Tuesday, 16 February 2016

ஒடுக்கப்பட்டோரின் உணர்வாய், உடலாய் அரங்கில் அதிர்ந்த உயிர் - கே.ஏ.ஜி

நினைவில் உறைந்திருக்கும் உயிர்கள் மரணிக்கும்போது, நினைவுத்தப்பாமல் உயிருள்ளவர்க்குதான் வேதனை என்பதை நமக்கு ஆழமாகப் புரிய வைத்திருக்கிறது
கே.ஏ.ஜி யின் மரணம். கே.ஏ.ஜி என்றழைக்கப்படும் கரு.அழ. குணசேகரன் அவர்களின் உயிர் 17.01.2016 அன்று அவர் உடலைவிட்டு பிரிந்தது என்ற செய்தி என் தொலைபேசிக்கு வந்தது. நான் அப்போது நாக்பூர் ரயில் நிலையத்தில் சென்னை ரயிலுக்காக எங்கள் நாடகக் குழுவினருடன் காத்திருந்தேன். சத்தீஸ்கர் மாநிலத்தில் நாடகம் நிகழ்த்திவிட்டு வரும் எங்கள் குழுவினருடன், தொலைபேசி செய்தி வந்த வேலையில் வேறு யாரைப்பற்றியாவதோ அல்லது ஏதாவது நாடகத்தைப் பற்றியோ நான் பேசியிருப்பேன் எனில் நான் இந்தக் கட்டுரையை நிச்சயம் எழுதியிருக்கமாட்டேன். புதுச்சேரியைச்சார்ந்த தவில் கலைஞர் கலைமாமணி தட்சிணாமூர்த்தி கே.ஏ.ஜி யின் தன்னானே குழுவின் நிரந்தர உறுப்பினர், பலியாடுகள் நாடகத்தின் இசை ஒருங்கிணைப்பாளர் மற்றும் நாட்டுப்புறக்கச்சேரிகளில் தவில் வாசித்தவர். அவருடன்தான் அந்த காலை வேலையில் கே.ஏ.ஜி யின் அசாத்திய துணிச்சலும் தொடர் கலைச்செயல்பாடுகள் பற்றியும் பேசிக்கொண்டிருந்தேன்.
ஆம், பேசிக்கொண்டிருக்கும்போதுதான் தொலைபேசி மணி அடித்தது. பேசிக்கொண்டிருந்ததை துண்டித்துக் கொண்டு தொலைபேசிக்குக் காது கொடுத்தவாறு சில அடி நடந்தேன். எதிர்முனையில் தோழர் அன்புச்செல்வம் தயங்கியபடி, கே.ஏ.ஜி தவறிவிட்டதாகச் செய்தி வந்ததே உண்மையா? என்றார். வேறு எதுவும் அவருக்கு பதில் சொல்லவில்லை. இப்போதுதான் அவர் செயல்பாடுகள் குறித்துப் பெசிக்கொண்டிருந்தோம், என்றேன். தோழர், புரிந்துகொண்டதுபோல, நீங்கள் பயணத்தில் இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன் என்றார். நான் சுதாரித்துக்கொண்டு, தோழர், நான் புதுச்சேரியில் இருக்கும் நாடக நண்பர்களிடம் பேசிவிட்டு உங்களுக்கு மீண்டும் பேசுகிறேன் என்றேன். ஒரு பத்து நிமிடம் யாரிடமும் பேச இயலவில்லை. ஒரு கலைஞனின் மரணம் இன்னொரு கலைஞனை எவ்விதத்தில் உறைந்து போகுமளவிற்குப் பாதிக்கிறது? இறந்தவர் வகித்த பதவி, அனுபவத்தில் மூத்தோர் என்பதிலெல்லாம் இல்லை. கலைவெளியில் அவன் முன்னே அசைந்த, அந்த கலையாளி ஏற்படுத்தும் அதிர்வுகளில் அதிர்ந்து தன் கலைக்கான நியாயங்களை எவ்வித சமரசமும் இல்லாமல் செய்துவிடுவது என்பதை நான் அவரிடம் கற்றதே காரணமாகும்.
ஆம், என்னுடைய ஓவியக்கல்லூரிக்காலங்களில் நிகழ்த்துக்கலைகளின் மீதிருந்த தீராக்காதலால் வாய்ப்பு கிடைக்கும் இடங்களிலெல்லாம் பார்வையாளனாகப் போய் அமர்ந்துவிடுவேன். அப்படி புதுச்சேரி தொலைக்காட்சி நிலையத்தில் நிகழ்த்தப்பட்ட நாட்டுப்புற பாடல்கள் கச்சேரி. அங்குதான் கே.ஏ.ஜி யை முதன்முதலில் நேரில் பார்க்கிறேன்.
”ஆடும் வயித்துக்கு மேஞ்சிருக்கு
பசு மாடும் வயித்துக்கு மேஞ்சிருக்கு
ஆட்டையும் மாட்டையும் மேச்சவன் வயிறு…
ஆல இலைபோல காஞ்சிருக்கு…”
பாடினார். அவர் குரலும், அவ்வரிகளை வழங்கிய விதமும் என்னுள் ஒட்டிக்கொண்டது. நான் தொடர்ந்து அவரை, அவர்பற்றியான பத்திரிக்கைச் செய்திகள் வழியாகவும், ’தேவதை’ திரைப்படத்தின் வாயிலாகவும் அவரைத் தொடர்ந்தவாறாக இருந்தேன். அதே சமயம் பல்கலைக்கழக நாடகத்துறையில் மாணவர்களின் நாடகங்களில் நடிக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு அவர் இருந்த இடங்களில் என் இருப்பைத் தக்க வைத்துக்கொண்டேன். பின் முதுகலையில் நாடகம் படிக்க, அவர் தலைமையேற்றிருந்த சங்கரதாஸ் நிகழ்கலைப்பள்ளியில் சேர்ந்தேன். இரண்டு மாதம் நாட்டிய சாஸ்திரம் மற்றும் நாட்டுப்புற பாடல்கள் பற்றி பாடம் எடுத்தார். அவ்வளவுதான். மூன்றாம் மாதம் தேசிய நாடகப்பள்ளியின் நிதி உதவியுடன் கே.ஏ.ஜி தனது ’தன்னானே’ நாடகக்குழுவின் ஒருங்கிணைப்பில் ஒரு மாத நாடகப் பயிற்சிப் பட்டறையை நடத்தினார். அதில் பெற்ற பயிற்சியே இப்போது நாடகக்காரனாய் நான்.
முக்கியமாய் அப்பட்டறைக்கானப் பயிற்சியாளர்களை அவர் திட்டமிட்டு வரவழைத்தது. s.p. சீனிவாசன், ராமானுஜம், கர்நாடகாவைச் சார்ந்த பசுவலிங்கையா, கேரளாவைச் சார்ந்த துளசிதர், வேலுசரவணன் இன்னும் பிறர். இன்னொரு பக்கம் தப்பாட்டப் பயிற்சிக்கு தஞ்சாவூர் ரங்கராஜன், பம்பை மற்றும் உடுக்கைக்கு புதுவை ஞானராஜ், செவ்வியல் நடனத்துக்கு ராஜமாணிக்கம் அப்படின்னு பெரிய லிஸ்ட். தினமும் புதிது புதிதாய் பயிற்சிகள், பாடங்கள். பத்து நாள் கழித்து ‘பலியாடுகள்’ பிரதி வாசிப்பு மற்றும் ஒத்திகை தொடங்கியது. அப்போதுதான் கே.ஏ.ஜி அந்த ஒத்திகை தளத்தை முழுமையாக தனதாக்கிக் கொண்டார். ஆம் பிரதி வாசிப்பின்போதே அப்பிரதியினுள் அடைபட்டுக்கொண்டிருக்கும் பல்லாயிரம் ஒடுக்கப்பட்ட உடல்களை பல்வேறு சுய அனுபவங்களின் வழி நடிகர்களுடன் பகிர்ந்துக்கொண்டார். அப்படி அவர் அப்பிரதியை ஒத்திகை நோக்கி நகர்த்தியதன் விளைவாக கே.ஏ.ஜி எனும் சமூக அக்கறை மிகுந்த கலைஞனின் படைப்பாளுமைத் தெரிய ஆரம்பித்து. பல ஆய்வாளர்களால் தலித் நாடகமாக மட்டும் பார்க்கப்படும் ‘பலியாடுகள்’ எனும் பிரதியினுள் ஒரு சார்பு நிலை மட்டுமின்றி, ஒடுக்கப்பட்டோர்கள் என தலித்துகள், பெண்கள் மற்றும் திருநங்கைகள் போன்ற விளிம்பு நிலை மனிதர்களை அவர் அப்பிரதியினுள் முன்வைத்திருப்பார்.
” ஆம்பளைங்கெல்லாம் சேர்ந்து இப்படி ஒரு பொம்பளைய பலி செய்யப் பாக்குறீங்களே… பொம்பளைங்க என்ன பாவம் பண்ணாங்க? பர சாதிலும் கேவலப்பட்ட சாதியா இந்த பெண் சாதி … பொம்பளைங்கள ஏந்தான் இப்படி கிள்ளுக்கீரையா நெனச்சிருக்கீங்க? பெண் பாவம் உங்கள சும்மா விடாது”
என ஒரு திருநங்கைப் பாத்திரத்தை பேச வைத்திருப்பார்., குறித்து யோசிக்கும் வேளையில்,இந்நாடகம் உருவான காலத்தினைக் கணக்கில் எடுத்துக்கொண்டால் இந்த துணிச்சல் மிக மிக அதிகம். அப்படியான அப்பிரதியினுள் நான் ஒடுக்கப்பட்டோர் குழுவில் ஒருவனாக நடித்தேன், உணர்ந்தேன். அந்நாடக நிகழ்விற்குப்பின் என்னை நம்பிக்கைமிக்க நடிகனாக ஏற்றுக்கொண்டு அப்பார்வையிலேயே என்னை அனுகினார். அதன் காரணமே அவரை நான் ஆசிரியராகப் பார்க்கத்தொடங்கினேன்.
அவரிடமிருந்த ஆசிரியர் குணத்தில் இன்னொரு சிறப்பம்சம் ஒன்று உண்டு. அது, நாடகக் கல்வி பயிலும் மாணவர்கள் அவரைப் போலவே வாசிப்பதிலும், எழுதுவதிலும் தேர்ச்சியுற்றவர்களாக இருக்க வேண்டும் என்று விரும்புபவர். விரும்புபவதோடு மட்டுமின்றி அதற்கு தூண்டுகோலாகவும் இருப்பார். முதுகலை முதலாண்டு பயிலும் போதே என் நடிப்பு மற்றும் வாசிப்பு முயற்சிகளைப் பாராட்ட ஆரம்பித்த கே.ஏ.ஜி மறைமுகமாகவே என்னை எழுதவும் தூண்டினார். எப்படியெனில், ஓவியக்கல்லூரியிலிருந்து நாடகத்துறைக்கு வரும் எந்தவொரு மாணவருக்கும் எழுதவே வராது. ஏனென்றால் நீங்களெல்லாம் வாசிக்கும் பழக்கத்திற்காட்படாமல் இருப்பதுதான் காரணம் என்பார். அதை என்னைப் பார்க்கும் நேரங்களிலெல்லாம் சொல்லிக்கொண்டே இருப்பார். நடிப்பைத் தொடர்ந்து நாடகங்கள் எழுத ஆரம்பித்த எனக்கு அவருடைய வார்த்தைகள் சவாலாகவே முதலில் பட்டது. சவாலாகவே நாடகக் கட்டுரைகள் எழுத ஆரம்பிதேன். அவையெல்லாம் அவர் கண்ணில் பட்டுக்கொண்டே இருந்தது. சில கட்டுரைகள்பற்றி வகுப்பறையிலேயே கூட உதாரணம் கூறி பேசத்தொடங்கினார். ஒரு வளர்நிலை மாணவருக்கு இப்படி உற்சாகப்படுத்தலையெல்லாம்விட வேறென்ன வேண்டும்.
இளமுனைவர்பட்ட ஆய்வு தொடர்பாக பேசிக்கொண்டிருக்கும் போதுதான், கலைஞர்கள் தன் அனுபவத்தையும், பார்வைகளையும் அந்தந்த காலத்திலேயே பதிவு செய்வதுதான் அதிகாரத்திற்கு எதிராக செயல்பட நினைக்கும் கலைஞர்களி ன் கையிலிருக்கும் ஒரே அரசியல் ஆயுதம் என்றார். அது மேலெழுந்தவாரியான வார்த்தைகள் அல்ல, அதனுள் மறைந்திருந்த வலியும் வடுவும் அப்போதுதான் எனக்கு தெரிய ஆரமித்தது. ஆம் அவருடைய சுயசரிதை நூலான ‘வடு’ அதைத்தான் இந்த ஏற்றதாழ்வுகள் நிறைந்த உலகிற்குச் சொல்லியது. இல்லையெனில் யார் ஒரு தலித் கலைஞனின் ஒடுக்கப்பட்ட வாழ்வைப் பற்றியும் அவர் கலையுலகிற்கு வந்த பாதைகளையும் பற்றி எழுதியிருப்பார்கள் இத்தமிழ் மண்ணில்? ‘ஒடுக்கப்பட்டோர் அரங்கியல்’ எனும் புத்தகம் தமிழுக்கு எப்படி கிடைத்திருக்கும்? இதுதானே ஆசிரியர்தனம்! ஆம் தொடர் போராட்டங்களுக்கிடையில் சிக்கி திணறி குறிக்கோளென விடாமுயற்சியில் வந்தடைந்த இடமல்லவா இந்த பல்கலைக்கழக நாற்காலி. அதற்கு அவர் அதிகமாகவே செய்தார் தன் ஆய்வுக் கட்டுரைகளாலும் பயிற்சிப்பட்டறைகளாலும் கருத்தரங்களாகவும் என செயல்பட்டுவிட்டார். உடன் அமர்ந்த நாற்காலியில் இருந்தவர்கெல்லாம் சேர்த்து.
ஆய்வு வழிகாட்டியாக அவர் என்னிடம் வேலைவாங்கிய அனுபவங்கள், பெரும் பொக்கிஷம் போன்ற கணங்கள். ஆம், அளவாக ஆய்வை எல்லையை அமைத்துக்கொள்ளல், எளிமையான மொழியைக் கையாளுதல், நேரத்திற்குள் ஆய்வை முடித்துக்கொள்ளல், வாய்மொழித்தேர்வில் தெளிவாக பதிலளித்தல் போன்றவற்றை முன்னிருத்தி வழி நடத்தும் ஒருவர் புதுவைப் பல்கலைக்கழக நாடகத்துறையில் இருந்தார் என்றால் கே.ஏ.ஜி என்ற ஒரு போராசிரியர் மட்டுமே. இது மிகையில்லை, அல்லல்படும் அத்தனை ஆய்வு மாணவர்களின் ஒரே குரல். கே.ஏ.ஜி மகான் அல்ல, மனிதர்தானே! அதுவும் துடிப்போடு இயங்கிய கலைஞன். அவருக்கு மாணவர்கள் மீதும் சக ஆசிரியர்கள் மீதும் கோபம் ஏற்பட்டதெல்லாம் இயல்பாகவே நான் பார்க்கிறேன்.
நானும் அவருடைய கோபத்திற்கு ஆளாகியிருக்கிறேன். அதெல்லாம் அவருக்கும் எனக்கும் இடையில் இருந்த இடைத்தரகர்களால் ஏற்படுத்தப்பட்டது, அதுதான் உண்மை அ வ்வளவுதான். அவருடைய இறுதி காலங்களிலும் அவருக்கு மன உளைச்சல் அல்லது அவரால் மன உளைச்சலுக்கு ஆளானோர் என்றால், அது அவரால் காரியம் சாதிக்கக் காத்திருந்த இடைவெட்டித் தரகர்களால்தான். அவர் மறக்கும் மன நிலையிலேயேதான் இருப்பார். அதனால்தான் அவரால் தொடர்ந்து படைப்புகளை விதைத்துக்கொண்டே இருக்க முடிந்தது.
ஆம், அப்படித்தான் என்மேல் அவருக்கிருந்த கோபம் கலைவெளியில் கரைந்த தருணமும் என் அனுபவத்தில் பொதிந்துள்ளது. கோப இடைவெளியில் ஒரு நாள் அவரே தொலைபேசியில் தொடர்புகொண்டார். வாங்கயா,’தொடு’ நாடகம் ஒரு கலை இரவில் நிகழ்த்தவேண்டியிருக்கு, நான் சென்னையில் இருக்கிறேன். நீங்கள் முன்னிருந்து ஒத்திகையை வழி நடத்திச் செல்லவேண்டும், என்றார். நானும் உடனே சென்று வேலை செய்து கொடுத்தேன். மேலும் அந்த கலை இரவிலே தனி நபர் நாடகமாக ஒரு பிரதியை நிகழ்த்தவும் என்னிடம் கேட்டுக்கொண்டார். நானும் என் மனைவியும் ’வலி’ என்றொரு நாடத்தை நிகழ்த்திவிட்டு வந்தோம். இதுவா கோபம்? அந்த நெகிழ்வுத்தன்மையே கே.ஏ.ஜி யை மேலும் என் நினைவு அடுக்கில் மிக பத்திரமாக வைத்திருக்கிறது. இனி ஒரு கலகக்காரக் கலைஞனுக்காக எத்தனை ஆண்டுகள் தமிழ் நாடகப் பரப்பு எதிர்பார்ப்போடு காத்திருக்கப்போகிறது என்று தெரியவில்லை. கல்வி நெறியுடன் கலைப்பாடத்தைக் கட்டமைத்து வகுப்பெடுக்கப்போகிற போராசிரியருக்காக என்னும் எவ்வளவு காலம் புதுச்சேரி பல்கலைக்கழக நிகழ்கலைத்துறை காத்திருக்கப்போகிறது என்பதும் தெரியவில்லை. உடனிருந்துப் பார்த்த இன்பவியல் நாடகம் முடிவில் துன்பவியலை முன்வைத்து முடித்ததுபோல் சட்டென காட்சியாகிவிட்டது கே.ஏ.ஜி யின் மரணம். ஆனால் நாட்டுப்புற பாடகர், நாட்டாற்துறை ஆய்வாளர், நடிகர், நாடக ஆசிரியர், இயக்குனர், பேராசிரியர் என தான் காலூன்றிய இடமெல்லாம் தன் பங்களிப்பால் எக்காலத்திற்கும் உயிர்த்திருப்பார் கே.ஏ.ஜி. கலையில் ஒடுக்கடுப்படுவோர் குரலில், எழுத்தில், ஆய்வில், நடிப்பில் என இனிவரப்போகும் உண்மைக் கலைஞர்களின் வழி உயிர்துளிர்ப்பார், ஆம், தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் சமாதியின் அருகாமைக்கே சென்று புதைந்திருக்கும் கே.ஏ.ஜி யால் சங்கரதாஸரைப் போல கலைஞர்களின் ஞாபக இடுக்குகளில் வளர்ந்து விருட்சமாக முடியாதா என்ன?
கோபி புதுச்சேரி
அஞ்சலி: கே.ஏ. குணசேகரன் (1955 - 2016)
வல்லிசையின் எளிய பறவை
சுகிர்தராணி
கடந்த 15.01.2016 வெள்ளியன்று பாண்டிச்சேரியில் நடந்த ஒரு நூல் வெளியீட்டு விழாவில் நான் பேசியபோது ‘எங்காண்டே என்னால காரியம் ஆகணும்னா சார் என்பார்’ என்னும் கவிதையின் ஒரு பகுதியைச் குறிப்பிட்ட போது என் கண்களில் நீர் துளிர்த்துவிட்டது. அன்று இரவு நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது பின்னிரவு வரை அவரைப்பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம்.. மறுநாள் பாண்டிச்சேரியிலிருந்து மாலதி மைத்ரியுடன் காரில் பயணிக்கும்போது மீண்டும் அவரைப்பற்றிய பேச்சு. அன்று இரவு நண்பர்களுடன் உணவருந்தியபடி பின்னிரவுவரை நீண்ட எங்கள் பேச்சில் மீண்டும் அவரது அதே கவிதையைப் பற்றியும் அவரது வாழ்க்கை பற்றியும்.
விடிந்ததும் மாலதி மைத்ரி முகநூல் வழியாகச் செய்திஅறிந்து என்னிடம் சொன்னார். திகைப்போடும் அதிர்ச்சியோடும். உதட்டுக்குக் கொண்டுபோன தேநீர்க்கோப்பை மின்னல் தாக்குதலைப்போல தளும்பிச் சரிந்தது என் உடலின் அதீத அதிர்ச்சியாலும் நடுக்கத்தாலும். இப்போதுவரை என்னால் அவ்வதிர்ச்சியிலிருந்து மீளமுடியவில்லை. தொடர்ந்து இருநாட்களாக அவரது கவிதையும் வாழ்க்கையும் நினைவுமாகவே கழிந்தன. மூன்றாம் நாள் அவர்
இல்லை. பறந்துபோன அப்பறவை பேராசிரியர். கே.ஏ. குணசேகரன் என்னும் பெயர்கொண்டது. தன் இறுதிப் பறத்தலை எப்படி முன்னுணர்ந்து பிரியமானவர்களின் உயிர்வழியாக உள்ளிறங்கி தன் சிறகுகளை உதிர்த்துவிட்டுச் சென்றது என்னும் என் கேள்விக்கு இதுவரை பதிலில்லை. பகுத்தறிவும் மருத்துவமும் அறிவியலும் சற்றே இளகுவது இம்மாதிரி அரிதான தருணத்தில்தான்.
காலத்தின் பெருமதிப்பில் உயர்ந்த தடங்கள் சமூகத்தின் இன்மைகளை நிறைவாக்கவே எப்போதும் முயற்சி செய்கின்றன. அவற்றின் முனைப்புகளும் அசைவுகளும் சமூக மாற்றத்தின் தேவை கருதியே நடக்கின்றன. வாழ்வின் பெரும்பாரங்களையும் தன் வெளிப்பாடாக மாற்றி அவற்றைச் சமூகத்தின் தேவைக்கானவைகளாக மாற்றிவிடுகின்ற வல்லமை அத்தகைய தடங்களுக்கு எப்போதும் உண்டு. வரலாற்றின் பக்கங்களில் அவை அழிக்கவியலா தன்மையுடையவையாக நிலைத்துவிடுகின்றன. அத்தகைய நிலைப்புகள் அடுத்த முன்னெடுப்புகளிலும் நகர்வுகளிலும் தொடர்ந்த செயல்பாட்டினைக் கொண்டிருக்கும் என்பது நாம் அறிந்திருக்கும் உண்மையாக இருக்கிறது.
அப்படிப்பட்ட ஆளுமையாகப் பரிணமித்தவர், சிவகங்கை அருகே உள்ள மாறந்தை கிராமத்தில் எளிமை குடும்பத்தில் பிறந்து தனது அறிவாற்றலால் பல்கலைக்கழகத்தின் துறைத் தலைவராக மாறி முதல் தலைமுறையிலேயே உயர்ந்த இடத்தை அடைவது சாதிய இறுக்கங்களும் ஒடுக்குமுறைகளும் அவமதிப்புகளும் நிறைந்த இந்தச் சமூக அமைப்பில் எளிமையானதன்று. அத்தகைய தடைகளைத் தகர்த்து அவரால் தன்னை வெளிப்படுத்த முடிந்திருக்கிறதென்றால் அவருக்குள் இருந்த வேட்கையும் விடுதலை உணர்வும்தான் காரணம்.
ஒருமுறை பாண்டிச்சேரியில் அவருடனான சந்திப்பில் இளமையில் அவருக்கு நேர்ந்த சாதி சார்ந்த வன்தாக்குதல்கள் குறித்து விவரித்தபோது அவர் நிகழ்த்தும் எதிர்ப்பரசியலின் களமும் ‘எங்காண்ட...’ எனத்தொடங்கும் கவிதையின் மூலமும் தெரிந்தது.
நாட்டார் கலையின் மரபார்ந்த அறிவின் செறிவும் அவற்றின் வெளிப்பாட்டுப் பாங்கும் கே.ஏ.ஜியின் வலிமைகளாக இருந்தன. ’வாகான ஆலமரம்’ என்று அவர் தொடங்கும் பாடல் எல்லாச் சாதகங்களையும்விட உயிரில் ஊறிவிடும் ஆற்றல் வாய்ந்தது. ‘ஏய் ஆக்காட்டி ஆக்காட்டி’ என ஒப்பாரியில் தொடங்கும் அந்தக் குரல் கேட்போரை அழவைக்கும். கத்தும் குருவி கவலைப்படாமல் தன்மேல் இறுகியிருக்கும் வலையை அறுக்கும் ஆற்றலைப் பெற்றுவிடும். மக்கள் கவிஞர் இன்குலாப்பின் ‘மனுசங்கடா’ என்ற பாடல் தலித்துகளின் தேசிய கீதமாக அங்கீகரிக்கப்பட்டதற்கு கே.ஏ.ஜியின் பாட்டுத்திறமே காரணம். தவில், பறை போன்ற தோல்கருவிகள் மேடை ஏற்றப்படுவதற்கு முக்கியக் காரணமாக அவர் இருந்தார். பல்வேறு நாட்டுப்புறப் பாடல் கலைஞர்கள் உருவாவதற்கு மூலமாக இருந்திருக்கிறார். நாட்டார் பாடல் வடிவில் சமூகப் பாடல்களை உருவாக்கி அதன்மூலம் விடுதலைக் கருத்தியலை முழக்கும் மேடைகளில் அவர் இல்லாமலேயே அவர் பாடல்கள் இசைக்கப்படும் உயர்வெய்தினார்.
நாடகத்துறையில் அவரின் பலியாடுகள் நாடகப்பிரதி மிகவும் ஆழமானது. தலித் ஓர்மையின் அடையாளமாக அது வெளிப்பட்டது. தமிழ் வளர்ச்சித்துறையில் அவர் ஆற்றிய பணிகள் போற்றுதலுக்குரியன. நடத்திய சொற்பொழிவுகள், பல அரங்குகளில் அவர் அளித்த ஆய்வுக்கட்டுரையில் தலித் விடுதலைச் சாத்தியங்களை உண்டுபண்ணியவை.
இவை அனைத்திற்கும் தேவையான தரவுகளை அவர் அவரின் வாழ்விலிருந்தே எடுத்துக்கொண்டார் என்பதுதான் அவரின் அனைத்துப் பரிமாணங்களுக்கும் அடிகோலாக இருந்தது. தலித் கலை, அரசியல் இவை கலந்த பண்பாட்டின் சுவடாக அவர் இருந்தார். அவரின் எழுத்துகள், பணி ஆகிய அனைத்தும் தலித் பண்பாட்டைப் பொதுப்பண்பாட்டின் கூறாக மாற்ற வேண்டும் என்னும் உத்வேகத்துடனே இருந்தது.
மராட்டிய தலித் இலக்கியத்தின் ஆகப் பெரும்பேறாக இருந்த சுயசரிதை தமிழ் இலக்கிய வகைமையில் இல்லை என்ற குறையைத் தன் ‘வடு’ என்னும் தன்வரலாற்றுப் பிரதி மூலம் தீர்த்துவைத்தார். வடுவில் பதியப்பட்ட அவரின் வாழ்க்கை மையத்தை நோக்கி நகரும் ஒரு தலித்தின் வாழ்வாக இருந்தது.
இசை, நாடகம், எழுத்து , பணி என்னும் எல்லா தளங்களிலும் பண்பாட்டுரீதியான தன் பங்களிப்பைச் செய்ததன் மூலம் இலக்கிய வரலாற்றில் மட்டுமல்ல மானுட வரலாற்றிலும் தன் பெயரை நிலை நிறுத்தியவர். அதன்மூலம் தலித் சமூகம் தன் அறிவார்ந்த முன்னோடிகளில் ஒருவராக அவரைப் பெரிதும் மதிக்கிறது.
வரலாற்றின் வழி நெடுக இத்தகைய பண்பாட்டுப் போராளிகள் விடுதலைப் பாதைகளில் தொடர்கிறார்கள்; அவர்களில் தமிழ்ச்சூழலில் மிக முக்கியமானவராக கே.ஏ.ஜி மிளிர்கிறார்.
இப்படி வலுமான இசையின் மூலமாகவும் மாற்று நாடகங்கள் மூலமாகவும் சாதிய நாற்றமெடுக்கும் நஞ்சான சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக மானுட விடுதலைக்காக ஓயாமல் பாடிய ஒரு பறவை திரும்பமுடியாத இடத்திற்கு மூன்றாம்நாள் பறந்துவிட்டது. அந்த வல்லிசையின் எளிய பறவைக்குத் தெரியுமா தான் முதல்நாளே உயிர்த்தெழுந்ததுபற்றி?

நன்றி காலச்சுவடு
இசை பூத்த பூ மரம் . சி.மகேந்திரன்

அந்தப் பாடல் என்னைக் கவர்ந்து இழுத்துச்சென்றுவிட்டது. குரலின் இனிமையும், பாடலின் கருப்பொருளும் அப்படிப்பட்டதாக இருந்தது.
வாகான ஆலமரம் என்ற சொல், முதலில் வெளிப்படுகிறது. இதிலிருந்து பிறந்த வேதனை, இசையாக வெடித்துக் கிளம்பியபோது, நான் என்ன ஆனேன் என்பது எனக்கே தெரியவில்லை. பேரதிர்ச்சி ஒன்று என்னை இழுத்து அணைத்துக் கொண்டது.
ஊரிலேயே உயர்ந்து, கம்பீரத்தோடு நிற்கும் எந்த மரத்தையும் வாகான மரம் என்று சொல்வது உண்டு. மீண்டும் அந்த இசைக்குரல், வாகான ஆலமரத்தின் உச்சிக்குச் செல்வதைப்போல், உயர்ந்து செல்கிறது. பின்னர் அந்தக் குரல், தாழ்ந்து வேதனையைச் சொல்ல வருகிறது. ஆனால் சொல்லாமலேயே, மீண்டும் ஏறி, மரத்தின் உச்சிக்குச் செல்கிறது.
அந்தக் குரலில் அப்படி ஒரு மாயக் கிறக்கம்.
அந்த வாகான ஆலமரத்தைப் பற்றி வாய் திறந்து எதையும் சொல்லாமல், இசை விவரிப்பாய் அந்தக் குரல் எங்கெங்கோ புதிராய்ச் சென்றுவருகிறது. அதில் வயமிழந்த நான், பல்வேறு மின் அதிர்வுகளைப் பெற்றுக்கொண்டேயிருந்தேன்.
பஞ்ச கால விவசாயி ஒருவனின் பாடல் அது.
பட்டினிக் கொடுமையால் குடும்பமும், அவன் வளர்த்த கால்நடைகளும் மரணத்தை நோக்கி நகர்ந்து சென்றுகொண்டே யிருக்கின்றன. வாகான ஆலமரத்தின் உச்சிக்குச் சென்று, கதையை முடிக்கப்போகிறேன் என்று அவனது இசைப் பாடல் உச்சத்திற்குச் சென்றுகொண்டே இருக்கிறது.
தங்கள் துயரங்கள் அனைத்தையும் மானமுள்ள விவசாயிகளால் வெளியே சொல்லமுடிவதில்லை. அவனின் அந்த துயரத்தை அந்தப் பாடல்தான் தேம்பி அழும் சோக வெளிப்பாட்டுடன் தயங்கித் தயங்கி விவரித்துச் செல்கிறது.
28 ஆண்டுகளுக்குமுன் விவசாயிகளின் தற்கொலை பற்றி தோழர் குணசேகரன் பாடிய பாடல்தான் அது.
இந்தப் பாடலைப் பாடியவர் சிறு உருவமாக மேடையில் தெரிகிறார். அருகில் சென்று பேச வேண்டும் என்று மனம் விரும்புகிறது. ஆனால் அன்று அது சாத்தியப்படவில்லை. அந்தக் குரலோடு அன்று ஏற்பட்ட தொடர்பு, நட்பாகி, தோழமையாகி பல்வேறு தளங்களுக்குச் செல்லத் தொடங்கியது. நிகழ்த்து கலைகளின் வீரியம் குறித்து கூடுதல் அனுபவத்தை நான் பெற்றுக் கொண்ட காலமும் இதுதான்.
என்றுமே மறக்கமுடியாதபடி, என் வாழ்க்கையில் அமைந்த இனிய பயணம் அது. நாட்டுப்புறக் கலைஞர்களின் கள்ளங்கபடமற்ற வாழ்க்கையைச் சுமந்தபடி, காற்றுவெளியில் மிதக்கும் அந்தப் பாடல் கள் பல்வேறு ஆழமான சிறப்புகளைக் கொண்டவை.
ஆதிக்கம் பொருந்திய புற உலகத்தால் அவற்றைப் புரிந்துகொள்ள முடிவதில்லை. அவற்றை உணர்ந்துகொள்ளும் வாய்ப்பை இந்தப் பின்னணி எனக்கு வழங்கியது.
’"தன்னானே'’ பாடல் கேசட்டை 1998-ஆம் ஆண்டில் வெளிட்டோம். அந்த காலங்களில் மியூசிக் தியேட்டர்களில் இசைப் பாடல்களை பதிவு செய்வது என்பது அத்தகைய சுலபமானதாக இல்லை. இதுபற்றிய முன் அனுபவம் எனக்கோ எனது நண்பர்களுக்கோ சிறிதுகூட இல்லை. திரைப்படப் பாடகர்கள் மற்றும் இசைத் துறையில் புகழ்மிக்கவர்களின் பாடல்களை மட்டுமே, அந்தக் காலத்தில் பதிவு அரங்குகளில் பதிவுசெய்ய முடியும். பெரும் முயற்சிக்குப் பின்னர்தான் இசைப் பதிவு அரங்கத்தை எங்களால் சில மணிநேரங்கள் வாடகைக்கு எடுக்க முடிந்தது.
சௌந்தர் எனது இனிய நண்பர். இசைத் துறையில் நல்ல தொடர்பு உள்ளவர். இதற்குத் தேவையான உதவிகளை அவர் தான் செய்து கொடுத்திருந்தார். இதைப் போலவே மறக்கமுடியாத மற்றொரு தோழர் நீலப்பிரியன். நிதி முதல் பல்வேறு நெருக்கடிகளுக்கு உதவியவர். இப்பொழுது திருவனந்தபுரத்தில் தொலைத்தொடர்புத் துறையில் உயரதிகாரியாக பணியாற்றுகிறார். இன்று சென்னையில் எல்லோராலும் நன்கு அறியப்பட்ட பாடகர் கீர்த்தி, அப்பொழுது எங்களோடு செயல்பட்டார்.
ரெக்கார்டிங் தியேட்டர், சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்திருந்தது. தியேட்டருக்குள் நுழைகிறோம். முதலில் வரவேற்பறை. பின்னர் பல்வேறு அறைகள். ஒவ்வொன்றையும் எங்களோடு வந்தவர்கள் வியந்து பார்க்கிறார்கள். அதிலிருந்த இசைப் பதிவு சம்பந்தப்பட்ட சாதனங்கள், அனை வருக்கும் பெரும் கிறக்கத்தை உருவாக்கி விட்டன என்பது உண்மைதான். நானும் அதற்குமுன் எந்த ரெக்கார்டிங் தியேட்டரை யும் பார்த்ததில்லை. இவ்வாறான இசை அரங்குகளால் ஒதுக்கிவைக்கப்பட்ட இசைக் கருவிகளைத்தான் எங்கள் குழுவினர் எடுத்து வந்திருந்தனர்.
பறை, தவில், கஞ்சிரா, நாயனம்- அவர்களின் இசைக்கருவிகள். இந்த இசைப் பதிவு அரங்குகளில் திரைப்படப் பாடகர்கள் அல்லது பிரபல இசைப் பாடகர்கள் மட்டும்தான் வழக்கமாக அங்கே இடபெற முடியும். நமது கலைக் குழுக்களில் அவ்வாறானவர்கள் இல்லை. ஏழ்மையின் சாயல் அவர்களின் தோற்றத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது. தொலைதூர பேருந்துப் பயணத்தில் வந்திருந்த அவர்கள், களைப்புடன் இருந்தது அவர்களது முகத்தில் தெரிந்தது.
அன்றைய காலம் இன்றைய காலத்தைப்போல, மின்னணுவியல் காலம் அல்ல. கருவிகளின் பங்களிப்பு ஒரு பங்கென்றால், அதனை இயக்கும் திறமை மிகுந்த வல்லுநர்களின் பங்கு மீதியாக அமைந்திருந்தது.
அன்று இசைப் பதிவுக் கூடத்தில் இருந்தவர்கள், நமது குழுவினரை அலட்சியமாக பார்க்கிறார்கள். அதிலும் மிக மோசமாக அலட்சியப்படுத்துவதாக நான் உணர்ந்தேன். இந்த மாதிரி நேரங்களில் எதிர்பாராமல் கோபம் வந்துவிடுவது எனக்கு வழக்கம். எனக்கோ என்னை சார்ந்தவர்களின் சுயமரியாதைக்கோ இழுக்கு ஏற்படுவதை என்னால் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை. ஆனாலும் கோபத்தை அடக்கிக் கொள்கிறேன்.
இதன்பின்னர் அமைந்த நிகழ்வுதான் என் வாழ்க்கையில் என்றுமே மறக்க முடியாத நிகழ்வாக அமைந்தது. இசைப் பதிவு ஆரம்பமாகியது. எந்த இடத்தில் நின்று எவ்வாறு பாடவேண்டும் என்று பதிவுசெய்பவர்கள், நமது குணசேகரன் உள்ளிட்ட குழுவினருக்கு விவரித்துக்கொண்டே செல்கிறார் கள். அதில் ஒவ்வொன்றிலும் வேண்டாவெறுப்பு தெரிகிறது.
ஒருவாறாகப் பதிவு ஆரம்பமாகிறது. தோழர் குணசேகரன் உயரம் குறைவானவர். தனி கண்ணாடி அறையில் நிற்கிறார். நான் உற்றுக் கவனித்துக் கொண்டிருந்தேன்.
‘"அய்யா வந்தனம்னா வந்தனம்’...' என்று குரல் எழுப்பு கிறார். ஒலிவாங்கியில் அது உள்வாங்கப்பட்டு பிரம்மாண்ட மான கட்டமைப்போடு தனித்துவத்துடன் அந்த அறையில் அந்தக் குரல் எதிரொலிக்கிறது.
பாடலைப் பதிவு சாதனத்தில் பதிவுசெய்ய வேண்டியர்களின் விரல்கள் செயல்படவில்லை. ஆச்சரியத்துடன் குட்டையான அந்த உருவத்தை பார்க்கிறார்கள். எத்தனையோ குரல்களை இனம் கண்டு, வகைப்படுத்திப் பதிவு செய்த அவர்களிடம், தோழர் குணசேகரனின் குரல் ஓர் பெரும் அதிர்ச்சியை உருவாக்கிவிட்டது. இதன்பின்னர் ஒவ்வொருவரும் ஆர்வத்துடன் இசைப்பதிவில் தீவிரமாகப் பங்கெடுத்து, வேகமாக செயல்படத் தொடங்கிவிட்டார்கள்.
இசைக் கலைஞர் கே.ஏ. குணசேகரனின் இசைக் குரல், யாரையும் கட்டிப் போட்டு விடும் இயல்பைக் கொண்டது.
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத் தயாரிப்பாக வெளி வந்த ’"தன்னானே'’ பாடல்தான், அவரது குரலில் வெளிவந்த முதல் ஒலிநாடா. அதனை வெளியிடும் விழாவை, சென்னை சோவியத்து கலாச்சார மையத்தில் வைத்திருந் தோம். புகழ்மிக்க இசையமைப் பாளர் எம்.எஸ். விஸ்வநாதன் அவர்கள் மூலம் ஒலிநாடாவை வெளியிட வேண்டும் என்று விரும்பினோம். அவரை நேரில் சந்தித்து, ஒலிநாடாவையும் கையில் கொடுத்தோம். "இரண்டு நாட்களில் பதில் சொல்கிறேன்' என்றார். எங்களுக்கு வருவார் என்ற நம்பிக்கை இல்லை. அடுத்த நாள் காலை, கட்சி அலுவலகத்திற்கு ஒரு தொலைபேசி அழைப்பு. எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் உதவியாளர் பேசினார், "அய்யா கட்டாயம் வந்த விடுவதாகக் கூறினார்' என்று. யாரையும் கவர்ந்து இழுத்துவிடும் குணசேகரனின் குரல், அவரையும் ஈர்த்துவிட்டது என்று நினைத்துக்கொண்டேன்.
விழாவில் கலந்துகொண்ட எம்.எஸ்.வி, அந்தக் குழுவினரின் குரல் வளத்தைப் பற்றி வெகுவாகப் புகழ்ந்து பேசினார். இயக்குநர் பாலுமகேந்திரா அவர்களும் விழாவில் பங்குகொண்டார். நாட்டுப் புற இசைப்பாடல்களின் வரலாற்றில், இதனைத் திருப்புமுனை என்றுதான் கூறவேண்டும்.
இதன்பின்னர்தான் இசை வடித்தில் பல்வேறு நாட்டுப்புற பாடல்கள் வெளிவரத் தொடங்கின. அந்த நினைவுகள் எல்லாம், தோழர் குணசேகரன் இறப்புக்குப் பின்னர், என் ஆழ்மனதிலிருந்து அடுக் கடுக்காய் வெளிவந்துகொண்டே இருக்கின்றன.
சிவகங்கை மாவட்டத்தில் அமைந்த சிற்றூர்தான் மாறந்தை. வறண்ட நிலப் பகுதியும், மழைக் காலங்களில் பெய்யும் மழையைப் பத்திரமாக சேமித்து வைத்துக்கொள்ளும் கண்மாயும் சூழ்ந்த கிராமம். அதன் வாழ்க்கை முறை, கவிதைப் பெருவெளியை உள்ளடக்கியது.
வறுமை, சாதிய ஒடுக்குமுறை, வறண்ட நிலம் ஆகிய துயரப் பின்னணிகள், வாழ்க்கையை மீட்டெடுத்து உயிர்ப்புடன் வைத்துக்கொள்ள உதவின. நாட்டுப்புறக் கவிமரபை, ஒரு பேராயுதமாகப் பயன்படுத்தும் வாய்ப்பை அவை ஏற்படுத்தின. இந்த பின்னணியில் தோன்றியவர் தோழர் கே.ஏ. குணசேகரன்.
கே.ஏ. குணசேகரன் அல்லது கரு.அழ. குணசேகரன் என்னும் பெயரில் அறியப்பட்ட இவர், இங்குதான் 1955-ஆம் ஆண்டு, மே மாதம், 12-ஆம் தேதி பிறந்தார். இளையான்குடி, அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வியை முடித்த இவர், இதே ஊரில் அமைந்த ஜாகீர் உசேன் கல்லூரியிலும், மதுரை தியாகராஜர் கல்லூரியிலும், மதுரை பல்கலைக்கழகத்திலும், இளங்கலை பட்டம், முதுகலை பட்டம், முனைவர் ஆய்வுப்பட்டம் ஆகியவற்றில் தேர்ச்சிபெற்றார். நாட்டுப்புறக் கலையை ஓர் புலமைசார்ந்த ஆய்வாக மட்டும் கருதாமல், அதனை நிகழ்த்து கலைகளோடு இணைத்து, மக்கள் அரங்குகளில் ஆய்வுப்பூர்வமாக வளர்த்தெடுத்ததுதான் அவரது சிறப்பாகும். தமிழ் கூறும் நல்லுலகில் நாடகத் துறையில் புகழ்மிக்க பாதையைப் படைத்தவர் பேராசிரியர் இராமானுஜம். இவரிடம் காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் 1978-ஆம் ஆண்டில் தனிப் பயிற்சியை குணசேகரன் பெற்றார். இந்தப் பயிற்சி யையும், பேராசிரியர் இராமானுஜம் அவர்களையும் எந்தக் காலத்திலும் தோழர். குணசேகரன் மறந்ததில்லை.
மாணவர் பெருமன்ற மாநில பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து, இளைஞர் மன்ற செயலாளராக நான் பொறுப்பை ஏற்றிருந்த காலம் அது. தோழர் டி. ராஜா, தமிழக பொதுச் செயலாளர் பொறுப்பி லிருந்து தேசிய பொதுச் செயலாளர் பொறுப்பை ஏற்று செயல்படத் தொடங்கியிருந்தார். அனைத்திந் திய இளைஞர் மன்றச் செயல்பாடுகளில் நாட்டுப்புறப் பாடல்களை வளர்த்தெடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தோழர் கே.ஏ. குணசேகரனும் நானும் இளைஞர் மன்றத்தை மையப்படுத்தி, கள ஆய்வுப் பணிகளைத் தொடங்கினோம். அதன் பயன் என்ன என்பதை இப்பொழுது யோசித்துப் பார்க்கும்போது, தமிழகம் முழுவதும் விரிந்து நிற்கும் நாட்டுப்புறக் கலை, நிகழ்த்து கலை ஆகியவவை திரைப்படம் வரை சென்று தனித்துவத்துடன் நிற்பதற்கு தோழர் குணசேகரன் ஒரு அடிப்படை என்பதை யாராலும் மறுக்கமுடியாது.
இளைஞர்களுக்கான பாடல் பயிற்சி முகாம்கள் இதில் முக்கியமானவை. இன்றைய சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் தோழர் எஸ். குணசேகரன், அன்றைய இளைஞர்களின் தலைவர். அவர்தான் அந்த முகாமிற்கான பொறுப்பை ஏற்று செயல்படுத்தினார். சின்னப்பொன்னு அந்த முகாமில் பாடல் பயிற்சிக்காக அழைக்கப்பட்டிருந்தார். கொல்லங்குடி கருப்பாயி அப்பொழுது சினிமாத் துறையில் நுழைந்து புகழ்பெற்ற காலம். அவரும் அந்த முகாமின் இறுதிநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார்.
இதன்பின்னர் தஞ்சை மாவட்டம், கோவை மாவட்டம் என்று இசைப் பயிற்சிப் பட்டறைகளை நடத்தி னோம். இவற்றின் மூலம் நிகழ்த்து கலைகளை வீரியத்துடன் வளர்த் தெடுக்கும் ஆய்வை, அவர் இடை விடாது நிகழ்த்தினார் என்பதற்கு நானே சாட்சியமாக இருக்கிறேன். எங்கே நாட்டுப்புறப் பாடல் கிடைத் தாலும், தேடிக் கண்டுபிடித்துப் பாடிவிடுவார். அந்தப் பாடல்களின் உட்கருவும் இசையும் மாறாமல் அந்த மண்ணின் இயல்போடு அதனை நவீனப்படுத்தியதில் அவருக்கு அமைந்திருந்த திறன் யாரையும் வியக்கவைத்துவிடும். மெய்சிலிர்க்க இதனை நான் கவனித்திருக்கிறேன்.
எண்பதுகளில் தலித் அரசியல், அரசியல் முக்கியத்துவம் பெற்றபோது இதில் இவர் தலித் அரங்கை கட்டியெழுப்பினார். கவிஞர் இன்குலாப் எழுதிய "மனுசங்கடா நாங்க மனுசங்கடா' என்ற அந்த பாடல், இவரது குரல் மூலம் பெரும் தீயை, தமிழக மேடைகளில் எழுப்பியது.
பல்கலைக்கழங்களின் மூலம் நாடகத் துறைக்கு இவர் ஆற்றிய பணியையும் நாம் நினைவுகூர்தல் அவசியமானதாகும். தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் நாடகத்துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றிய இவர், புதுச்சேரி பல்கலைக்கழகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் என்று பல்வேறு உயர் கல்வி அமைப்புகளில் பணியாற்றியுள்ளார். இதில் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் உள்ள, சங்கரதாஸ் சாமிகள் நாடகத்துறையின் தலைவராகப் பொறுப்பேற்று பணியாற்றியதுதான் இவரது இறுதிப் பணியாகும்.
இந்தக் காலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை இவர் எழுதியிருக்கிறார். இதைப்போல சிறந்த நூல்களும் இவரால் எழுதப்பட்டுள்ளன. இதில் முக்கியமானவை, "தமிழகப் பழங்குடி மக்கள் இசை நாடக மரபு', "நாட்டுப்புற மண்ணும் மக்களும்', "நாட்டுப்புற இசைக் கலை', "பயன் பாட்டுத் தளங்களில் பழந்தமிழர் கலைகள்', "தலித் அரங்கியல் ஆகும். இதைப் போலவே விருது களையும், நூல்களுக்கான சிறப்புப் பரிசுகளையும் தோழர் குணசேகரன் பெற்றுள்ளார். 'நாட்டுப்புற மண்ணும் மக்களும்' என்னும் நூலுக்குத் தமிழக அரசின் சிறந்த நுண்கலை நூலாசிரியர் விருதும், நாடகத் துறைக்கான, புதுவை அரசின் கலைமாமணி விருதும், மதுரை கிருத்தவ கலைத் தொடர்பு மையத்தின் சார்பில் 1994-ஆம் ஆண்டு "சதங்கை' விருதும் இவருக்கு வழங்கப் பட்டன.
இன்றைய திரைப்படத்துறையில் முன்னணியில் நின்று, மக்கள் கலையின் தனித்துவத்தை பதிவு செய்து கொண்டிருக்கும் சின்னப் பொன்னு, ஜெயமூர்த்தி ஆகிய இருவரும், இவரால் பயிற்றுவிக்கப் பட்டவர்கள். கோட்டைச் சாமி, சத்தியபாலன், பஞ்சநாதன், மாரியம்மா, கலைச்செல்வி என்று தமிழக மேடைகளில் இவரால் பரந்து விரிந்து, கொடிபரப்பி வளர்ந்த கலைத் தாவரங்கள் ஏராளம். இவர்கள் அனைவரும் என்றென்றும் தோழர் கே. ஏ. குணசேகரன் அமைத்த கலைப் பாதையில் சென்று, புதிய இலக்கு களை அடைவார்கள் என்பதில் எனக்கு முழு நம்பிகை உண்டு.
தோழர் கே.ஏ. குணசேகரன் குடும்பத்தில் அனைவரையும் நான் அறிவேன். அவருடைய துணைவியார் ரேவதி, என் சகோதரிகளைப் போன்றே என் மீது அன்பு கொண்டவர். அவருக்கும் அவரது பிள்ளைகளுக்கும் எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். குணசேகரன் எனது இனிய தோழமை. நான் நேசித்த இசைக்குயில். இசை பூத்த பூமரம். அதன் இசையழகை ரசித்து, எத்தனையோ காலங்கள் நான் அதனருகில் வாழ்ந்திருக்கிறேன். நானும், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றமும், இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியும் அவருடன் இணைந்து பயணித்த இசைப் பயணங்கள் அர்த்தமுள்ளவை. தமிழக நாடக வரலாற்றின் தந்தை சங்கரதாஸ் சாமிகளின் உறங்குமிடத்திற்கு அருகில், இவரும் விதைக்கப்பட்டுள்ளார். எனது இனிய தோழருக்கு வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்

நன்றி நக்கீரன்
கே.ஏ.ஜீ. தமிழ்த் தளத்தின் ஒரு அடையாளம்

ச.ஜெயப்பிரகாஸ்
முனைவர் பட்ட ஆய்வாளர்
நிகழ்த்துகலைத்துறை
புதுவைப் பல்கலைக்கழகம்
புதுச்சேரி - 605 014

பேரா.கா.சிவத்தம்பி, பேரா.சே.இராமானுஜம், பேரா.கரு.அழ.குணசேகரன் - இந்த மூன்று ஆளுமைகளும் என்வாழ்வில் வந்து சென்றவர்கள். அவர்கள் காட்டிய வழி மிகப்பெரியது. இவர்களின் ஆளுமைத்திறமைகளை நான் முழுமையாகப் பயன்படுத்தவில்லை என்ற ஏக்கம் இருக்கின்றது. அவர்கள் காட்டிய வழி மிகப் பெரிய அகன்ற பார்வையை என்னுள் ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆளுமைகளுடன் மிகவும் நெருக்கமான உறவு இருந்தது.
இலங்கையில் முல்லைத்தீவைப் பிறப்பிடமாகக் கொண்டவன் நான். பூமிதனில் பிறந்துவிட்டால் பிறக்க ஓரிடம் வளர ஓரிடம், இருக்க ஓரிடம் என்று பாதைகள் மாறிக்கொண்டே செல்லும்.
இலங்கையில் பேரா.கா.சிவத்தம்பி அவர்களுடன் நான் இருந்த காலத்தில் குணசேகரன் அவர்களை  முதல்முறை சந்தித்தேன். அடுத்து நாடகத்துறையில் முதுகலைப் பட்டம் பெறுவதற்கு புதுச்சேரிப் பல்கலைக்கழக நிகழ்த்துகலைத்துறையில் 2011ஆம் ஆண்டு வந்துசேர்ந்துபோது அவரின் கீழ் கற்கும் வாய்பும் கிடைத்தது.
முதுகலையில் இரண்டாவது வருடம் எங்களுக்கு நாடகத்தயாரிப்பு இருந்தது. அதற்கு அவர்தான் வழிநடத்துபவராக இருந்தார். அவருடைய இயக்கத்தில் பாதல்சர்காரின் ‘துட்டாமலைக்கு அப்பால்’ என்னும் நாடகத்தில் நான் நடிகனாகவும் வேடஉடை ஒப்பனையாளராகவும் செயல்பட்டேன். அந்நாடகம் பலரின் பாராட்டை பெற்றிருந்தது.
அவருடைய வகுப்பில் இருந்து கற்கும் வாய்ப்பும் கிடைத்தது. அவர் மாணவர்களுக்கு கற்பிப்பதற்காக ஒவ்வொரு நாளும் பாடத்தை திட்டமிட்டுக்கொண்டு வருவார். அதனை அவர் மிகவும் இலகுவான முறையிலும் நகைச்சுவைப் பாங்கிலும் கற்பிக்கும் தன்மை சுவாரஸ்யமானது. கற்பித்தலை தன்னுடைய விருப்பமான செயற்பாடக கருதி அதனை விரும்பிச் செய்தவர் தனது இறுதி மூச்சுள்ளவரை.
2013ஆம் ஆண்டு பேராசிரியர் சே.ராமானுஜத்தின் இயக்கத்தில் இந்திரா பார்த்தசாரதியின் ‘ராமானுஜர்’ நாடகத்தை இயக்குவதற்கு நிகழ்த்துகலைத்துறை முடிவு செய்தது. அப்போது; ராமானுஜர் வேடத்தில் நடிப்பதற்கு எனக்கு வாய்ப்புக்கிடைத்தது. அச்சந்தர்ப்பத்தில் குணசேகரன் அவர்கள் எனக்குப் பலவகையிலும் ஒத்துழைப்புத்தந்து அதில் நடிப்பதற்கு வழிவகை செய்துதந்தவர்.
‘ராமானுஜர் நாடகம் என்னுடையதாக யாரும் பார்க்கவில்லை. அது குணசேகரனுடையதாகத்தான் பார்த்தார்கள், இந்திராபாத்தசாரதிக்கு செய்யவேண்டிய கடமையைத்தான் அவர் செய்தார்’ என்று பேரா.ராமானஜம் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.
உண்மையில் பாண்டிச்சேரி நிகழ்த்துகலைத்துறை இந்திராபார்த்தசாரதி அவர்களின் கடின உழைப்பில் உருவானது. அவருக்கு பின் அத்துறையின் பொறுப்பை கே.ஏ.ஜி. ஏற்றுக்கொண்டார். அதுவும் தகுதி முறைப்படி பெற்றாரே தவிர அப்பதவிக்குவர அவர் எந்த பின்வழியையும் கையாளவில்லை. எப்பொழுதுமே இந்திராபார்த்தசாரதி அவர்கள் மீது மிகவும் நன்றி உணர்வுடைய மாணவர் நிலையில்தான் இருந்தார். அதுபோல் ராமானுஜம் அவர்களின் மீதும் அவருக்கு ஆழமான நன்றி உணர்வும் இருந்தது.
தமிழ்நாட்டு மத்தியில் அவருடைய வகிபாகம் என்ன? என்பது முனைவர்பட்ட ஆய்வாளராக வந்ததன் பின்னர்தான் புரியத்தொடங்கியது.
தமிழ் நவீன நாடக உலகில் நடிகராகவும், இயக்குனராகவும் புகழ் பெற்றவர். நாட்டுப்புற இசைக் கலைஞர், நாட்டுப்புறவியல், தலித்பண்பாடு, அரசியல், வரலாறு, சேரிப்புறவியல், தலித் அரங்கியல் என்று பல கோட்பாட்டுத் தளங்களில் பெரும்பங்களிப்பை செய்திருந்தார். மார்க்ஸிய அரசியல் பின்புலத்தோடு தமிழ் உணர்வையும் தலித் மக்களின் உரிமைகளையும் தனது இசையின் மூலமும் நாடகங்கள் மூலமும் வெளிப்படுத்தி வந்த மக்கள் கலைஞன்.
தமிழ்ச் சமூகத்தில் அவருடைய வகிபாகம் என்பது முக்கியமானது. இருபதாம் நுற்றாண்டின் பின்னர்தான் நாட்டார் வழக்காற்றியல் என்னும் துறைபற்றிய ஆய்வுகள் கருத்தியல்கள் மேற்கிளம்புகின்றது. குறிப்பாக தமிழ் நாட்டில். அவ்வாறு ஒரு துறை வளர்ச்சி அடைவதற்கு முக்கிய காரணகர்த்தாவாக விளங்கியவர்; பேரா.வானமாமலை. அதன் காரணமாக பல்கலைக்கழகங்களில் இது ஒரு துறையாக வளர்ச்சி அடையத்தொடங்கின. குறிப்பாக மதுரைக் காமராஜர் பல்கலைக்கழகத்தில் அத்துறை மிகவும் சிறப்பாக வளர்த்தெடுக்கப்பட்டது. பேரா.முத்து சண்முகம் போன்றவர்கள் அதில் முக்கிய பங்காற்றினார்கள். இந்தப் பின்னனியில்தான் நாட்டார்வழக்காறுகளை ஆய்வுசெய்யும் மாணவனாக அப்பல்கலைக்கழகத்தில் சேர்ந்து கொண்டவர் கே.ஏ.ஜி. அவர்கள். நாட்டார் மரபில் இருக்கக்கூடிய ஆட்ட நுணுக்கங்களையும் இசைக்கூறுகளையும் தன்னுடைய ஆய்வுப்பொருளாக எடுத்துக்கொண்டார். அதையே தன்னுடைய வாழ்க்கையினுடைய செயற்பாடக செய்யத்தொடங்கினார். மதுரைக் காமராஜர் பல்கலைக்கழகத்தில் கற்கும் காலத்தில் சைவ சித்தாந்தத்திலும் தனது கற்கையை மேற்கொண்டிருந்து, திறமைச்சித்தி பெற்று தங்கப்பதக்கமும் பெற்றிருந்தார்.
1970களில் இந்தியாவில் பல்வேறு அரசியல் இயக்கங்கள் உருவாகின. வெகுசனங்கள் மத்தியில் நாட்டார் பாடல்களை பாடுவது என்பது 1980களில் மிகவும் வீரியத்துடன் தென்இந்திய சமூகத்தில் வெளிப்பட்டது. இச்செயல்பாட்டில் முக்கியமானவராக இருந்தவர் கே.ஏ.ஜீ அவர்கள். அக்காலத்தில் ஒரு சிங்கம் போல் தன்னை முன்நிலைப்படுத்திக் கொண்டார். அவரை முன்வைத்தே பல இயக்கங்கள் மக்கள் மத்தில் சென்றடைந்தன. அவர் இக்கட்சி என்று தன்னை பச்சைகுத்திக் கொள்ளவில்லை என்றாலும் பலகட்சிகள் அவரை தன்கட்சிக்குள் இணைத்துக்கொண்டது. தமிழ்நாட்டில் பல முற்போக்கு இயக்கங்களுடன் நாட்டார் பாடல்களை மேடையில் பாடி அக்கலையை வளர்த்துவிட்டது என்பது அவருடைய மிகப்பெரிய பங்களிப்பாக இருந்தது. இன்றளவும் அதனையே பலர் வியந்து பேசுகின்றனர்.
1980களில் அவர் வீரியமாக பயனிக்கத் தொடங்கியவர். தொடர்ந்து தமிழ்நாட்டு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், தமிழ்நாட்டு கலை இலக்கிய பெருமன்றம், மக்கள் கலை இலக்கிய கழகம் ஆகிய இடது சாரி அமைப்புக்களின் பல்வேறு மேடைகளில் நாட்டார் கலை இலக்கிய மரபு சார்ந்த அரசியல் கொள்கை பரப்பு பாடகராக இயங்கினார்.
1990களில் அவர் தன்னை வேறு ஒரு தளத்திற்கு பரிணமித்துக் கொண்டார். 1990களில் இந்திய அரசியல்போக்கில் அம்பேத்கார் நுற்றாண்டு விழா எங்கும் கொண்டாடப்பட்ட பொழுது தலித் எழுச்சி இந்திய சமூகத்தில் உருவானது. அதன் போக்கு தமிழச்சமூகத்திலும் உருவானது. அதன் முகமாக ஒடுக்கப்பட்ட மக்களின் பாடல்களை பாடத்தொடங்கினர். இவ்வாறு பாடத்தொடங்கியவர் தனக்கென ஒரு இசைக்குழுவை தொடங்கினார், ‘தன்னானே’ என்று பெயரிட்டு. பல்வேறு ஒலிப்பேழைகளை உருவாக்கி வெளியிட்டார். அதனை தமிழ் மரபில் பலதரப்பினர் பாரட்டினர். கவிஞர் இன்குலாப் எழுதிய மனுசங்கடா என்னும் பாடல் முக்கியமானதாகும். அது ஒடுக்கப்பட்ட மக்களின் பாடலாக அமைந்திருந்தது. இதுவே தமிழ்ச்சமூகத்திற்கு அவர் விட்டுச்சென்ற கொடை என்று குறிப்பிடவேண்டும்.
தவில், நாதஸ்வரம், உடுக்கை உள்ளிட்டப் பாரம்பரிய இசைக்கருவிகளை இவரின் குழுவினர் அதிர விட்டால் அதைக்கேட்க மக்கள் கூட்டம் அலைமோதும். அரங்கத்தில் இருக்கும் ஒட்டுமொத்தக் கூட்டத்தையும் வசியப்படுத்தும் வலிமை இவரின் குரலுக்கு உண்டு. தலித் அரங்கவியல் என்னும் கோட்பாட்டை உருவாக்கியதில் பெரும்பங்காற்றியவர்.
குணசேகரன் ஐயா முதன்முதலில் பணியமர்த்தப்பட்டது பழங்குடி ஆய்வு மையத்தில். அதனால் ஊட்டிக்கு சென்றார். அங்கு பழங்குடியினரிடையே காணப்டும் கலை வடிவங்களை கண்டுபிடிப்பதில் ஆர்வம் காட்டினார். பழங்குடி மக்களின் ஆட்டமும் கூத்தும் என்று புத்தகத்திற்கான தகவலை ஊட்டியில்தான் சேகரித்தார்.
1977இல் காந்திக்கிராமத்தில் தேசிய நாடகப்பள்ளியினால் நடைபெற்ற நாடகப்பயிற்சிப்பட்டறையில் கலந்து கொண்டு, அப்பயிற்சியின் நிறைவாக தயாரிக்கப்பட்ட ‘பிணந்தின்னும் சாத்திரங்கள்’ நாடகத்தின் இசையமமைப்பாளராக தன்னுடைய நாடகப்பயணத்தை ஆரம்பித்தார். தொடர்ந்து புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் நாடகத்துறை தலைவராகச் செயற்படத்தெடங்கினார். பின் பல்வேறு தளங்களில் தன்னுடைய பார்வையை விரிவுபடுத்தினார். அதனால் நாடக இயக்குனராகவும் நாடக நடிகராகவும் சினிமாத்துறை நடிகராகவும் தன்னுடைய தளங்களை பெரிதுபடுத்திக் கொண்டு சென்றார்.
பல நாடகங்களையும் எழதியுள்ளார். ’சத்திய சோதனை’ ‘அறிகுறி’ ‘தொடு’ ’மாற்றம்’ ‘விருட்சம்’ ‘பலியாடுகள்’ உட்பட 12 நாடகங்களை எழுதியுள்ளார். ‘பலியாடுகள்’ நாடகம் புதுச்சேரி பல்கலைக்கழக தமிழ்த்துறையின் பாடத்திட்டத்திலும், காஞ்சிமாமுனிவர் பட்டமேற்படிப்பு பாடத்திலும் இடம்பெற்றிருக்கின்றது. சத்தியசோதனை என்ற நாடகம் புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியின் முதுகலைப் பாடத்திட்டத்தில் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.
கருத்தியில் ரீதியில் இவருடைய தளம் என்ன என்பதை புரிந்து கொண்டு அவருடன் பழகுவதை என்னுடைய வாழ்க்கையில் கிடைத்த அரியவாய்ப்பு என்று கருதுகின்றேன். அதனால் அவருடைய பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளை சொல்லச் சொல்ல எழுதியும் அதனை பின்னர் கணினி மயப்படுத்தும் செயற்பாட்டிலும் அவருக்கு உறுதுணையாக இருந்திருக்கின்றேன்.
அதன்பின் அவர் சுகவீனமாக வைத்தியசாலையில் பல தடைவ சென்றபோது அவருடன் சென்று அவரை கவனிக்கும் கைங்கரியங்களை செய்துவந்தேன். அவ்வாறான வேளைகளில் தன்னுடைய வாழ்க்கையில் பல முக்கியமான விடயங்களை என்னுடன் பகிர்ந்திருந்தார்.
சிவகங்கை மாவட்டம் இளையாங்குடியைச் சேர்ந்தவர் குணசேகரன் அவர்கள், கல்வி கற்றது முஸ்லிம் பாடசாலையில். அதனால் இஸ்லாமியத்தில் உள்ள முக்கிய விடயங்கள் பற்றிய தெளிவு அவருக்கு இருந்தது. கல்வி கற்கும் காலத்தில் அவர் இசைப்போட்டிகளில் பங்கு பெற்று பாராட்டுக்கள் பல பெற்றவர்.
அவர் பௌத்தமதம் கூறும் தத்துவங்களை மிகவும் ஆழமாக கடைப்பிடித்தவர். புத்தனின் கொள்கையில் ஈடுபட்டு அதனைப்பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டவர். சங்க இலக்கியங்களை ஆழமாக ஆராய்ச்சிக்கு உட்படுத்தியிருந்தவர். அவரின் ‘பதிற்றுப்பத்து’ உரை அதற்குச்சான்று. ‘உரையாசிரியர்களான பரிமேழழகர் போன்ற உரையாசிரியர் தன்மையில் வைத்து அவரை நோக்க வேண்டும்இ அத்துடன் ஏனையவர்கள் கற்பது குறைந்துவிட்டது, ஆனால் அவர் கற்பதிலும் புதிய விடயங்களை ஆராய்வதிலும் மிகுந்த ஆர்வமுடையவர்’ என்று பேரா.இராமானுஜம் அவர்கள் குறிப்பிடுவார்.
அவர் இறுதியாக பலியாடுகள் என்னும் நாடகத்தை 2015 ஆம் ஆண்டு இயக்கியிருந்தார். அந்த இயக்கத்தில் மிகவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன்.
ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்ததால் தாம்பெற்ற அடிகளையும் வலியையும் ’வடு’ என்கிற நாவலின் மூலம் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்.
பேரா.கரு.அழ.குணசேகரன், நாடகம், நாட்டுப்புற இலக்கியம், நாட்டுப்புற இசை, நவீன நாடகம், தமிழ் இலக்கியம் என பரந்துபட்டு செயல்பட்டவர். பல்வேறு தலைப்புகளில் 30 நூல்களை இவர் எழுதியுள்ளார். மற்றவர்களுடன் இணைந்து 10 நூல்களை எழுதியுள்ளார். இவரால் தொகுக்கப்பட்ட புத்தகங்களின் எண்ணிக்கை 30 ஆகும். மொத்தமாக 60 நூல்களை இவர் பதிப்பித்துள்ளார். தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றவர் பேரா.கரு.அழ.குணசேகரன்.
சுகவீனமுற்று வைத்திய சாலையில் அனுமதிக்கப்டிருந்த காலத்தில் அவரை எனது தந்தையைப்போல் கவனித்திருந்தேன். அச்சேவை செய்ததை எண்ணி பெருமிதம் கொள்கின்றேன். என்னை அவர் தனது சொந்த மகன் என்ற நிலையிலேயே அறவனைத்திருந்தார். அதற்காக எனது நாடகத்துறையில் பல்வேறு இன்னல்களை முகம் கொடுத்திருந்தேன்.
கல்வியே அருமக்கள் கண்ணாகும் என்பதற்கேற்ப இறுதி மூச்சு வரை கற்றலிலும் கற்பித்தலிலும் ஈடுபட்டவர். கே.ஏ.ஜீயின் மறைவு தமிழ் கூறும் நல்லுலகிற்கு மிகப்பெரும் இழப்பு. இன, மத, மொழி கடந்த அன்பை நேசித்தவர். மனிதத்தை நேசித்தவர். அதனால் உலகில் பல பாகங்களில் உறவுகளை சம்பாதித்தார்

Tuesday, 2 February 2016

காற்றில் கலந்த கலகக்குரல் இரா.காமராசு

காற்றில் கலந்த கலகக்குரல்
இரா.காமராசு
கே.ஏ.ஜி என அறியப்பட்ட டாக்டர் கே.ஏ.குணசேகரன் (12.05.1955) சிவகங்கை மாவட்டம், இளையான்குடிக்கு அருகில் மாரந்தை என்னும் சிற்றூரில் பிறந்தவர். தாத்தா மாரந்தை கருப்பன் நாடகக் கலைஞர். தந்தை அழகர் பள்ளி ஆசிரியர். தாய் பாக்கியவதி எட்டாம் வகுப்பு வரைப் படித்தவர். இந்தப் பின்னனி இருந்தும் சாதியும், வறுமையும் துரத்திய வாழ்வு அவருடையது.
“என் இளைமைக்காலம் இஸ்லாமிய மக்களோடு தொடர்புடையது. அவர்கள் மிகுதியாக வாழும் இளையான்குடியில் இல்லாத சாதி வேற்றுமை அதன் இரண்டு கிலோமீட்டர் சுற்று வட்டாரக் கிராமங்களில் விளங்கியதை என் பள்ளி நாள்களில் உணர்ந்தேன். கிராமங்களில் வாழும் சாதி இந்துக்கள் சொல்லிவைத்தாற் போல் கடைப்பிடித்துவரும் தீண்டாமையின் கொடுமைகளைத் தினுசு தினுசாக அனுபவித்த என் இளைமைக்கால வாழ்க்கையை அசைபோட்டேன். “வடு” உருவானது. நான் அனுபவித்த தீண்டாமைக் கொடுமைகளை எழுதிய போதே பல நேரம் எனக்குள் ஆத்திரம் பொங்கியது, சில நேரம் கண்ணீர் மல்கியது. பல சம்பவங்களை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் என் நண்பர்களிடம் எவ்வாறு சொன்னேனோ அதைப்போலவே எழுத்திலும் விவரித்துள்ளேன்.” என தன் “வடு” தன் வரலாறு முன்னுரையில் கே.ஏ.ஜி. கூறுவார்.
இளமையும் ஈடுபாடும்
அவரின் தாயார் சினிமாக் கொட்டகையில் டிக்கட் கிழித்து, விறகு வெட்டி விற்று, புல்லறுத்து அவரையும் குடும்பத்தையும் காப்பாற்றியது, காலை வேளைகளில் ஊறவைத்த புளியங்கொட்டைகளைத் தின்று பசியாறியது, வயலிலிருந்து நண்டு, நத்தைப் பிடித்துச் சாப்பிட்டது போன்றவற்றை அவர் சொல்லும் போது கழிவிரக்கம் கோராத அவரின் - சமூகத்தின் வாழ்க்கையைப் பதிவு செய்வார்.
கே.ஏ.ஜி யின் வாழ்க்கை போராட்டங்கள் நிரம்பியது. அடிப்படையில் சாதி சமூகமாக உள்ள தமிழ்ச் சமூகத்தில், அவர் தன்னை இன்குலாப் வார்த்தைகளில் “உன்னப் போல அவனப் போல எட்டுச்சாணு உசரமுள்ள மனுசனாக” நிலை நிறுத்திடக் காலமெல்லாம் கடுமையாக உழைத்தார்.
கல்லூரிக் கல்வி வரை கற்றலில் சுமாரான மாணவராகவே அவர் வளர்ந்தார். இளம் பருவம் முதலே இசையிலும், கலையிலும் மிக்க ஈடுபாடு கொண்டிருந்தார். பாடுவதும், நடிப்பதும் அவருக்கு இயல்பிலேயே அமைந்தது.
எம்.ஏ., படிச்ச பிறகு பி.எச்டிக்காக கிராமிய கலையை எடுத்துக்கிட்டேன். கிராமத்துக்கு கிராமம் சுத்தி கிராமியப் பாடல்களை சேகரிக்க ஆரம்பிச்சேன். அவுக பாடல்கள்ல சிறுசிறு பிரச்சனைகள் - கூலி கொடுக்காததைப் பத்தி சிதறல்களாய் வெளிவரும். கஞ்சிக்குப் படுற கஷ்டமெல்லாம் பாட்டுல சொல்லியிருப்பாங்க. இப்படி எம்.ஏ., படிச்சது, நாடகப்பட்டறையில் இசை அமைச்சது, கிராமியத்துறை ஆராய்ச்சி. இவைகள் என்னை மெல்ல மெல்ல கிராமிய இசைத்துறையில் இறுகக்கட்டிவிட்டது. (நடப்பு, ஜீலை 84, நேர்காணல் பா.செல்வபாண்டியன்) எனத் தான் நாட்டுப்புற இசைத்துறையில் கால் பரவியதை கே.ஏ.ஜி. குறிப்பிடுவார்.
உலகெங்கிலும் உழைக்கும் மக்களின் நாட்டுப்புற இலக்கிய கலை, இசை வடிவங்களை கையிலெடுத்தவர்கள் இடதுசாரிகளே. தமிழ்நாட்டில் பேராசிரியர் நா.வானமாமலை நாட்டார் பாடல் சேகரிப்பு, கதை சேகரிப்பு, ஆய்வு எனத் தொடங்கி நாட்டார் வழக்காற்றியலைக் கல்விப் புல வட்டாரத்தில் நிலை நிறுத்தினார். பின்னர் அவரின் சிந்தனைப் பள்ளியைச் சேர்ந்தவர்கள் சமூகவியல், வரலாற்றியல், மானிடவியல் புலங்களோடு சேர்ந்தப் பல்துறைக் கூட்டாய்வுகளை முன்னெடுத்தனர்.
அத்தருணத்தில் நாட்டுப்புறப் பாடல் சேகரிப்பு, பதிவு செய்தல், நூல்கள், ஒலி நாடக்கள் வெளியீடு என்ற தளத்துக்கு நகர்ந்தது, இளையராஜா வருகையால் திரைப்படத்திலும் செல்வாக்குப்பெறத் தொடங்கியது. வெகுமக்களை ஈர்க்கும் நாட்டுபுற இசை வடிவங்களை காதல், பக்தி, நகைச்சுவை ஆகிய தளங்களில் பலர் மேடைப்படுத்தினர். நடை, உடை, பாவனைகளால் செவ்வியல் தழுவி நின்றனர். ‘பொழுதுபோக்கு’ வணிகப் பண்டமாக நாட்டாரிசை நகர்ந்தது. இத் தருணத்தில் தான் கே.ஏ.ஜி அசலான நாட்டுப்புற மக்களின் வாழ்வையும் வலிகளையும் தன் குரல்களில் ஏந்தி வந்தார். த.மு.எ.ச, பு.ப.இ, த.க.இ.பெ, ம.க.இ.க போன்ற இடதுசாரிப் பண்பாட்டு அமைப்புகளோடு தொடர்பிலிருந்தார். சாதி, வர்க்கம் இரண்டின் கோரமுகங்களையும் தன் மேடைகளில் தோலுரித்தார்.
மக்களிசைக் கலைஞர்
கே.ஏ.ஜி பல தளங்களில் செயல்பட்டாலும் அவரை இன்னமும் மக்கள் மனங்களில் நிலை பெறச் செய்திருப்பது அவரது கிராமியக் குரலே என்றால் அது மிகையல்ல. அவரது குரல் ஆடம்பரமற்றது. கேட்போரை ஈர்த்து தன் வசமாக்கும் வசீகரம் அவரின் குரலுக்கிருந்தது. சோகம், கழிவிரக்கம், கருணை, பச்சாதாபம் கொண்டு மனமுருகிடச் செய்வது மட்டுமல்ல வீரவேசத்தோடு தன் மரியாதைப் பீறிடச் செய்யவும் போர்க்கள முனையில் நிறுத்தவும் அவரின் பாடல்களால் சாத்தியமானது. அவர் உருவாக்கிய ‘தன்னானே’ கலைக்குழு தமிழ் கூறும் நல்லுலகம் முழுவதும் வலம் வந்தது. தொடக்கத்தில் பல இடங்களில் டிக்கெட் போட்டு நிகழ்ச்சி நடந்ததும் உண்டு. பல அயல்நாடுகளுக்கும் அது சென்றது. கொல்லங்குடி கருப்பாயி, கோட்டைச்சாமி ஆறுமுகம் போன்றக் கலைஞர்களைப் பரவலான கவனம் பெறச் செய்தவரும் அவரே. கங்கைபாலன், அழகர்சாமி வாத்தியார் போன்றவர்களும் அக்குழுவில் இடம் பெற்றனர். இன்று பிரபல நாட்டாரிசைக் கலைஞராக விளங்கும் கலைமாமணி சின்னப்பொண்ணு-வை அறிமுகப்படுத்தி வளர்த்தெடுத்தவரும் கே.ஏ.ஜி. தான். காஞ்சி அண்ணாசி, கலைமாமணி கைலாசமூர்த்தி, சத்தியபாலன், கலைச்செல்வி, கரகாட்டம் அம்மச்சி போன்ற கலைஞர்கள் அவர் குழுவில் பெருமை சேர்த்தனர்.
நாட்டார் பாடல்களை அதன் மெட்டை எடுத்து அதன் உள்ளடக்கத்தை சமூகம் சார்ந்து மாற்றி அமைத்து அவர் உருவாக்கியப் பாடல்கலள் மக்களிடம் மிகுந்த செல்வாக்கைப் பெற்றன. இன்குலாப், பரிணாமன், கந்தர்வன், தலித்சுப்பையா ஆகியோர் பாடல்களோடு அவரும் பாட்டுக் கட்டிப் பாடினார்.
“அய்யா வந்தனமுன்னா வந்தனம்
வந்த சனமெல்லாம் குந்தனும்”  
  எனத் தொடங்கி பறையும், தவிலும், உருமியும், உடுக்கையும், நாயனமும் அதிர இசைக்கும் அவரது மேடைத் தொடக்கம் அபாரமானது. சாப்பறையாக இருந்த பறையிசையை போர்பறையாக மாற்றியதில் கே.ஏ.ஜி க்கு பெரும்பங்குண்டு. தஞ்சாவூர் ரெட்டிப்பாளையம் ரங்கராஜன் குழுவினரை அயல்நாடுகளுக்கெல்லாம் அறிமுகம் செய்தவர் அவரே. கலை நிகழ்வுகளிலும், பொது நிகழ்வுகளிலும் பறையிசை  ‘மங்கள’ இசைத் தொடக்கமாக மாறியதும் அவரின் வருகையோடுதான். நாட்டுப்புறக் கலைஞர்கள் குறிப்பாக கரகம், குறவன் - குறத்தி, பறையாட்டம் முதலிய ஆட்டக்காரர்கள் அரை, குறை கவர்ச்சி ஆடைகளில் மேடையில் தோன்றுவர். இதனை மாற்றியமைத்தவர் கே.ஏ.ஜிக்கு முக்கியப் பங்குண்டு.
“முக்காமொழம் நெல்லுப்பயிரு
முப்பதுகெஜம் தண்ணிக்கெணறு
நிக்காமத்தான் தண்ணியெடுத்தேன்
நெல்லுப் பயிரும் கருகிப்போச்சு….”

“ஏழஞ்சு வருசமாக என்னத்தக் கண்டோம்
ஏருபுடுச்சு பாடுபட்டு எதத்தாங் கண்டோம்”

“அம்மா பாவாடை சட்டைக்கிழுஞ்சு போச்சுதே
பள்ளிக் கூடப் புள்ளயெல்லாம் கேலி பேசுதே”

“மக்கள் வாழும் மண்ணகம்
சூரிய சந்திர விண்ணகம்
அணுயுத்தம் நம்மை அழிப்பதா
பூமியின் கர்ப்பகம் கலைப்பதா?”

“வெள்ளக்காரங்க ஆண்டபோதும்  அரிசனங்க நாம் - இப்ப
டெல்லிக்காரங்க ஆளும் போதும் அரிசனங்க நாம் - இவங்கள
கூண்டோட ஒழிச்சாதான் அரிசனங்க நாம்…”

“தொட்டாலே தீட்டுப்படுமாம் - நாங்க
தொடாத பொருள் எதுவாம்
பார்த்தாலே பாவதோசமாம் - நாங்க
பார்க்காத காட்சி எதுவாம்…”

“பத்துதல இராவணன் ஒத்த தல ராமன் வென்றான்
மொத்தத்துல வீரம் வேணும் சுடலைமாடா”

“ஒத்தமாடு செத்துப் போச்சு
ஒத்தமாடு நோஞ்சலாச்சு
ஒத்தமாடு வாங்கிவரப் பத்துப் பேர
கேட்டுப் பார்த்தேன் கடன் கிடைக்கலியே”
இப்படி அவரின் கோபம் கொப்பளிக்கும் சமூக அவலங்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழச் செய்யவும் பாடல்கள் ஏராளம்.
‘ஆக்காட்டி ஆக்காட்டி எங்கெங்கே முட்டையிட்ட…’, ‘வாகான ஆலமரம் விழுது பதினாயிரம் கோடி பொறும்’ போன்ற அழகியலும், குறியீட்டுணர்வும் அமைந்த பாடல்களும் அவரை அடையாளப்படுத்தும்.
மேடையில் ஒரு வித எள்ளளும், பகடியும் அவருக்கு உடன் வருவன. “காருபோட்டு ஓடி வந்து கையெடுத்து, சலாம் போட்டு ஓட்டு கேட்டு வந்தாங்களே இப்ப ஒருத்தனையும் காணலயே”,  ‘விதவிதமா மீசை வச்சே….. உன் வீரத்தை எங்க வச்சே….’ ‘சின்னஞ் சிறுசெல்லாம் சிகரெட் பிடிக்குது…. சித்தப்பன்மார்ட்ட தீப்பெட்டி கேட்குது’. கணவன் மனைவி சண்டையில் பெண், எடுத்தாடி வௌக்கமாத்த…. என்பது போன்றப் பாடல்கள் அந்த இரகம்.
  இன்குலாப்பின் மனுசங்கடா பாடல் அவரின் உச்சம். ‘நாங்க எரியும் போது எவன் மசிறப்புடுங்கப் போனிங்க….? என்று கேட்பதானாலும், அந்தப் பாடலின் இசையும், கம்பீரமும் ஆயிரமாண்டு அடிமைத்தனத்துக்கு அவர் வைத்த பெருந்தீயாக பிரவகித்து நிற்கும். தோழர் சி.மகேந்திரன் முன்னெடுப்பில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் வெளியிட்ட ‘தன்னானே’, எழுத்தாளர் பொன்னீலன் முன்னெடுப்பில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் வெளியிட்ட ‘மண்ணின் பாடல்கள்’, மற்றும் ‘மனுசங்கடா’ ஆகியப் பாடல் ஒலிப்பேழைகளும், ‘அக்னிஸ்வரங்கள்’, ‘தொட்டில் தொடங்கி தொடு வானம் வரை’ ஆகிய பாடல் தொகுப்பு நூல்களும் தமிழ்ச் சமூகத்தின் கழிந்த ஐம்பது ஆண்டு கால மாற்றுக் கருத்தியல் கலை வடிவங்களாக எஞ்சி நிற்கின்றன. சமூக மாற்றத்திற்குக் கலைகளின் பங்களிப்புக்கு ஆக்கச் சிறந்த சான்றுகளாக இவை அமையும்.
மாற்று நாடக அரங்கம்
1979 ல் காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் தேசிய நாடகப்பள்ளி சார்பில் நடைபெற்ற நாடகப் பட்டறையில் கே.ஏ.ஜி பங்கேற்கிறார். நடிக்கவும், பாடவும் ஆர்வங்கொண்ட அவருக்கு இது பெரும் ஊக்குவிப்பாக அமைந்தது. அப்பட்டறையில் இரண்டு நாடகங்களுக்கு இசை அமைத்து, பாடி, நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கிறது. இயக்குநர் பன்சிகௌல் போன்றவர்கள் தன்னைப் பாராட்டியதாக அவர் நினைவு கூர்வார். அதன் தொடர்ச்சியாக அவர் நாடகத்துறையில் நுழைகிறார். பணி நிலையில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் நீலகிரி - பழங்குடி மக்கள் ஆய்வு மையத்தில் ஆய்வாளராக இருந்தவர் நாடகத்துறைக்கு மாறுகிறார். பின்னர் புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தின் நிகழ்த்துக்கலைத் துறைக்கு இடம் பெயர்கிறார். பேராசிரியர் சே.இராமனுஜம் போன்றவர்களின் வழிகாட்டல் அவருக்குக் கிடைக்கிறது.
நாட்டுப்புற நிகழ்த்துக் கலைகள், கூத்து மரபிலிருந்து நாடக அரங்கம் குறித்த வளர்நிலைகள் குறித்து ஆய்வுரைகள் எழுதுகிறார். கூத்துமரபு, நடிப்பு, ஒப்பனை, காட்சியமைப்பு, திரைச்சீலை, மேடையமைப்பு, ஒலி - ஒளியமைப்பு, இசை, நாடக எழுத்து… இவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பான ‘நாடக அரங்கம்’ அடிப்படைப் பாடநூல் போன்றது. இதோடு இணைத்துப் பார்க்கத் தக்க இன்னொரு நூல் ‘பயன்பாட்டுத் தளங்களில் பழந்தமிழர் கலைகள்’ என்பதாகும். கலைகளின் சமூக உறவுகள் குறித்த இந்நூல் பேசும். தலித் அரங்கியல், ஒடுக்கப்பட்டோர் அரங்கியல் ஆகிய நூல்கள் மாற்று அரங்கம், மூன்றாம் அரங்கம், மக்கள் அரங்கம் ஆகியவற்றின் தொடர்ச்சியான ‘தலித் அரங்கம்’ பற்றிய நூல்கள்.
1980 களின் இறுதியில் அம்பேத்கரின் நூற்றாண்டையொட்டி உருவான தலித் எழுச்சியின் விளைவாக உருவான தலித் அரசியல் ஆகிய முன்னெடுப்பில் கே.ஏ.ஜி. தன்னை இணைத்துக் கொண்டார். அவரின் ‘பலி ஆடுகள்’ நாடகம் முதல் தமிழ் தலித்நாடகம் எனவும், அவரின் ‘வடு’ முதல் தமிழ் தலித் தன் வரலாறு எனவும் அறியப்படும் சிறப்பைப் பெறுகின்றன.
நாட்டார் இசையைப் போலவே நாடகங்களிலும் மக்கள் சார்பையே முன் நிறுத்தினார். சாதி, தீண்டாமை, பெண், அரவாணி, வறுமை, கல்வி, மரபு சார்ந்த சிக்கல்களையே அவரின் நாடகங்கள் பேசின. அவற்றையும் தன் வாழ்விலிருந்தும், சூழலிலிருந்துமே கே.ஏ.ஜி உருவாக்கினார்.
இசுவு வந்து வாயில் நுரைதள்ளி விழுந்தவனுக்கு உதவி செய்து காப்பாற்றிய மச்சான் முனியாண்டியை ‘பரப்பய என்னைய ஏண்டா தொட்டுத் தூக்குன?’ என்று கேட்டுப் பஞ்சாயத்துக் கூட்டி, விழுந்து கும்பிடச் செய்யும் ஒரு நிகழ்வை தன் ‘வடு’ நூலில் கே.ஏ.ஜி குறிப்பிடுவார். இது தான் அவரின் ‘தொடு’ நாடகமாக அரங்கேறியது.
பவளக்கொடி அல்லது குடும்பவழக்கு, சத்திய சோதனை, கந்தன் X வள்ளி ஆகிய நாடகங்கள் தொன்மங்களை மறுவாசிப்புச் செய்தவை.
மழி, மாற்றம், பேயோட்டம், அறிகுறி, வரைவு கடாவுதல்…. உள்ளிட்ட 18 க்கும் மேற்பட்ட நாடகங்களை அவர் படைத்துள்ளார். இவை பல பல்கலைக்கழகங்களில் பாடநூல்களாக உள்ளன.
“திரு.கே.ஏ.குணசேகரன் நாடகக் கலை பற்றி என்னிடம் பாடம்கேட்ட சீடர்களில் ஒருவர். இனியவர், சுறுசுறுப்பானவர், கலைஞர், நாட்டுப்புற ஆட்டக் கலையில் பயிற்சியும் திறனும் மிக்கவர், இசைக்கலைத் திறன் மிக்கவர், தேடல் நோக்கமுள்ளவர். எல்லாவற்றிற்கும் மேலாக கபடமில்லை உள்ளத்தைக் கொண்டவர்” என்ற நாடகப் பேராசான் சே.இராமானுஜத்தின் வார்த்தைகள் கே.ஏ.ஜி யை மதிப்பிட உதவும்.
நாட்டாரியல் ஆய்வகள்
நிகழ்த்துக்கலைகள், நாட்டார் பண்பாடு, பழங்குடிகள் வாழ்க்கை ஆகியன குறித்த கே.ஏ.ஜி எழுதிய நூல்கள் முக்கியமானவை. நாட்டுப்புற இசைக்கலை, கரகாட்டம், நாட்டுப்புற மண்ணும் மக்களும், நாட்டுப்புற நடனங்களும் பாடல்களும், நாட்டுப்புற நிகழ்கலைகள், தமிழக மலையின மக்கள், நகர்சார் நாட்டுப்புறக் கதைப்பாடல்கள், தமிழ் மன்னரின் மரபுக்கலைகள், சேரிப்புறவியல், இசை நாடக மரபு, பயன்பாட்டுத் தளங்களில் பழந்தமிழர் கலைகள், இசைமொழியும் இளையராஜாவும் முதலிய நூல்கள் தனித்துவமானவை.
இவை மாற்றுப்பண்பாடு குறித்த ஆக்கங்களாகக் கருதத்தக்கவை. கலை - கலைஞர்கள் - வெகு மக்கள் - பண்பாடு என்ற வகையில் முக்கியமானவை. பயன்பாட்டுத் தளத்தில் உருவாக்கப்பட்டவை. நாட்டுப்புற இசை, கலை வடிவங்கள் அவற்றின் சமூகத் தாக்குறவுகள் குறித்து இவற்றில் கே.ஏ.ஜி தனது கருத்தை முன்வைப்பார்.
“நமது நாட்டார் கலை மரபை அதன் ஆன்மாவைச் சிதைக்காது நாம் உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என்பதே அவரது கருத்தாகவுள்ளது. உழைக்கும் மக்களின் நோக்கில் நாட்டார் கலைகளையும், கலைஞர்களையும் அணுகும் நாட்டார் வழக்காற்றியலர்கள் ஒரு சிலரே இன்று உள்ளனர். அவர்களுள் அன்பிற்குரிய நண்பரும் தோழருமான கரு.அழ. குணசேகரனுக்கு ஒரு சிறப்பான இடமுண்டு” என்று பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியனின் மதிப்பீடு மிகச் சரியானது.
அடுத்து கே.ஏ.ஜியின் முக்கியப் பங்களிப்பு பழந்தமிழ் நூல்களுக்குஅவர்எழுதியுள்ள புத்துரைகள். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராகப் பணியேற்றவுடன் அதன் பொருத்தம் கருதி தன் பெயரின் ஆங்கில முதல் எழுத்துக்களை மாற்றி கரு.அழ.குணசேகரன் ஆனார்.
புதிய முயற்சிகள்
பதிற்றுப்பத்துக்கு ஆராய்ச்சிப் புத்துரை எழுதி உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மூலம் வெளியிட்டார். அதில் பாணன், பாடினி, கூத்தர், விறலி, போன்ற கலைஞர்களின் சமூகப் பின்புலத்தை, அரசியல் செல்வாக்காக அழுத்தப்படுத்தினர். நகரும் குடிகள், மிதனவச் சமூகத்தினர் என அடையாளப்படுத்தினார். நியூசெஞ்சரி புத்தக நிறுவனம் வழி பல நூல்களை வெளியிட்ட அவர், இறுதியாக பட்டினப்பாலை மூலமும் ஆராய்ச்சிப் புத்துரை நூலையும் வெளிக் கொணர்ந்தார். இது சமணப் பார்வையில் அமைந்தது. மரபிலக்கியங்யளிலும் தனது ஈடுபாட்டை காட்டும் நோக்கில் இந்நூல்கள் அமைந்தன.
அவரின் இளைமைக்கால வாழ்வைச் சொல்லும் “வடு” பின் காலனிய எழுத்து முறையில் தன் வரலாறாக உள்ளது. தன் பிற்காலக் கருத்தியல் செல்வாக்கு எதுவும் இன்றி அழகாக தன் வாழ்வை தன் சமூகத்தின் ஒரு பகுதி வரலாறாக இதில் பதிவு செய்துள்ளார். திரைப்படத்தில் அவரின் நுழைவு எதிர்ப்பார்த்தக் கவனம் பெறவில்லை. நாசரின் தேவதை, தங்கர்பச்சானின் அழகி போன்றவையும் பிறவும் நல்ல முயற்சிகள். அவரை இன்னும் கூடுதலாக தமிழ்ச் சினிமா பயன்படுத்தியிருக்க வேண்டும். குறிப்பாக அவரின் பாடலகள் வீச்சோடு வந்திருக்க வேண்டும்.
புதுவை அரசின் கலைமாமணி வருது, கனடா தமிழ் இலக்கியச் சங்கத்தின் குரிசில் பட்டம், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் நாட்டார் இசை மேதை விருது உட்பட பல பரிசுகளை, விருதுகளை அவர் பெற்றார்.
  தமிழை முறையாக எழுதவும், ஆங்கிலத்தில் பேச, எழுதவும் நிறைய கடின உழைப்பைச் செலுத்தினார். தான் ஈடுபடும் களங்களில் தன் கால்களை ஊன்றச் செய்ய, தன் அடையாளம் பேண அவரின் முயறிசியும், உழைப்பும் பின்பற்றத்தக்கது. கவிஞர் மீரா, தோழர் எஸ்.ஏ.பெருமாள் போன்றவர்கள் தொடக்கத்தில் உதவியதை நினைவு கூர்வார்.
கல்விப் புலத்தில் போதிய கவனமும், பணி நிலைகளும் அவருக்கு அமைந்தன. அவர் நம்பி ஈடுபட்ட அமைப்புகளும் அவருக்கு தோழமைக்காட்டின. எந்த நிலையிலும் மக்கள் சார்ந்த செயல்பாடுகளில் அவர் சுணங்கியதில்லை. கலைஞர்களுக்கே உரிய பலமும் பலவீனமும் அவருக்கும் இருந்திருக்கலாம்.
நீண்ட நாள் நீரழிவும், சிறுநீரக, இதய அறுவை சிகிச்சைகளும் அவரை அவசரமாய் நம்மிடமிருந்துப் பிரித்துச் சென்றுவிட்டன.
மார்க்சியராக, அம்பேத்கரியராக, தமிழ்த் தேசியராக, மக்கள் கலைஞராக சமூக மாற்றத்தில் அயராது பங்களிப்பு செய்த டாக்டர் கே.ஏ.குணசேகரனின் நினைவுகள் நிலைத்து நிற்கும்.


“குழந்தை உள்ளம் - அதற்குள் கொதிக்கும் அனல்
இளகிய மனம் - அதற்குள் இரும்பான உறுதி
வெட்டப்பட்ட சிறகுகள் - விண்தாண்டிப் பறக்கும் எத்தனம்
எளிமையான பேச்சு - இறுக்கமான கொள்கை”

என ஈழநாடக அறிஞர் சி.மௌனகுரு கே.ஏ.ஜி யின் நினைவைப் போற்றுவார்.
சொந்த வாழ்வின் வலிகளில் இருந்து கற்று, தன் சமூகத்தின் நிலை கண்டு மனம் புழுங்கி, சமூக மாற்றப் போர்க்களத்தில் தன்னை முன்னணி கள நாயகனாக ஒப்பளித்துக் கொண்டவர் கே.ஏ.ஜி. நம் காலத்தில் வாழ்ந்த ஒப்பற்ற மக்கள் கலைஞன் அவர்.