிருக்கும்போதுதான் தொலைபேசி மணி அடித்தது. பேசிக்கொண்டிருந்ததை துண்டித்துக் கொண்டு தொலைபேசிக்குக் காது கொடுத்தவாறு சில அடி நடந்தேன். எதிர்முனையில் தோழர் அன்புச்செல்வம் தயங்கியபடி, கே.ஏ.ஜி தவறிவிட்டதாகச் செய்தி வந்ததே உண்மையா? என்றார். வேறு எதுவும் அவருக்கு பதில் சொல்லவில்லை. இப்போதுதான் அவர் செயல்பாடுகள் குறித்துப் பெசிக்கொண்டிருந்தோம், என்றேன். தோழர், புரிந்துகொண்டதுபோல, நீங்கள் பயணத்தில் இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன் என்றார். நான் சுதாரித்துக்கொண்டு, தோழர், நான் புதுச்சேரியில் இருக்கும் நாடக நண்பர்களிடம் பேசிவிட்டு உங்களுக்கு மீண்டும் பேசுகிறேன் என்றேன். ஒரு பத்து நிமிடம் யாரிடமும் பேச இயலவில்லை. ஒரு கலைஞனின் மரணம் இன்னொரு கலைஞனை எவ்விதத்தில் உறைந்து போகுமளவிற்குப் பாதிக்கிறது? இறந்தவர் வகித்த பதவி, அனுபவத்தில் மூத்தோர் என்பதிலெல்லாம் இல்லை. கலைவெளியில் அவன் முன்னே அசைந்த, அந்த கலையாளி ஏற்படுத்தும் அதிர்வுகளில் அதிர்ந்து தன் கலைக்கான நியாயங்களை எவ்வித சமரசமும் இல்லாமல் செய்துவிடுவது என்பதை நான் அவரிடம் கற்றதே காரணமாகும்.
ஆம், என்னுடைய ஓவியக்கல்லூரிக்காலங்களில் நிகழ்த்துக்கலைகளின் மீதிருந்த தீராக்காதலால் வாய்ப்பு கிடைக்கும் இடங்களிலெல்லாம் பார்வையாளனாகப் போய் அமர்ந்துவிடுவேன். அப்படி புதுச்சேரி தொலைக்காட்சி நிலையத்தில் நிகழ்த்தப்பட்ட நாட்டுப்புற பாடல்கள் கச்சேரி. அங்குதான் கே.ஏ.ஜி யை முதன்முதலில் நேரில் பார்க்கிறேன்.
”ஆடும் வயித்துக்கு மேஞ்சிருக்கு
பசு மாடும் வயித்துக்கு மேஞ்சிருக்கு
ஆட்டையும் மாட்டையும் மேச்சவன் வயிறு…
ஆல இலைபோல காஞ்சிருக்கு…”
பாடினார். அவர் குரலும், அவ்வரிகளை வழங்கிய விதமும் என்னுள் ஒட்டிக்கொண்டது. நான் தொடர்ந்து அவரை, அவர்பற்றியான பத்திரிக்கைச் செய்திகள் வழியாகவும், ’தேவதை’ திரைப்படத்தின் வாயிலாகவும் அவரைத் தொடர்ந்தவாறாக இருந்தேன். அதே சமயம் பல்கலைக்கழக நாடகத்துறையில் மாணவர்களின் நாடகங்களில் நடிக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு அவர் இருந்த இடங்களில் என் இருப்பைத் தக்க வைத்துக்கொண்டேன். பின் முதுகலையில் நாடகம் படிக்க, அவர் தலைமையேற்றிருந்த சங்கரதாஸ் நிகழ்கலைப்பள்ளியில் சேர்ந்தேன். இரண்டு மாதம் நாட்டிய சாஸ்திரம் மற்றும் நாட்டுப்புற பாடல்கள் பற்றி பாடம் எடுத்தார். அவ்வளவுதான். மூன்றாம் மாதம் தேசிய நாடகப்பள்ளியின் நிதி உதவியுடன் கே.ஏ.ஜி தனது ’தன்னானே’ நாடகக்குழுவின் ஒருங்கிணைப்பில் ஒரு மாத நாடகப் பயிற்சிப் பட்டறையை நடத்தினார். அதில் பெற்ற பயிற்சியே இப்போது நாடகக்காரனாய் நான்.
முக்கியமாய் அப்பட்டறைக்கானப் பயிற்சியாளர்களை அவர் திட்டமிட்டு வரவழைத்தது. s.p. சீனிவாசன், ராமானுஜம், கர்நாடகாவைச் சார்ந்த பசுவலிங்கையா, கேரளாவைச் சார்ந்த துளசிதர், வேலுசரவணன் இன்னும் பிறர். இன்னொரு பக்கம் தப்பாட்டப் பயிற்சிக்கு தஞ்சாவூர் ரங்கராஜன், பம்பை மற்றும் உடுக்கைக்கு புதுவை ஞானராஜ், செவ்வியல் நடனத்துக்கு ராஜமாணிக்கம் அப்படின்னு பெரிய லிஸ்ட். தினமும் புதிது புதிதாய் பயிற்சிகள், பாடங்கள். பத்து நாள் கழித்து ‘பலியாடுகள்’ பிரதி வாசிப்பு மற்றும் ஒத்திகை தொடங்கியது. அப்போதுதான் கே.ஏ.ஜி அந்த ஒத்திகை தளத்தை முழுமையாக தனதாக்கிக் கொண்டார். ஆம் பிரதி வாசிப்பின்போதே அப்பிரதியினுள் அடைபட்டுக்கொண்டிருக்கும் பல்லாயிரம் ஒடுக்கப்பட்ட உடல்களை பல்வேறு சுய அனுபவங்களின் வழி நடிகர்களுடன் பகிர்ந்துக்கொண்டார். அப்படி அவர் அப்பிரதியை ஒத்திகை நோக்கி நகர்த்தியதன் விளைவாக கே.ஏ.ஜி எனும் சமூக அக்கறை மிகுந்த கலைஞனின் படைப்பாளுமைத் தெரிய ஆரம்பித்து. பல ஆய்வாளர்களால் தலித் நாடகமாக மட்டும் பார்க்கப்படும் ‘பலியாடுகள்’ எனும் பிரதியினுள் ஒரு சார்பு நிலை மட்டுமின்றி, ஒடுக்கப்பட்டோர்கள் என தலித்துகள், பெண்கள் மற்றும் திருநங்கைகள் போன்ற விளிம்பு நிலை மனிதர்களை அவர் அப்பிரதியினுள் முன்வைத்திருப்பார்.
” ஆம்பளைங்கெல்லாம் சேர்ந்து இப்படி ஒரு பொம்பளைய பலி செய்யப் பாக்குறீங்களே… பொம்பளைங்க என்ன பாவம் பண்ணாங்க? பர சாதிலும் கேவலப்பட்ட சாதியா இந்த பெண் சாதி … பொம்பளைங்கள ஏந்தான் இப்படி கிள்ளுக்கீரையா நெனச்சிருக்கீங்க? பெண் பாவம் உங்கள சும்மா விடாது”
என ஒரு திருநங்கைப் பாத்திரத்தை பேச வைத்திருப்பார்., குறித்து யோசிக்கும் வேளையில்,இந்நாடகம் உருவான காலத்தினைக் கணக்கில் எடுத்துக்கொண்டால் இந்த துணிச்சல் மிக மிக அதிகம். அப்படியான அப்பிரதியினுள் நான் ஒடுக்கப்பட்டோர் குழுவில் ஒருவனாக நடித்தேன், உணர்ந்தேன். அந்நாடக நிகழ்விற்குப்பின் என்னை நம்பிக்கைமிக்க நடிகனாக ஏற்றுக்கொண்டு அப்பார்வையிலேயே என்னை அனுகினார். அதன் காரணமே அவரை நான் ஆசிரியராகப் பார்க்கத்தொடங்கினேன்.
அவரிடமிருந்த ஆசிரியர் குணத்தில் இன்னொரு சிறப்பம்சம் ஒன்று உண்டு. அது, நாடகக் கல்வி பயிலும் மாணவர்கள் அவரைப் போலவே வாசிப்பதிலும், எழுதுவதிலும் தேர்ச்சியுற்றவர்களாக இருக்க வேண்டும் என்று விரும்புபவர். விரும்புபவதோடு மட்டுமின்றி அதற்கு தூண்டுகோலாகவும் இருப்பார். முதுகலை முதலாண்டு பயிலும் போதே என் நடிப்பு மற்றும் வாசிப்பு முயற்சிகளைப் பாராட்ட ஆரம்பித்த கே.ஏ.ஜி மறைமுகமாகவே என்னை எழுதவும் தூண்டினார். எப்படியெனில், ஓவியக்கல்லூரியிலிருந்து நாடகத்துறைக்கு வரும் எந்தவொரு மாணவருக்கும் எழுதவே வராது. ஏனென்றால் நீங்களெல்லாம் வாசிக்கும் பழக்கத்திற்காட்படாமல் இருப்பதுதான் காரணம் என்பார். அதை என்னைப் பார்க்கும் நேரங்களிலெல்லாம் சொல்லிக்கொண்டே இருப்பார். நடிப்பைத் தொடர்ந்து நாடகங்கள் எழுத ஆரம்பித்த எனக்கு அவருடைய வார்த்தைகள் சவாலாகவே முதலில் பட்டது. சவாலாகவே நாடகக் கட்டுரைகள் எழுத ஆரம்பிதேன். அவையெல்லாம் அவர் கண்ணில் பட்டுக்கொண்டே இருந்தது. சில கட்டுரைகள்பற்றி வகுப்பறையிலேயே கூட உதாரணம் கூறி பேசத்தொடங்கினார். ஒரு வளர்நிலை மாணவருக்கு இப்படி உற்சாகப்படுத்தலையெல்லாம்விட வேறென்ன வேண்டும்.
இளமுனைவர்பட்ட ஆய்வு தொடர்பாக பேசிக்கொண்டிருக்கும் போதுதான், கலைஞர்கள் தன் அனுபவத்தையும், பார்வைகளையும் அந்தந்த காலத்திலேயே பதிவு செய்வதுதான் அதிகாரத்திற்கு எதிராக செயல்பட நினைக்கும் கலைஞர்களி ன் கையிலிருக்கும் ஒரே அரசியல் ஆயுதம் என்றார். அது மேலெழுந்தவாரியான வார்த்தைகள் அல்ல, அதனுள் மறைந்திருந்த வலியும் வடுவும் அப்போதுதான் எனக்கு தெரிய ஆரமித்தது. ஆம் அவருடைய சுயசரிதை நூலான ‘வடு’ அதைத்தான் இந்த ஏற்றதாழ்வுகள் நிறைந்த உலகிற்குச் சொல்லியது. இல்லையெனில் யார் ஒரு தலித் கலைஞனின் ஒடுக்கப்பட்ட வாழ்வைப் பற்றியும் அவர் கலையுலகிற்கு வந்த பாதைகளையும் பற்றி எழுதியிருப்பார்கள் இத்தமிழ் மண்ணில்? ‘ஒடுக்கப்பட்டோர் அரங்கியல்’ எனும் புத்தகம் தமிழுக்கு எப்படி கிடைத்திருக்கும்? இதுதானே ஆசிரியர்தனம்! ஆம் தொடர் போராட்டங்களுக்கிடையில் சிக்கி திணறி குறிக்கோளென விடாமுயற்சியில் வந்தடைந்த இடமல்லவா இந்த பல்கலைக்கழக நாற்காலி. அதற்கு அவர் அதிகமாகவே செய்தார் தன் ஆய்வுக் கட்டுரைகளாலும் பயிற்சிப்பட்டறைகளாலும் கருத்தரங்களாகவும் என செயல்பட்டுவிட்டார். உடன் அமர்ந்த நாற்காலியில் இருந்தவர்கெல்லாம் சேர்த்து.
ஆய்வு வழிகாட்டியாக அவர் என்னிடம் வேலைவாங்கிய அனுபவங்கள், பெரும் பொக்கிஷம் போன்ற கணங்கள். ஆம், அளவாக ஆய்வை எல்லையை அமைத்துக்கொள்ளல், எளிமையான மொழியைக் கையாளுதல், நேரத்திற்குள் ஆய்வை முடித்துக்கொள்ளல், வாய்மொழித்தேர்வில் தெளிவாக பதிலளித்தல் போன்றவற்றை முன்னிருத்தி வழி நடத்தும் ஒருவர் புதுவைப் பல்கலைக்கழக நாடகத்துறையில் இருந்தார் என்றால் கே.ஏ.ஜி என்ற ஒரு போராசிரியர் மட்டுமே. இது மிகையில்லை, அல்லல்படும் அத்தனை ஆய்வு மாணவர்களின் ஒரே குரல். கே.ஏ.ஜி மகான் அல்ல, மனிதர்தானே! அதுவும் துடிப்போடு இயங்கிய கலைஞன். அவருக்கு மாணவர்கள் மீதும் சக ஆசிரியர்கள் மீதும் கோபம் ஏற்பட்டதெல்லாம் இயல்பாகவே நான் பார்க்கிறேன்.
நானும் அவருடைய கோபத்திற்கு ஆளாகியிருக்கிறேன். அதெல்லாம் அவருக்கும் எனக்கும் இடையில் இருந்த இடைத்தரகர்களால் ஏற்படுத்தப்பட்டது, அதுதான் உண்மை அ வ்வளவுதான். அவருடைய இறுதி காலங்களிலும் அவருக்கு மன உளைச்சல் அல்லது அவரால் மன உளைச்சலுக்கு ஆளானோர் என்றால், அது அவரால் காரியம் சாதிக்கக் காத்திருந்த இடைவெட்டித் தரகர்களால்தான். அவர் மறக்கும் மன நிலையிலேயேதான் இருப்பார். அதனால்தான் அவரால் தொடர்ந்து படைப்புகளை விதைத்துக்கொண்டே இருக்க முடிந்தது.
ஆம், அப்படித்தான் என்மேல் அவருக்கிருந்த கோபம் கலைவெளியில் கரைந்த தருணமும் என் அனுபவத்தில் பொதிந்துள்ளது. கோப இடைவெளியில் ஒரு நாள் அவரே தொலைபேசியில் தொடர்புகொண்டார். வாங்கயா,’தொடு’ நாடகம் ஒரு கலை இரவில் நிகழ்த்தவேண்டியிருக்கு, நான் சென்னையில் இருக்கிறேன். நீங்கள் முன்னிருந்து ஒத்திகையை வழி நடத்திச் செல்லவேண்டும், என்றார். நானும் உடனே சென்று வேலை செய்து கொடுத்தேன். மேலும் அந்த கலை இரவிலே தனி நபர் நாடகமாக ஒரு பிரதியை நிகழ்த்தவும் என்னிடம் கேட்டுக்கொண்டார். நானும் என் மனைவியும் ’வலி’ என்றொரு நாடத்தை நிகழ்த்திவிட்டு வந்தோம். இதுவா கோபம்? அந்த நெகிழ்வுத்தன்மையே கே.ஏ.ஜி யை மேலும் என் நினைவு அடுக்கில் மிக பத்திரமாக வைத்திருக்கிறது. இனி ஒரு கலகக்காரக் கலைஞனுக்காக எத்தனை ஆண்டுகள் தமிழ் நாடகப் பரப்பு எதிர்பார்ப்போடு காத்திருக்கப்போகிறது என்று தெரியவில்லை. கல்வி நெறியுடன் கலைப்பாடத்தைக் கட்டமைத்து வகுப்பெடுக்கப்போகிற போராசிரியருக்காக என்னும் எவ்வளவு காலம் புதுச்சேரி பல்கலைக்கழக நிகழ்கலைத்துறை காத்திருக்கப்போகிறது என்பதும் தெரியவில்லை. உடனிருந்துப் பார்த்த இன்பவியல் நாடகம் முடிவில் துன்பவியலை முன்வைத்து முடித்ததுபோல் சட்டென காட்சியாகிவிட்டது கே.ஏ.ஜி யின் மரணம். ஆனால் நாட்டுப்புற பாடகர், நாட்டாற்துறை ஆய்வாளர், நடிகர், நாடக ஆசிரியர், இயக்குனர், பேராசிரியர் என தான் காலூன்றிய இடமெல்லாம் தன் பங்களிப்பால் எக்காலத்திற்கும் உயிர்த்திருப்பார் கே.ஏ.ஜி. கலையில் ஒடுக்கடுப்படுவோர் குரலில், எழுத்தில், ஆய்வில், நடிப்பில் என இனிவரப்போகும் உண்மைக் கலைஞர்களின் வழி உயிர்துளிர்ப்பார், ஆம், தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் சமாதியின் அருகாமைக்கே சென்று புதைந்திருக்கும் கே.ஏ.ஜி யால் சங்கரதாஸரைப் போல கலைஞர்களின் ஞாபக இடுக்குகளில் வளர்ந்து விருட்சமாக முடியாதா என்ன?
கோபி புதுச்சேரி

No comments:

Post a Comment